ஸ்கெட்ச்


ஸ்கெட்ச்
x
தினத்தந்தி 16 Jan 2018 5:56 PM GMT (Updated: 16 Jan 2018 5:56 PM GMT)

கதாநாயகனுக்கும், வட சென்னை தாதாக்களுக்கும் இடையே ஏற்படும் மோதல். படத்தின்

கதையின் கரு:  வாகனங்கள் வாங்குவதற்காக வட்டிக்கு கடன் கொடுக்கும் மார்வாடி ஹரீஸ். இவரின் வலது கையாக இருப்பவர், அருள்தாஸ். கோஷ்டி மோதலில், அருள்தாஸ் ஒரு கையை இழக்கிறார். அவருடைய இடத்தை பிடிக்க ஆர்.கே.சுரேஷ் முயற்சிக்கிறார். அருள்தாஸ் தனது மைத்துனர் விக்ரமை அந்த இடத்துக்கு கொண்டு வந்து விடுகிறார். இதனால், விக்ரம் மீது பகையாக இருக்கிறார், ஆர்.கே.சுரேஷ். ஹரீசின் அடியாள் மாதிரி இருக்கிறார், விக்ரம். பணம் கட்டாதவர்களின் வாகனங்களை தூக்குவது, இவர் வேலை. யாருக்கும் பயப்படாமல் துணிச்சலுடன், பணம் கட்டாதவர்களின் வாகனங்களை தூக்குகிறார், விக்ரம்.

அவருக்கும், தமன்னாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. தமன்னாவுக்கு பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளையை நிச்சயிக்கிறார்கள். இந்த நிலையில் மார்வாடி முதலாளி ஹரீஸ், சின்ன வயதில் நடந்த ஒரு அவமரியாதை சம்பவத்தை விக்ரமிடம் கூறுகிறார். தனது அப்பாவின் காரை ஒரு ரவுடி தூக்கியதால் அவமானம் தாங்காமல் அப்பா உயிரை விட்டு விட்டார் என்கிறார், அவர். அந்த காரை விக்ரம் நண்பர்கள் உதவியுடன் மீட்டு, மீண்டும் ஹரீசிடம் ஒப்படைக்கிறார்.

விக்ரமுக்கும், அவருடைய நண்பர்களுக்கும் குறி வைக்கிறார், ரவுடி. இந்த சூழ்நிலையில், விக்ரமின் நண்பர்கள் மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த மூன்று பேரின் கொலைகளுக்கும் காரணம் யார்? என்பது மர்மமாக இருக்கிறது. முடிவு, யாருமே எதிர்பார்க்காத திருப்பம்.

‘ஸ்கெட்ச்’ வேடத்தில், விக்ரம். ஏறக்குறைய ஒரு ரவுடி கதாபாத்திரத்தை கெத்தாக செய்திருக்கிறார். “ஸ்கெட்ச், ஸ்கெட்ச் போட்டால் குறி தப்பவே தப்பாது” என்று கை விரல்களை நீட்டியும் மடக்கியும் காட்டும்போது, விக்ரம் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது. தமன்னாவுடன் காதல், ரவுடிகளுடன் மோதல் என ஒரு அதிரடி நாயகனின் வேலைகளை அபாரமாக செய்து இருக்கிறார், விக்ரம். சண்டை காட்சிகளில் அவருடைய வேகம், வியக்க வைக்கிறது.

கல்லூரி மாணவியாக தமன்னா. தோழியுடன் நடக்கிறார். பஸ்சில் பயணிக்கிறார். விக்ரமுடன் முதலில் மோதுகிறார். பிறகு காதலிக்கிறார். “கடைசி நிமிடம் வரை உனக்காக காத்திருப்பேன். வந்து கூட்டிப்போ” என்று விக்ரமிடம், நம்பிக்கையுடன் கட்டளையிடும் காட்சியில், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறார்.

சூரிக்கு அதிக வேலை இல்லை. மலையாள நடிகர் ஹரீசின் வசன உச்சரிப்புகளில், நிறைய மலையாள வாசனை. வட சென்னை கதை என்பதால், படம் முழுக்க வில்லன்கள் கூட்டம். எஸ்.எஸ்.தமன் இசையில், பாடல்கள் தேறவில்லை. பின்னணி இசை, கதையோட்டத்துக்கு ஒத்துழைத்து இருக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சுகுமார், பளிச்.

வட சென்னை ரவுடிகளின் கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார், டைரக்டர் விஜய் சந்தர். கதையும், காட்சிகளும் ஏற்கனவே பல படங்களில் பார்த்து ரசித்தவை. விக்ரமின் நண்பர்களை கொலை செய்தது அவருடைய எதிரிதான் என்று நம்பவைத்து, ‘கிளைமாக்ஸ்’ வரை அந்த ‘சஸ்பென்ஸ்’சை காப்பாற்றியிருப்பது, டைரக்டரின் திறமை.

Next Story