மதுர வீரன்


மதுர வீரன்
x
தினத்தந்தி 3 Feb 2018 10:47 PM GMT (Updated: 3 Feb 2018 11:01 PM GMT)

ஜல்லிக்கட்டு பின்னணியில் நடக்கும் சண்டை சச்சரவுகளை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் பி.ஜி.முத்தையா. "மதுர வீரன்" படத்தின் சினிமா விமர்சனம்.

ஊர் பெரிய மனிதர் சமுத்திரக்கனி. அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ அக்கறை கொண்டவர். கலப்பின விதை விவசாயம் ஆரோக்கியத்துக்கு கேடு என்று எதிர்க்கிறார். கலெக்டரிடம் அனுமதி பெற்று மூன்று கிராம மக்களை திரட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியையும் நடத்துகிறார். அப்போது சாதி சண்டை ஏற்பட்டு இருவர் கொல்லப்படுகின்றனர்.

சமுத்திரக்கனியையும் ஒரு கும்பல் வழிமறித்து சாகடிக்கிறது. அவரது மகன் சண்முக பாண்டியனை சிறுவயதிலேயே மலேசியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். சண்முக பாண்டியன் வளர்ந்து இளைஞராக ஊர் திரும்புகிறார். தந்தையை கொன்ற கொலையாளியை தேடுகிறார். நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவும் முயற்சிக்கிறார். அது நடந்ததா? கொலையாளியை கண்டு பிடித்தாரா? என்பது மீதி கதை.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள படம். ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்கிறார். சண்டை காட்சிகளில் அப்பாவின் வேகம். தந்தை நடத்திய ஜல்லிக்கட்டு நின்று போன வேதனை, அதை மீண்டும் நடத்த வேண்டும் என்று அரசு அதிகாரிகளை சந்திப்பது, மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று சுறுசுறுப்பாக நடித்து இருக்கிறார். ஜல்லிக்கட்டுக்காக உயிரை கொடுக்க தயார் என்று பஞ்சாயத்தில் ஆவேசப்படும்போது கைதட்ட வைக்கிறார்.

மீனாட்சி, துறுதுறு காதலியாக வருகிறார். சமுத்திரக்கனிக்கு ஊர் ஒற்றுமைக்காக போராடும் வலுவான கதாபாத்திரம். அவர் வரும் காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அவரது முடிவு பரிதாபம். வேலராமமூர்த்தியும், மைம்கோபியும் வில்லன்களாக மிரட்டுகின்றனர். அமைதியாக வரும் பி.எல். தேனப்பனின் இன்னொரு பக்கம் மிரள வைக்கிறது.

பாலசரவணன், நான் கடவுள் ராஜேந்திரன் இருவரும் சிரிக்க வைக்கின்றனர். மாரிமுத்து, ராஜ்குமார் கதாபாத்திரங்களும் கதையுடன் ஒன்ற வைக்கின்றன. திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். ஜல்லிக்கட்டு பின்னணியில் நடக்கும் சண்டை சச்சரவுகளை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் பி.ஜி.முத்தையா. ஜல்லிக்கட்டு போட்டிகளையும் கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கேமரா கண்முன் நிறுத்துகிறது. சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

Next Story