நடிகையர் திலகம்


நடிகையர் திலகம்
x
தினத்தந்தி 19 May 2018 6:45 PM GMT (Updated: 19 May 2018 6:45 PM GMT)

சாவித்ரியின் கதை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் நடிகையர் திலகம் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். படத்தின் சினிமா விமர்சனம்.

அவருடைய குழந்தை பருவத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் சாவித்ரியாக வாழ முயற்சித்து இருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த அவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பெத்த நானா(பெரியப்பா)வுடன் சென்னைக்கு வந்து வாய்ப்பு கேட்டு ஸ்டுடியோவுக்குள் போகும்போது, முதன்முதலாக ஜெமினிகணேசனை பார்க்கிறார். அவர் எடுத்த ஒரு போட்டோவே சாவித்ரிக்கு கதாநாயகி வாய்ப்பை பெற்று கொடுக்கிறது.

சாவித்ரியின் சின்ன சின்ன ஆசைகளை ஜெமினிகணேசன் நிறைவேற்றி, அவர் மனதில் இடம் பிடிக்கிறார். தனக்கு நடந்த 2 திருமணங்களும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நிகழ்ந்தன என்கிறார். “நான் யாரையும் காதலிக்கவில்லை. முதன்முதலாக உன்னைத்தான் காதலிக்கிறேன்” என்று கூறி, சாவித்ரியின் இதயத்தில் இடம் பிடிக்கிறார். இவர்களின் காதலுக்கு சாவித்ரியின் பெத்த நானா எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில், ஜெமினிகணேசனை சுடுவதற்கு துப்பாக்கியை எடுக்கிறார்.

ஜெமினிகணேசனின் உயிரை காப்பாற்றுவதற்கு, சாவித்ரி கொட்டும் மழையில் அவர் வீடு தேடி ஓடுகிறார். மூத்த மனைவி அனுமதியின் பேரில் சாவித்ரி அங்கேயே தங்குகிறார்.

இப்படி, படத்தின் முதல் பாதி, ‘டாகுமெண்டரி’ போல் மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில், ஜெமினிகணேசனே பொறாமைப்படும் அளவுக்கு சாவித்ரியின் நட்சத்திர அந்தஸ்து உயர்வது, 2 குழந்தைகளுக்கு தாயாவது, ஜெமினிகணேசனின் குடிப்பழக்கத்தை நிறுத்த முயன்று அவரும் குடிப்பழக்கத்துக்கு ஆளாவது, சொந்த படம் எடுப்பது, சொத்துக்களை எல்லாம் இழப்பது, நண்பர்கள்-தோழிகள் அனைவரும் அவரை ஏமாற்றுவது, ஜெமினிகணேசனின் பிரிவு என கதை சோக பாதையில் பயணிக்கிறது. சாவித்ரியின் முடிவே படத்தின் முடிவும்.

மற்ற நடிகைகளுக்கு ஒரு பாடம் மாதிரி, ‘நடிகையர் திலகம்’ கதை அமைந்திருக்கிறது. அவருடைய கதை எல்லோருக்கும் தெரிந்தது என்பதாலும், கதையில் பெரிய திருப்பங்கள் இல்லாததாலும், படத்தில் வேக குறைவு.

கீர்த்தி சுரேஷ், கதாபாத்திரமாகவே மாற முயற்சித்து இருக்கிறார். அவருடைய சிரிப்பும், அப்பாவித்தனமும், உடையலங்காரமும் சாவித்ரியை நகல் எடுத்த மாதிரி அமைந்துள்ளன. படுக்கையில் ஜெமினிகணேசனுடன் இன்னொரு பெண்ணை பார்த்து கோபத்தின் உச்சிக்குப்போய் அந்த பெண்ணை அறைவது, ஜெமினிகணேசனின் சட்டையை பிடித்து உலுக்குவது ஆகிய காட்சிகளில், இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டியிருக்கலாம்.

ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான், காதல் மன்னனாக வந்து போகிறார். பத்திரிகை நிருபராக சமந்தா. கீர்த்தி சுரேசுக்கு இணையான பெரிய கதாநாயகி என்பதால் அவருக்கு இணையாக சில காட்சிகள் சமந்தாவுக்காக திணிக்கப்பட்டுள்ளன. பட அதிபராக பிரகாஷ்ராஜ் வருகிறார்.

ஒளிப்பதிவாளரின் (டேனி சா-லோ) பெயர் வாய்க்குள் நுழையவில்லை என்றாலும், படம் முழுக்க அவருடைய ஒளி ஓவியம். பொங்கி பெருகி ஓடும் நதிக்கரை காட்சிகள், இன்னமும் கண்களுக்குள் நிற்கின்றன. டைரக்டர் நாக் அஸ்வினுக்கு அநேகமாக விருது கிடைக்கும்.

Next Story