வேலைக்காரன்


வேலைக்காரன்
x
தினத்தந்தி 28 Dec 2017 4:01 PM GMT (Updated: 2017-12-28T21:31:34+05:30)

மெதுவாக விஷமாகும் உணவு பொருள் நிறுவனமும், அதை எதிர்த்து போராடும் இளைஞரும், "வேலைக்காரன்" என்ற படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  சென்னை நகரில் உள்ள குடிசைப்பகுதியான கொலைகாரன் பேட்டையில், தாய்-தந்தையுடன் வசிக்கிறார், சிவகார்த்திகேயன். தனது குடிசையில் ஒரு ரேடியோ நிலையத்தை தொடங்கி, கூலிப்படையாக மாறும் சக குடிசைவாசிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார். கூலிப்படையின் தலைவர் பிரகாஷ்ராஜின் மிரட்டலுக்கு பயந்து, ரேடியோ நிலையத்தை மூடிவிட்டு, உணவு பொருள் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில், சிவகார்த்திகேயன் வேலைக்கு சேருகிறார்.

அங்கு தயாராகும் உணவு பொருட்கள் மெல்ல விஷமாக மாறுவதை அவர் கண்டுபிடிக்கிறார். முதலாளியை எதிர்த்து துணிச்சலுடன் போராடுகிறார். உணவு பொருட்கள் தயாரிக்கும் முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவகார்த்திகேயனை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து சிவகார்த்திகேயன் தப்பினாரா, அவருடைய போராட்டம் என்ன ஆகிறது? என்பது படத்தின் ‘கிளைமாக்ஸ்.’

நகைச்சுவை நாயகனாக இருந்த சிவகார்த்திகேயன், அதிரடி நாயகனாக உயர்ந்து இருக்கிறார். பிரகாஷ்ராஜின் மிரட்டலுக்கு பயந்து பம்மும்போதும், சக குடிசைவாசி இளைஞர்கள் தன் கண் முன்பே கொலைகாரர்களாக மாறுவதை பார்த்து கலங்கும் போதும், மனதில் இடம் பிடிக்கிறார். விஷம் கலந்த உணவை தயாரிக்கும் நிறுவனத்தை எதிர்த்து போராடும் காட்சிகளில், ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார்.

நயன்தாரா, அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்து காணப்படுகிறார். அவருடைய அறிமுக காட்சி, எதையோ சாதிக்கப் போகிறார் என்று எதிர்பார்க்க வைத்து, ஏமாற்றி விட்டது. பாடல் காட்சிகளில், சிவகார்த்திகேயனின் மூக்குடன் மூக்கு உரசி, தியேட்டரை கதகதப்பாக்குகிறார். காதல் காட்சிகளில், ரேஷன் பொருள் மாதிரி கொஞ்சமாக சிரிக்கிறார். கூட்டத்தில் ஒருவராக வந்து போகிறார்.

சினேகாவுக்கு கனமான வேடம். இவருடைய கதாபாத்திரமும், காட்சிகளும் எதிர்பாராத திருப்பங்கள். சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் ஆடம்பரமான வில்லன், பகத் பாசில். கூலிப்படை தலைவனாக பிரகாஷ்ராஜ். இவர் வருகிற காட்சிகளில், பதற்றம் கூடுகிறது.

ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், தம்பி ராமய்யா, விஜய் வசந்த், ரோகிணி, சார்லி, மைம் கோபி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், காளி வெங்கட் என படத்தில் நிறைய நட்சத்திரங்கள். படம் முழுக்க ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பு தெரிகிறது. நள்ளிரவு 12 மணிக்கு அத்தனை வீடுகளிலும் விளக்கு எரியும் காட்சி, பிரமிக்க வைக்கிறது. அனிருத்தின் மென்மையான பின்னணி இசை, காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது.

குடிசைவாசிகளை கூலிப்படையாக மாற்றும் ஒரு தலைவன், அவனை எதிர்த்து குடிசைக்குள் ரேடியோ நிலையம் நடத்தும் கதாநாயகன்...என்று படத்தின் ஆரம்ப காட்சிகள் மூலம் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார், டைரக்டர் மோகன் ராஜா. அந்த பெரிய நிறுவனத்தில் சிவகார்த்திகேயன் வேலைக்கு சேர்ந்த பின், வேகம் குறைந்து விடுகிறது. வசனத்தை குறைத்து, காட்சிகளுக்கு வேகம் கூட்டியிருந்தால், ‘வேலைக்காரன்’ பரபரப்பாக பேசப்பட்டு இருப்பார்.

Next Story