விமர்சனம்
சக்க போடு போடு ராஜா

சக்க போடு போடு ராஜா
சந்தானம், விவேக், வி.டி.வி.கணேஷ், ரோபோ சங்கர் வைபவி ஷான்டில்யா சேதுராமன் சிலம்பரசன் அபிநந்தன் ராமானுஜம்
வில்லனின் தங்கையை காதலிக்கும் கதாநாயகன் "சக்க போடு போடு ராஜா" படத்தின் சினிமா விமர்சனம்.
Chennai
கதையின் கரு:  சென்னை நகரின் மிகப்பெரிய தாதா, சம்பத். இவருக்கு 2 தங்கைகள். மூத்த தங்கை, பாப்ரிகோஷ். இளைய தங்கை, வைபவி சாண்டில்யா. பாப்ரிகோசை, சந்தானத்தின் நண்பர் சேது காதலிக்கிறார். பாப்ரிகோசை சந்தானம் கடத்தி வந்து தனது நண்பர் சேதுவுடன் சேர்த்து வைக்கிறார். சந்தானம் யார், எப்படியிருப்பார்? என்று தெரியாத நிலையில், அவரை போட்டுத்தள்ளுவதற்கு தேடுகிறார், தாதா சம்பத்.

இந்த நிலையில் சந்தானத்துக்கும், சம்பத்தின் இளைய தங்கை வைபவி சாண்டில்யாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரையும் தேடி, சம்பத் பெங்களூருவுக்கு வருகிறார். சந்தானத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டே அவரை தேடி அலைகிறார், சம்பத். சந்தானம் தனது புத்திசாலித்தனத்தால் காதலில் எப்படி வெற்றி பெறுகிறார்? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஜி.எல்.சேதுராமன்.

சந்தானம் தனக்கு பொருந்துகிற மாதிரி கதையை தேர்ந்தெடுத்து சக்க போடு போட்டு இருக்கிறார். சாண்டில்யாவின் காதலை பெற இவர், அவரை கண்டும் காணாதது போல் அலட்சியமாக நடந்து கொள்வதும், தன்னை அலட்சியப்படுத்தும் சந்தானத்தை வைபவி விரட்டி விரட்டி பின்தொடர்வதும், ரசனையான காதல் காட்சிகள். சக கதாநாயகர்களுக்கு இணையாக சந்தானம் அந்தரத்தில் பறந்தும், கயிற்றில் தொங்கிக் கொண்டும் அபாரமாக சண்டை போடுகிறார்.

“பஞ்ச் வசனத்தை பேசிய பின் அடிப்பது, பழைய ஸ்டைல். பேசாமலே அடிப்பது, புது ஸ்டைல்” என்று சந்தானம் ‘பஞ்ச்’ வசனத்தை கிண்டல் செய்யும்போது, தியேட்டரில் கைதட்டுகிறார்கள். விவேக், சம்பத், வி.டி.வி.கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோரை சேர்த்துக் கொண்டு தியேட்டரை இரண்டரை மணி நேரம் கலகலப்பாக வைத்து இருக்கிறார், சந்தானம்.

அவருக்கு ஜோடியாக வரும் வைபவி சாண்டில்யா மிகையான ஒப்பனையுடன் காட்சிக்கு காட்சி மாறுதலாக தெரிகிறார். பாடல் காட்சிகளில் சந்தானத்துடன் அதிக நெருக்கம் காட்டி, சக கதாநாயகிகளுக்கு சவால் விட்டு இருக்கிறார்.

கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில், விவேக் வருகிறார். இவர் வருகிற காட்சிகளில் எல்லாம் தியேட்டரில், ஆரவாரம். வில்லன்கள் சம்பத், சரத் லோகிதஸ்வா ஆகிய இருவரும் பழைய பாணியில் மிரட்டியிருக்கிறார்கள். வி.டி.வி.கணேஷ், ரோபோ சங்கர், பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, சுவாமிநாதன் என ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

எஸ்.டி.ஆர். (சிம்பு) இசையில், “உனக்காக” பாடலும், “வா முனிம்மா” பாடலும் திகட்டாத ராகங்கள். பாடல் காட்சிகளை ரசனையுடன் படமாக்கி இருக்கிறார், ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம். தாதாக்களுக்கும், கதாநாயகனுக்கும் இடையேயான மோதல், புதுசு அல்ல. பல படங்களில் பார்த்து ரசித்ததுதான். அதையே அடுத்தது என்ன? என்ற திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் ஜி.எல்.சேதுராமன்.

முன்னோட்டம்

பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படம் தீபாவளிக்கு முன்பே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: அக்டோபர் 25, 06:08 AM

கைதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 25, 06:06 AM

அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: அக்டோபர் 04, 10:21 PM
மேலும் முன்னோட்டம்