விமர்சனம்
சாமி-2

சாமி-2
விக்ரம், பாபி சிம்ஹா, விவேக், பிரபு மற்றும் சூரி கீர்த்தி சுரேஷ் ஹரி தேவி ஸ்ரீ பிரசாத் பிரியன்
அப்பாவையும், அம்மாவையும் கொன்ற வில்லனை கதாநாயகன் பழிவாங்கும் கதை. கதாநாயகன் விக்ரம்,கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன் ஹரி இயக்கத்தில் உருவாயிருக்கும் படம் சாமி-2 படத்தின் விமர்சனம்.
Chennai
கதையின் கரு: அப்பாவையும், அம்மாவையும் கொன்ற வில்லனை கதாநாயகன் பழிவாங்கும் கதை. ‘சாமி’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’சில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி ஆறுச்சாமி (விக்ரம்), கொடூரமான தாதா கோட்டா சீனிவாசராவை உயிரோடு தீவைத்து கொளுத்துவது போல், படம் தொடங்குகிறது.

விக்ரமையும், அவருடைய கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யா ராஜேசையும் ஒரு மழை பெய்யும் இரவில், கோட்டா சீனிவாசராவின் மகன் பாபிசிம்ஹா வெட்டி கொல்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்றி, டெல்லிக்கு கொண்டு போய் வளர்க்கிறார், டெல்லி கணேஷ். 28 வருடங்கள் உருண்டோட-ராம் சாமி (மகன் விக்ரம்) ஐ.ஏ.எஸ். தேர்வில் முதல் மாணவராக தேர்கிறார். அவருக்கு விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க சொல்கிறார்கள், தேர்வு குழுவினர்.

விக்ரம், ‘ஐ.பி.எஸ்.’சை தேர்ந்தெடுத்து, தனது அப்பா வாழ்ந்த திருநெல்வேலிக்கே உயர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பாபிசிம்ஹா மீதான பழைய புகாரை தூசு தட்டி, தனது தாயும், தந்தையும் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்குகிறார். இதற்கிடையே மத்திய மந்திரி பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷ், விக்ரமை விரட்டி விரட்டி காதலிக்கிறார். அவருடைய காதலை விக்ரம் ஏற்றாரா, அவருடைய அப்பாவையும், அம்மாவையும் கொன்ற வில்லன் பாபி சிம்ஹாவை பழிவாங்கினாரா? என்பது மீதி கதை.

அப்பா, மகன் என இரண்டு வேடங்களிலும் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார், விக்ரம். முதல் பாகத்தில் (‘சாமி’யில்) அப்பா விக்ரம் 8 அடி பாய்ந்தால், இரண்டாம் பாகத்தில் (சாமி-2 வில்) மகன் விக்ரம் 16 அடி பாய்ந்து இருக்கிறார். இரும்பு மனிதரைப் போன்ற உடற்கட்டும், முறுக்கு மீசையுமாக மகன் விக்ரம், உதவி போலீஸ் கமிஷனராக திருநெல்வேலியில் வந்து நிற்கும் கம்பீரம், படம் பார்ப்பவர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, சண்டை காட்சிகளில் அவருடைய சாகசங்கள், வியக்க வைக்கின்றன. அவருடைய ஒவ்வொரு அடியும் இடி மாதிரி வில்லன் கும்பல் மீது பாயும் இடங்களில், கைதட்ட வைக்கின்றன. (ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கு ஒரு சபாஷ்!)

விக்ரம்-கீர்த்தி சுரேஷ் தொடர்பான அறிமுக காட்சியும், விக்ரம் மீது கீர்த்தி சுரேஷ் ஈர்க்கப்பட்டு பின்தொடரும் காட்சிகளும், மனதுக்கு நெருக்கமான காதல் காட்சிகள். கனமான காட்சிகளுக்கு மத்தியில், இதமான சீன்கள். கீர்த்தி சுரேஷ், கொஞ்சம் சதை போட்டு இருக்கிறார். அவருடைய செழிப்பான தோற்றமும், பாடல் காட்சிகளில் நடன அசைவுகளும் வசீகரிக்கின்றன.

முதல் பாக வில்லன் கோட்டா சீனிவாசராவை, இரண்டாம் பாக வில்லன் பாபி சிம்ஹா நடிப்பில் மிஞ்சி விட்டார். கதாநாயகன் விக்ரமுக்கு வில்லன் பாபி சிம்ஹா, சரியான சவால். பாபி சிம்ஹா கதாபாத்திரத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், மற்ற இரண்டு வில்லன்கள் (ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய்)க்கும் இல்லாததால், துணை வில்லன்களாக பின்தங்கி விடுகிறார்கள்.

பிரபு, மத்திய மந்திரி வேடத்தில், கச்சிதம். அதிகம் பேசாமல், முகத்திலேயே உணர்ச்சிகளை கடத்தும் அனுபவத்துக்கு, பாராட்டுகள். கீர்த்தி சுரேசின் தாய்மாமனாக சூரி இடையிடையே தலையை காட்டி, சிரிக்க வைக்க படாதபாடு பட்டு இருக்கிறார். ரமேஷ்கண்ணா, குணச்சித்ர வேடத்துக்கு மாறியிருக்கிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களில், மீண்டும் கேட்க தூண்டும் மென்மையான ராகங்கள். டெல்லி தொடர்பான காட்சிகளில், ஒளிப்பதிவாளர் யார்? என்று கேட்க வைக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை டைரக்டர் ஹரியின் பெயர் சொல்கிறது. ஒவ்வொரு காட்சியும் அடிமனதில் ஆழமாக பதிவது, இதற்கு முன்பு அவருடைய படங்களில் பார்த்திராத அம்சம். அந்த இலங்கை தொடர்பான காட்சிகள், தேவையா? படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால், ‘சாமி-2’வின் வீரியம் இன்னும் கூடியிருக்கும்.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்