காலா


காலா
x
தினத்தந்தி 7 Jun 2018 10:30 PM GMT (Updated: 7 Jun 2018 6:46 PM GMT)

மும்பை தாராவி தமிழர்களை காப்பாற்றி வரும் தமிழ் தாதாவும், அதை கையகப்படுத்த முயற்சிக்கும் வில்லனும். படம் "காலா" கதைநாயகன் ரஜினிகாந்த்,நாயகி ஈஸ்வரிராவ், ஹூமா குரேசி, டைரக்‌ஷன் பா.ரஞ்சித் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

கதையின் கரு: மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார், காலா என்கிற கரிகாலன் (ரஜினிகாந்த்) அவரை தன் காலில் விழ வைத்து, தாராவியை கையகப்படுத்த முயற்சிக்கிறான், ஹரிதேவ் என்கிற உள்ளூர் தாதா (நானாபடேகர்) இதற்காக தனது ஆள் பலம், அதிகார பலம், பண பலம் ஆகிய அனைத்தையும் பயன்படுத்துகிறான். தாராவியில் இருந்து தமிழர்களை விரட்ட-நவீன மும்பை என்ற பெயரில், ஒரு மோசடி திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறான்.

இந்த சூழ்நிலையில், காலாவின் இளமைப்பருவ காதலி சரினா (ஹூமா குரேசி) சர்வதேச சமூக சேவகியாக-ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு திரும்பி வருகிறார். அவரை பயன்படுத்தி தாராவியை தன்வசப்படுத்த முயற்சிக்கிறான், ஹரிதேவ். அவனுடைய சதித்திட்டத்தை புரிந்து கொள்ளாமல் சரினாவும் ஹரிதேவுக்கு ஆதரவாக நிற்கிறார்.

நவீன மும்பை திட்டத்தை அரசாங்கமே நிறைவேற்றட்டும்...அதை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று எதிர்த்து நிற்கிறார், காலா. ஒரு சந்தர்ப்பத்தில் ஹரிதேவின் சதியை புரிந்து கொண்டு அந்த திட்டத்தில் இருந்து தனது ஆதரவை விலக்கி கொள்கிறார், ஹூமா குரேசி. தனது திட்டம் நிறைவேறாத ஆத்திரத்தில் காலாவை தீர்த்துக்கட்ட முயற்சிக்கிறான், ஹரிதேவ். அவனுடைய கொலை வெறிக்கு காலாவின் மனைவி செல்வியும், மகன் திலீபனும் பலியாகிறார்கள். அடுத்து காலாவையும், அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் உயிரோடு கொளுத்த முயற்சிக்கிறான், ஹரிதேவ்.

அதில் இருந்து காலா தப்பினாரா, அவர் குடும்பம் தப்பியதா, ஹரிதேவுக்கு தக்க தண்டனை கிடைத்ததா? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

தாராவி தமிழர்களின் தலைவர், மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், உயிருக்குயிரான நண்பர் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்க்கையை கொண்டாடும் காலா என்ற கரிகாலன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த், ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார். அவருடைய இளம் வயது காதலி ஹூமா குரேசியின் எதிர்பாராத வரவு தரும் இன்ப அதிர்ச்சியை கண்களிலேயே வெளிப்படுத்தும் விதம், அறுபதை தாண்டியவர்களுக்கு ஆறுதல் பரிசு. மனைவி ஈஸ்வரிராவை, “அவள் என் சாமி...குலசாமி...” என்று சொல்லி கண்கலங்கும் இடம், நெகிழ்ச்சியின் உச்சம்.

அவ்வப்போது அவர் ஆக்ரோஷமான காலாவாக மாறும் இடங்களில், அனல் பறக்கிறது. வீடு தேடி வந்து மிரட்டி விட்டு செல்லும் நானாபடேகரை, “நான் உன்னை போகச் சொல்லலை” என்று தடுத்து நிறுத்தும்போதும், “நிலம் உனக்கு அதிகாரம்...எங்களுக்கு வாழ்க்கை” என்று ‘பஞ்ச்’ வசனம் பேசும்போதும், காலாவின் கெத்தும், கம்பீரமும் ஆச்சரியப்பட வைக்கிறது.

ஆடம்பரமான மும்பை தாதாவாக நானாபடேகர், ரஜினிகாந்தின் நண்பராக சமுத்திரக்கனி, திருநெல்வேலி பெண்ணாகவே மாறியிருக்கும் ஈஸ்வரிராவ், வருடங்கள் கடந்து வயது தாண்டினாலும் வசீகரம் காட்டும் ஹூமா குரேசி ஆகியோர் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

இரவு நேர மும்பை, மழை பெய்து ஓய்ந்தாலும் ஈரம் காயாத சாலைகள், கும்பல் கும்பலாக நடிகர்-நடிகைகள் ஆகிய அம்சங்களை அழகாக பதிவு செய்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் முரளி ஜி. சந்தோஷ் நாராயணனின் இசையில், “தங்கச்சிலை” பாடலும், நடனமும் ரசனையுடன் படமாக்கப்பட்டு இருக்கிறது. இடைவேளை வரை நேரம் போனது தெரியாத அளவுக்கு விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் பா.ரஞ்சித். இடைவேளைக்குப்பின் சில காட்சிகளில், வேக குறைவு. ‘கிளைமாக்ஸ்,’ ரொம்ப நீளம்.

நிலம், எல்லோருக்கும் பொதுவானது என்ற ஒரு வரி கதையை வீரம், விவேகம், காதல், மோதல் கலந்து சுவாரஸ்யமாக சொன்ன விதத்தில், ரஞ்சித் சிறந்த டைரக்டராக உயர்ந்து நிற்கிறார்.


Next Story