செம


செம
x
தினத்தந்தி 30 May 2018 3:24 AM GMT (Updated: 30 May 2018 3:24 AM GMT)

திருமண ஆசையில் ஒரு இளைஞரும், அவரை மணக்க மறுக்கும் பெண்களும், படம் "செம" கதாநாயகன் ஜீ.வி.பிரகாஷ், கதாநாயகி அர்த்தனா, டைரக்‌ஷன் வள்ளிகாந்த், இயக்கிய படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  ஜீ.வி.பிரகாசுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடுகிறார், அவருடைய அம்மா, சுஜாதா. பார்க்கிற பெண்கள் எல்லோரும் ஜீ.வி.பிரகாசை திருமணம் செய்ய மறுத்து விடுகிறார்கள். தாயும், மகனும் வெறுத்துப் போகிறார்கள். 92 பெண்களை பார்த்து வெறுத்துப் போன நிலையில், ஜோதிடம் பார்க்கிறார்கள். “இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் நடக்கவில்லை என்றால், ஆறு வருடங்களுக்கு திருமணம் நடக்காது” என்று ஜோதிடர் ஒரு பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார்.

93-வது பெண்ணாக கோவை சரளாவின் மகள் அர்த்தனாவை பார்க்கிறார்கள். அர்த்தனா, ஜீ.வி.பிரகாசை மணக்க சம்மதிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் முகமெல்லாம் சந்தோஷமாக-அர்த்தனாவை காதலிக்கிறார். அவரை அர்த்தனாவும் விரும்புகிறார். இந்த நிலையில், அர்த்தனாவின் அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள் அவரை துரத்துகிறார்கள். “எனக்கு அர்த்தனாவை திருமணம் செய்து வைத்தால், கடனை எல்லாம் அடைத்து விடுகிறேன்” என்று எம்.எல்.ஏ.வின் மகன் ஆசை காட்டுகிறார். அதற்கு அர்த்தனாவின் அப்பாவும் சம்மதிக்கிறார்.

அதைக்கேள்விப்பட்டு ஜீ.வி.பிரகாசின் அம்மா சுஜாதா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை காப்பாற்றி விடுகிறார்கள். ஜீ.வி.பிரகாசும், அர்த்தனாவும் (அப்பாவுக்கு தெரியாமல்) ரகசிய திருமணம் செய்து கொண்டு, கணவன்-மனைவியாக குடும்பம் நடத்துகிறார்கள். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இந்த தகவல் அர்த்தனாவின் அப்பாவுக்கு தெரிய வருகிறது. அவர் என்ன செய்கிறார்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

கதையும், கதாபாத்திரமும் ஜீ.வி.பிரகாசுக்கு அளவெடுத்து தைத்த சட்டை போல் பொருந்துகிறது. ‘காமெடி’ நாயகனாக கலக்கி இருக்கிறார். அவரும், நண்பர் யோகி பாபுவும் சேர்ந்து வருகிற காட்சிகள், நகைச்சுவை திருவிழா. பார்க்கிற பெண்கள் எல்லோரும் தன்னை நிராகரிக்கிறார்களே என்று விரக்தி அடையும்போதும், அர்த்தனாவுடன் காதல் வளர்க்கும் காட்சிகளிலும் சோகமும், சுகமுமாக நடிப்பில், பிரகாசமான குமார்.

அர்த்தனா, அழகான கண்டுபிடிப்பு. ஜீ.வி.பிரகாசுடன் காதல், அப்பாவுக்கு தெரியாமல் திருமணம், அதை அப்பா கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயம் என உணர்ச்சிகளை அடிக்கடி மாற்றுவதற்கு வாய்ப்பு. அர்த்தனா தேர்ந்த நடிகையாக வசீகரிக்கிறார். அவருடைய அம்மாவாக கோவை சரளா. கணவரை ஏமாற்றி மகள் திருமணத்தை நடத்தும் பயந்த சுபாவமுள்ள மனைவியாக, படம் முழுக்க கலகலப்பூட்டுகிறார். ஜீ.வி.பிரகாசின் அம்மாவாக சுஜாதா, கிராமத்து அம்மாவை முன் நிறுத்துகிறார்.

விவேகானந்தனின் ஒளிப்பதிவில் தஞ்சை பசுமை, கண்களுக்கு விருந்து. பாடல்களிலும், பின்னணி இசையிலும் ஜீ.வி.பிரகாசின் மெல்லிசை, வருடிக் கொடுக்கிறது. மணப்பெண் வேட்டை என்ற ஒரே ஒரு வரியை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் வள்ளிகாந்த். எம்.எல்.ஏ. மகனை வில்லனாக காட்டி விட்டு, அவர் மூலம் சின்ன மிரட்டல் கூட இல்லாமல் வீணடித்து இருப்பது, பெரிய குறை. இடைவேளை வரை, விறுவிறுப்பான கதையோட்டம். அப்புறம் கொஞ்சம் வேகம் குறைந்து, ‘கிளைமாக்ஸ்’சில் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள்.


Next Story