விமர்சனம்
என் ஆளோட செருப்ப காணோம்

என் ஆளோட செருப்ப காணோம்
பக்கோடா பாண்டி, ஆனந்தி ஜெகன்நாத் இஷான்தேவ் சுக செல்வன்
சினிமா விமர்சனம்: என் ஆளோட செருப்ப காணோம் படத்திற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.
Chennai
தமிழும், யோகிபாபுவும் நண்பர்கள். இருவருக்கும் கல்லூரி மாணவி ஆனந்தி மீது காதல். இவர்களுடன் மேலும் சில இளைஞர்களும் ஆனந்தியை விரும்புகிறார்கள். தமிழ் மட்டும் காதலை மனதுக்குள்ளேயே வைத்து இருக்கிறார். பஸ்சில் ஏறும்போது ஆனந்தியின் ஒரு கால் செருப்பு கழன்று கீழே விழுகிறது.

அப்பா வாங்கி கொடுத்த செருப்பு என்பதால் அது தொலைந்த வருத்தம் மனதில் இருக்கிறது. இன்னொரு செருப்பை பஸ்சுக்குள்ளேயே விட்டு விடுகிறார். வீட்டுக்கு திரும்பிய அவருக்கு சிரியாவில், தீவிரவாதிகள் அவரது தந்தையை கடத்திய அதிர்ச்சி தகவல் வருகிறது. குறி சொல்லும் பெண் சாமியாரான தமிழின் தயாரை ஆனந்தி சென்று பார்க்கிறார்.

“தொலைந்த செருப்புகளை மீண்டும் நீ பார்த்தால், உனது தந்தை உயிரோடு வருவார்” என்று ஆனந்தியிடம் அருள்வாக்கு சொல்கிறார், பெண் சாமியார். அந்த செருப்புகளை தமிழ் தேடி அலைகிறார். ஒரு செருப்பை அரசியல்வாதி கே.எஸ்.ரவிகுமாரிடம் இருந்து மீட்கிறார். இன்னொரு செருப்பு குப்பை மேடு, வேன், செருப்பு கடை என்று பயணிக்கிறது. அதை கண்டுபிடித்து காதலியிடம் சேர்த்தாரா? அவருடைய தந்தை காப்பாற்றப்பட்டாரா? என்பது மீதி கதை.
சிறுவனாக பல படங்களில் வந்த பக்கோடா பாண்டி, தமிழ் என்ற பெயரில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம். அப்பாவித்தனமான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு பொருந்தி இருக்கிறார். ஒரு கை முறிந்து கட்டுப்போட்ட நிலையில் காதலி செருப்பை தேடி வீதி வீதியாக அலைவது,

கே.எஸ்.ரவிகுமாரிடம் இருந்து மீட்ட செருப்பை வீட்டில் பத்திரப்படுத்துவது, செருப்பு கடை வைத்திருக்கும் விவிங்ஸ்டனிடம் காதலியின் செருப்பை கண்டுபிடித்து தரும்படி அழுது கெஞ்சுவது என்று காதல் உணர்வுகளை உயிரோட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

கிளைமாக்சில், காதலி கைவிட்டு போய் விடுவாளோ என்ற தவிப்பில் யோகிபாபுவை அடித்து அழுது புலம்பும் காட்சியில், தமிழ் உருக்கமாக நடித்து இருக்கிறார். ஆனந்தி அழகான காதலியாக கவர்கிறார். தந்தை கடத்தப்பட்ட வேதனையையும், செருப்பை தேடும் சென்டிமெண்ட் உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். யோகிபாபு நகைச்சுவை ஏரியாவை கலகலப்பாக வைத்து இருக்கிறார்.

முழு கதையும் செருப்பையே சுற்றி வருவது, நெளிய வைக்கிறது. அதையும் மீறி, ஒரு காதல் கதையை ஜனரஞ்சகமாக சொன்னதில், இயக்குனர் ஜெகன்நாத் வெற்றி பெற்று இருக்கிறார். இசான்தேவ் இசையில், பாடல்கள் மனதை வருடுகின்றன. தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசையும் ஒன்ற வைக்கிறது. சுகசெல்வன் கேமராவில் கனமழை காலத்து குளிர்ச்சி.

முன்னோட்டம்

பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படம் தீபாவளிக்கு முன்பே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: அக்டோபர் 25, 06:08 AM

கைதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 25, 06:06 AM

அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 04, 10:21 PM
மேலும் முன்னோட்டம்