அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
x
தினத்தந்தி 4 March 2018 6:24 PM GMT (Updated: 4 March 2018 6:24 PM GMT)

நடிகர் நாகார்ஜூனா, நடிகை அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘ஓம் நமோ வெங்கடேசாயா’. படம் ‘அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. படத்தின் சினிமா விமர்சனம்.

திருமலையில் நடந்த உண்மை சம்பவம், இது. வெங்கடேச பெருமாளின் அருள் பெற்ற தீவிர பக்தர், ராமா. அவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார், கோவில் நிர்வாக அதிகாரி. வெளியில் தள்ளப்பட்ட ராமா பசி, தூக்கம் மறந்து வெங்கடேச பெருமாளின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக இருக்கிறார், பெருமாளின் பக்தையான கிருஷ்ணம்மா.

இந்த நிலையில், அரசன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உலா வருகிறார். அவரிடம், “கோவில் சொத்துக்களை எல்லாம் நிர்வாக அதிகாரி கொள்ளையடிக்கிறார்” என்று பொதுமக்கள் புகார் செய்கிறார்கள். அந்த புகார்கள் அனைத்தும் உண்மை என்பதை புரிந்து கொண்ட அரசன், ராமாவை கோவில் நிர்வாக அதிகாரி ஆக்குகிறார்.

இதனால் ராமா மீது பழைய அதிகாரி தீராத பகை கொள்கிறார். அவரை பழிவாங்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார். ராமாவின் பக்தியில் மனமுருகிப் போன பெருமாள், அவருடன் சேர்ந்து பகடை ஆடுகிறார். அதில் பெருமாள் தோற்றுப் போய், தனது நகைகளை எல்லாம் இழக்கிறார். கோவிலில் நகைகள் இல்லாமல் காட்சி தந்த பெருமாளை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்த பழைய நிர்வாக அதிகாரி, ராமா மீது திருட்டு குற்றம் சுமத்துகிறார். அந்த திருட்டுப்பழியில் இருந்து வெளிவரும் ராமா, திருமலையில் இருந்து வெளியேற முயற்சிக்கிறார். அவரை பெருமாள் தடுத்து நிறுத்துகிறார். அப்போது ராமா, “இந்த மலையிலேயே ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும்” என்று பெருமாளிடம் கேட்கிறார். அதற்கு பெருமாள் அனுமதித்தாரா, இல்லையா? என்பது நெகிழவைக்கும் ‘கிளைமாக்ஸ்.’

ராமாவாக நாகார்ஜுன். கடவுள் மீது தீவிர பக்தி கொண்ட பக்தராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். கோவிலுக்குள் இருந்து நிர்வாக அதிகாரியினால் தூக்கி வீசப்படும்போதும், தன்னுடன் பெருமாள் பகடை ஆடினார் என்பதை நம்ப மறுப்பவர்கள் முன்பு அவரை வரவழைப்பதற்காக, அழுது கொண்டே பாடும்போதும், ஜீவ சமாதியாகும்போதும், நாகார்ஜுன் உருக வைக்கிறார்.

கிருஷ்ணம்மாவாக அனுஷ்கா. உண்மை சம்பவத்தில் இல்லாத-திணிக்கப்பட்ட கதாபாத்திரம். அவருடைய வசீகர சிரிப்பும், நளினமான ஆட்டமும் ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து. புராண வரலாற்று கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறார், இந்த கிருஷ்ணம்மா.

மரகதமணியின் பின்னணி இசையும், எஸ்.கோபால் ரெட்டியின் ஒளிப்பதிவும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ராகவேந்திர ராவ் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதி, மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி, வேகமாக கடந்து போகிறது. பிரமாண்டமான அரங்க அமைப்புகள், பிரமிப்பூட்டுகின்றன. ஒரு கோவில் நகரத்துக்குள் இரண்டரை மணி நேரம் இருந்த திருப்தி.

Next Story