சவரக்கத்தி


சவரக்கத்தி
x
தினத்தந்தி 16 Feb 2018 5:46 PM GMT (Updated: 16 Feb 2018 5:45 PM GMT)

முதல் முறையாக ஒரு சிரிப்பு படத்தில், மிஷ்கின். ராம், சலூன் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பூர்ணா. ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். சவரக்கத்தி படத்தின் விமர்சனம்.

ராம், சலூன் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பூர்ணா. ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மூன்றாவதாக, பூர்ணா நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். அவருடைய ஊனமுற்ற தம்பிக்கு ஒரு பணக்கார பெண்ணுடன் காதல். இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக, கோவிலில் காத்திருக்கிறார்கள்.

அவர்களின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ராம் மனைவி பூர்ணா மற்றும் குழந்தைகளுடன் ‘பைக்’கில் புறப்படுகிறார். வழியில் அவருக்கும், பயங்கரமான தாதா மிஷ்கினுக்கும் தகராறு ஏற்படுகிறது. அதில், மிஷ்கின் வாயில் ரத்தம் வர-தன்னை ராம் அடித்து விட்டதாக கருதுகிறார், மிஷ்கின். ஆத்திரம் அடைகிற அவர், ராமை கொல்வதற்கு துரத்துகிறார்.

ராம் ஓட-மிஷ்கின் துரத்த-பல்வேறு இடங்களில் மிஷ்கினிடம் ராம் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார். இருவருக்குமான மோதலில், யாருக்கு வெற்றி? என்பதே ‘சவரக்கத்தி’யின் கதை. இந்த ‘மெயின்’ கதைக்குள் ராம் மைத்துனரின் காதல், பதிவு திருமணம், அவரை கொலை செய்ய துரத்தும் காதலியின் தந்தை...என மற்றொரு கிளை கதையை புகுத்தியிருக்கிறார்கள்.

டைரக்டர் ராம்தான் கதையின் நாயகன். தாடி-மீசை, சோடாபுட்டி கண்ணாடி சகிதம் ஒப்பனையே இல்லாத இயல்பான ராம், அனுதாபத்துக்குரிய நடுத்தர குடும்ப தலைவராக மனதில் பதிகிறார். அவர், மிஷ்கின் யார் என்று தெரியாமல் அவருடன் வாய் சவடால் விட்டு, தன்னை மிஷ்கின் கொலை செய்ய வருகிறார் என்று தெரிந்ததும் பம்முவதும், உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடுவதும், கதையுடன் ஒன்ற வைக்கும் காட்சிகள்.

பூர்ணா காது கேளாத நிறைமாத கர்ப்பிணியாக படம் முழுக்க அய்யோ பாவமாக தெரிகிறார். அவர் பிரசவ வலி வந்தது போல் நடித்து ஆஸ்பத்திரிக்கு வருவதும், அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்புவதும், ரகளையான காட்சி. அவர் சொந்த குரலில் பேசியிருப்பது, வரவேற்க தக்க அம்சம்தான். ஆனால் வசன உச்சரிப்பு பல இடங்களில் புரியவில்லை.

தடித்த உருவமும், பெரிய கண்களுமாக, ‘மங்கா’ என்ற தாதா கதாபாத்திரத்தில் மிஷ்கின் மிரட்டியிருக்கிறார். ராமை பிடிக்க அவருடைய அடியாள் ‘ஐடியா’ கொடுப்பதும், அந்த ‘ஐடியா’வை கேட்டு மிஷ்கின் தன் அடியாளை உதைப்பதும், ஆரவாரமான ‘காமெடி.’ துணை கதாபாத்திரங்களில் பிரபலமாகாத நடிகர்கள் நிறைய பேர் ஓடி ஓடி உழைத்து இருக்கிறார்கள்.

அரோல் கரோலியின் இசையில், “தங்கத்தில்...” என்ற பாடல், மெலடி ரகம். ஒரு சிரிப்பு படத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது, பின்னணி இசை. வி.ஐ.கார்த்திக்கின் ஒளிப்பதிவு, காட்சிகளை உணர்வுப்பூர்வமாக கடத்துகிறது.

படத்தின் முதல் பாதி வேகமாக பயணிக்கிறது. இடைவேளைக்குப்பின், சில காட்சிகள் மந்தமாக நகர்கின்றன. திருப்பங்கள் இல்லாதது, திரைக்கதையின் பலவீனம். ஒரு அப்பாவி குடும்ப தலைவரை பயங்கரமான தாதா கொலை வெறியுடன் துரத்துவதை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியிருக்கிறார், டைரக்டர் ஜி.ஆர்.ஆதித்யா.

Next Story