சொல்லிவிடவா


சொல்லிவிடவா
x
தினத்தந்தி 16 Feb 2018 5:12 PM GMT (Updated: 16 Feb 2018 5:12 PM GMT)

கதாநாயகன்-கதாநாயகி: சந்தன் குமார்- ஐஸ்வர்யா அர்ஜுன். டைரக்‌ஷன்: அர்ஜுன். ஆகியோரில், கார்கில் போர் பின்னணியில், ஒரு காதல் படம். "சொல்லிவிடவா" படத்தின் விமர்சனம்.

கதையின் கரு: ஐஸ்வர்யா அர்ஜுன் குழந்தை பருவத்தில் இருந்தபோது நடந்த ஒரு விபத்தில் தனது தாயையும், தந்தையையும் இழந்தவர். தாத்தா கே.விஸ்வநாத் பராமரிப்பில் வாழ்கிறார். அவர் ஒரு தொலைக்காட்சி சேனலில் நிருபராக இருக்கிறார். அவருக்கும், அப்பாவின் தொழிலில் பங்குதாரராக இருந்தவரின் (சுஹாசினியின் கணவர்) மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், இன்னொரு சேனலில் நிருபராக பணிபுரியும் சந்தனுக்கும், கார்கில் யுத்த களத்தை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டு பேரும் கார்கில் போகிறார்கள்.

யுத்த களத்தில், இந்திய வீரர்களின் துணிச்சலையும், தியாகங்களையும் பதிவு செய்யும்போது, சந்தன் மீது ஐஸ்வர்யாவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதை எண்ணி அந்த ஈர்ப்பை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். இதேபோல் ஐஸ்வர்யா மீது சந்தனுக்கும் காதல் வருகிறது. ஐஸ்வர்யா இன்னொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்பதை கருதி, சந்தன் தன் காதலை சொல்ல தயங்குகிறார். அவர்கள் காதல் என்ன ஆகிறது? என்பது மீதி கதை.

ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது படம். முதல் படத்தை காட்டிலும் நடிப்பு, நடனம் இரண்டிலும் தேறியிருக்கிறார். அவர் தாத்தா கே.விஸ்வநாத்திடம் குறும்பாக விளையாடும் ஆரம்ப காட்சியில், படம் பார்ப்பவர்களின் கண்கள் ஈரமாகின்றன. தன் காதலை சொல்லவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் தவிக்கும் காட்சிகளில், அவர் மீது அனுதாபம் வருகிறது. யுத்த களத்தில், சில நிமிடங்கள் காணாமல் போன சந்தனை தேடி அலையும்போது, பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.

சந்தன், ஆறு அடி உயரத்தில், அரும்பு மீசையும் குறும்பு பார்வையும் கலந்த கம்பீரமான நாயகன். ஐஸ்வர்யா மீது அவர் காதல் பார்வையை வீசுவதும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் என்பதை எண்ணி பின் வாங்குவதும், சந்தன் கதாபாத்திரம் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.

சுஹாசினி, பணக்கார குடும்பத்தின் நல்ல மருமகளாகவும், மாமியாராகவும் கதாபாத்திரத்துக்கு கண்ணியம் சேர்க்கிறார். கே.விஸ்வநாத், பாசமுள்ள தாத்தாவாக மனசெல்லாம் நிறைகிறார். அவர் இறந்து போன தனது மகனையும், மருமகளையும் நினைத்து பேத்தி ஐஸ்வர்யாவிடம் உருகும் காட்சிகளில், படம் பார்ப்பவர்களையும் உருக வைக்கிறார்.

கார்கில் போரில் மகனை பறிகொடுத்த தந்தையாக பிரகாஷ்ராஜ். அவரும் கலங்கி, நம்மையும் கலங்க வைக்கிறார். “நாம் என்ன நினைக்கிறோமோ அதை சொல்லிவிட வேண்டும்...தயங்க கூடாது” என்று தழுதழுக்கும்போது, தியேட்டர் முழுவதையும் விம்ம வைத்து விடுகிறார்.

மொட்ட ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு, மனோபாலா ஆகிய காமெடி கூட்டம், ஆரம்ப காட்சிகளில் கலகலப்பூட்டுகிறார்கள். யுத்தகளத்தை இத்தனை பதற்றத்துடன் எந்த படத்திலும் பார்த்ததில்லை என்று சொல்கிற அளவுக்கு ரத்தமும், சதையுமாக படம் பிடித்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபால். ஜாசி கிப்ட் இசையில், பாடல்களில் மென்மையான ராகங்கள். பின்னணி இசை, மிரட்ட வேண்டிய இடத்தில் மிரட்டியிருக்கிறது. உருக வேண்டிய இடத்தில், உருக்கி விடுகிறது. குறிப்பாக அந்த ராணுவ வீரரின் மரண காட்சியில், இதயம் கனத்துப் போய் விடுகிறது.

நடிகர் அர்ஜுன், சிறந்த டைரக்டர் என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கிறார். சிறந்த கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு மலிவான நகைச்சுவை காட்சிகளும், நிறைய பாடல்களும் தேவைதானா?

Next Story