கேணி


கேணி
x
தினத்தந்தி 25 Feb 2018 12:20 AM GMT (Updated: 25 Feb 2018 12:20 AM GMT)

ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், ரேகா, ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’.

அரசு உயர் பதவியில் இருக்கிறார், ஜெயப்பிரதாவின் கணவர். அரசியல்வாதிகள் மோசடிக்கு உடன்படாத அவரை பொய் வழக்கில் கைது செய்கிறார்கள். ஜெயப்பிரதாவிடம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டுக்கு போகும்படி சொல்லி விட்டு, சிறைக்குள்ளேயே கணவர் இறந்து போகிறார்.

அப்பாவி இளைஞர் ஒருவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுகின்றனர். அந்த இளைஞரின் மனைவி பார்வதி நம்பியாரை அழைத்துக்கொண்டு கிராமத்துக்கு வருகிறார், ஜெயப்பிரதா. அங்குள்ள மக்கள் குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால், ஜெயப்பிரதா வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் வற்றாத தண்ணீர் இருக்கிறது. குடிநீருக்கு கஷ்டப்படும் மக்களுக்கு தனது கிணற்று தண்ணீரை கொடுக்க முடிவு செய்கிறார், ஜெயப்பிரதா. அப்போது பிரச்சினை ஆரம்பிக்கிறது.

தமிழக, கேரள எல்லை பிரிப்பில் அந்த கிணறு கேரளா பகுதிக்கும், ஜெயப்பிரதாவின் வீடு தமிழக எல்லைக்கும் வந்து விடுகிறது. கிணற்று தண்ணீரை எடுக்க கேரளா தரப்பில் எதிர்ப்பு கிளம்புகிறது. ஜெயப்பிரதா மட்டும் கேரள எல்லைக்குள் அந்த நீரை பயன்படுத்தலாம் என்று உத்தரவு வருகிறது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா போராடுகிறார். அவருக்கு ஆதரவாக கிராமத்து மக்களும் களத்தில் குதிக்கின்றனர். கிணற்றை சுற்றி போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். அவர் கிணற்று தண்ணீரை மீட்டு மக்களுக்கு கொடுத்தாரா? என்பது மீதி கதை.

இந்திரா கதாபாத்திரத்தில் ஜெயப்பிரதா வாழ்ந்து இருக்கிறார். கிணற்றை மீட்க அரசு அலுவலகங்கள், மந்திரி வீடு என்று அலைந்து காத்து கிடப்பதிலும், அதிகாரிகளால் உதாசினப்படுத்தப்படுவதிலும், அனுதாபப்பட வைக்கிறார். வறண்ட பூமியில், தண்ணீருக்கு அலையும் பொதுமக்களின் நிலை கண்டு கலங்குவதிலும் மந்திரி காரை மறித்து ஆவேசப்படுவதிலும், கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார்.

கணவரின் பிரிவையும், காமவெறி கொண்ட போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க போராடும் தவிப்பையும், கண்களில் வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார், பார்வதி நம்பியார். ஊர் தலைவராக வரும் பார்த்திபன் அவருக்கு உரிய நக்கல் வசனத்தில், கவர்கிறார். வக்கீலாக வரும் நாசர், கலெக்டராக வரும் ரேவதி, நியாயத்தின் பக்கம் நின்று தீர்ப்பு சொல்லும் மனிதாபிமானம் மிகுந்த நீதிபதியாக ரேகா, குடிநீருக்கு குடத்துடன் அலையும் ஏழைத்தாயாக அனுஹாசன், அமைச்சராக வரும் ‘தலைவாசல்’ விஜய், எம்.எஸ்.பாஸ்கர், டீ கடை மாஸ்டர் என்று அனைவரும் யதார்த்தமான நடிப்பில் மனதில் நிற்கிறார்கள்.

இடைவேளைக்கு பிறகு படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தண்ணீர் அரசியலை கருவாக வைத்து சமூக அக்கறையுடன் கதை சொல்லி இருக்கிறார். ஜெயச்சந்திரன் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. நவுஷாத் ஷெரிப் கேமரா வறண்ட பூமியையும், பச்சைப்பசேல் அழகையும் இயல்பாக படம் பிடித்து இருக்கிறது.

Next Story