கடைக்குட்டி சிங்கம்


கடைக்குட்டி சிங்கம்
x
தினத்தந்தி 14 July 2018 7:05 PM GMT (Updated: 14 July 2018 7:05 PM GMT)

5 அக்காள்களுக்கும்-ஒரு தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டம். படம் "கடைக்குட்டி சிங்கம்" கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் பாண்டிராஜ், படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  ஒரு கிராமத்தின் பெரிய மனிதர், சத்யராஜ். இவருக்கு 2 மனைவிகள், 5 மகள்கள். குடும்பத்தை தாங்கிப் பிடிக்க ஒரு ஆண் வாரிசு தேவை என்று இவர் மூன்றாவது திருமண முயற்சியில் ஈடுபடும்போது, முதல் மனைவி விஜி சந்திரசேகர் மூலம் ஒரு மகன் பிறக்கிறான். இவர்தான் கார்த்தி. விவசாயியாக இருந்து கொண்டே விவசாயத்துக்கு பெருமை சேர்ப்பவர்.

இவர் மீது 2 அக்காள்களின் மகள்கள் பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகிய இருவருக்கும் காதல். ஆனால் கார்த்திக்கு இன்னொரு பெரிய மனிதரான பொன்வண்ணனின் மகள் சாயிஷா மீது காதல். இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார், கார்த்தி. இது அவருடைய குடும்பத்துக்கு தெரியவரும்போது, பிரளயம் வெடிக்கிறது.

அக்காள்கள், அவர்களின் கணவர்கள், மகள்கள் ஆகிய அனைவரும் கார்த்தியின் காதலுக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். இவர்களின் எதிர்ப்பும், போராட்டமும் ஒரு பக்கம். சின்ன வயதில் இருந்தே பகைவனாகி விட்ட சந்துருவின் பழிவாங்கும் படலம் இன்னொரு பக்கம். அக்காள்களையும், அவர்களின் மகள்களையும் கார்த்தி எப்படி சமாதானம் செய்து பாசக்கார தம்பி என்பதை நிரூபிக்கிறார்? என்பதும், வில்லன் சந்துருவின் சதித்திட்டங்களை எப்படி முறியடித்து வெற்றி பெறுகிறார்? என்பதும் கார்த்தியின் சாகசங்கள்.

‘மண்ணின் மைந்தர்கள்’ கதாபாத்திரங்களில், கார்த்தி அப்படியே பொருந்தி விடுகிறார். ‘பருத்தி வீரன்,’ ‘கொம்பன்’ படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் நூறு சதவீத பொருத்தம். மண்ணை நேசிக்கும் விவசாயியாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய சிரித்த முகம் காதல் காட்சிகளில் கனிந்து போகிறது என்றால், மடித்துக் கட்டிய வேட்டியும், ஆக்ரோஷமும் அதிரடி சண்டை காட்சிகளில் கரகோஷம் பெறுகிறது.

இதனூடே அக்காள்கள் மீது அவர் காட்டும் அளவற்ற பாசம், நெகிழவைக்கிறது. குறிப்பாக, ‘கிளைமாக்ஸ்’ காட்சியில், அக்காள்கள் குடும்பத்துக்காக அவர் செய்த பாசம் பட்டியலிடப்படும்போது, ‘கடைக்குட்டி சிங்கம்,’ கண்களை நனைய வைத்து விடுகிறார். விவசாயத்தின் பெருமையையும், விவசாயிகளின் தியாகத்தையும் கார்த்தி கூறும்போது, தியேட்டரில் அத்தனை வரவேற்பு.

கதாநாயகி சாயிஷா, துடைத்த கண்ணாடி மாதிரி, பளிச். நடிக்கவும் தெரிந்த நாயகி என்பதை பல காட்சிகளில் நிரூபிக்கிறார். மும்பை வாசனையுடன் கூடிய அவர் முகம்தான், ஒரே பலவீனம். கிராமத்து பெண்ணாக பொருந்தவில்லை. அர்த்தனாவும், பிரியா பவானி சங்கரும் இரண்டாம் தர கதாநாயகிகள் என்றாலும், அவர்களின் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.

படத்தை தூக்கி நிறுத்தும் இன்னொரு கதாபாத்திரம், ‘பெருநாழி ரணசிங்கமான’ சத்யராஜ். “உங்க அப்பன் போன பிறகு உங்களை எல்லாம் பார்த்துக் கொள்ள ஒரு சிங்கம் வேண்டும் அல்லவா?” என்று ஆண் வாரிசின் அவசியத்தை மகள்களிடம் எடுத்துச் சொல்லும் ஆரம்ப காட்சியில் இருந்து மகனுக்காக பரிந்து பேசும் கடைசி காட்சி வரை, சத்யராஜ் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.

வசன காமெடி மூலம் கலகலப்பூட்டுகிறார், சூரி. வில்லன் (சந்துரு) கதாபாத்திரத்துக்கு வீரியம் போதாது. இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டியிருக்கலாம். சரவணன், பொன்வண்ணன், இளவரசு, மனோஜ்குமார், மனோபாலா, மாரிமுத்து, ஸ்ரீமன், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், மவுனிகா என கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாக ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அத்தனை கூட்டத்தையும் அளவாக நடிக்க வைத்து இருக்கிறார், டைரக்டர் பாண்டிராஜ்.

டி.இமானின் பின்னணி இசை, குடும்ப உறவுகளின் அன்பையும், மேன்மையையும் வெளிப்படுத்தும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளுக்கு மெருகூட்டியிருக்கிறது, வேல்ராஜின் கேமரா. ஒரு கிராமத்தின் வசதியான பெரிய குடும்பத்து சுக துக்கங்களையும், சகோதர பாசத்தையும் மண்வாசனையுடன் காட்சிப்படுத்தி, படம் பார்ப்பவர்களை கதையுடன் ஒன்ற வைத்திருப்பதில், டைரக்டர் பாண்டிராஜ் வெற்றி பெற்று இருக்கிறார்.

Next Story