நோட்டா


நோட்டா
x
தினத்தந்தி 13 Oct 2018 11:08 PM GMT (Updated: 13 Oct 2018 11:08 PM GMT)

‘அர்ஜுன் ரெட்டி’ (தெலுங்கு) படத்தின் மூலம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் தேவரகொண்டா, தமிழ் பட உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமான படம் நோட்டா, படத்தின் சினிமா விமர்சனம்.

முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதை. முதல்-அமைச்சரான நாசர் மீது ஊழல் குற்றச்சாட்டு வருகிறது. அது நிரூபிக்கப்பட்டதால், அவர் ஜெயிலுக்கு போகிறார். அதற்கு முன்பு தன் மகன் விஜய் தேவரகொண்டாவை முதல்-அமைச்சர் ஆக்கிவிடுகிறார். குடியும், கூத்துமாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு அரசியலும், முதல்-அமைச்சர் பதவியும் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக பதவி ஏற்கிறார். இந்த நிலையில், நாசரை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. அதில் இருந்து அவர் தப்பினாலும், சுயநினைவிழந்து, கோமாவுக்கு போய் விடுகிறார். நாசர் கட்சி தொண்டர்கள் நடத்திய அராஜகமான போராட்டத்தில், ஒரு சிறுமி தீயில் கருகி சாகிறாள்.

இந்த சம்பவம், விஜய் தேவரகொண்டாவின் மனநிலையை மாற்றுகிறது. அவரை தீவிர அரசியலில் ஈடுபட தூண்டுகிறது. முதல்-அமைச்சராக அவர் எடுக்கும் அதிரடி முடிவுகளும், நடவடிக்கைகளும் வரவேற்பை பெறுகின்றன. பொதுமக்கள் மத்தியில் அவர், ‘ரவுடி முதல்வர்’ என்று அழைக்கப்படுகிறார்.

நாசர் ஊழல் செய்து சம்பாதித்த பணம், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதை அவருடைய மகன் (ரவுடி முதல்வர்) கண்டுபிடிக்கிறார். இதற்கிடையில், நாசர் கோமாவில் இருந்து சுயநினைவுக்கு திரும்புகிறார். மகனின் அரசியல் நடவடிக்கைகளை பாராட்டுவது போல் பாராட்டிவிட்டு, அவரை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவருடைய சதித்திட்டம் வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதே ‘நோட்டா!’

துணிச்சல் மிகுந்த ஒரு நேர்மையான இளைஞரிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால், நாடு எப்படியிருக்கும்? என்பதை படம் பேசுகிறது. விஜய் தேவரகொண்டா அழகான இளம் நாயகன். கதையின் மொத்த பாரமும் தன் மீது என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார். அவர் குடித்து விட்டு அழகிகளுடன் ஆடிப்பாடுவது போல் அமர்க்களமாக தொடங்குகிறது, படம். ‘பிளேபாய்’ ஆக இருக்கும் அவர் எப்படி நல்ல அரசியல்வாதியாக மாறுகிறார்? என்பதற்கான விளக்கம், கனமான காட்சிகள்.

கதாநாயகி என்று யாரும் இல்லை. மெஹ்ரின் பிர்சாடா, சஞ்சனா நடராஜன் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். மூத்த பத்திரிகையாளராக சத்யராஜ், ஒப்பனை எதுவும் செய்து கொள்ளாமல், மிக இயல்பாக நடித்து இருக்கிறார். நாசர், முதல்-அமைச்சராக வருகிறார். வில்லத்தனமான அவருடைய கதாபாத்திரம், என்ன செய்வாரோ என்ற பதற்றத்தை கூட்டுகிறது. மொட்டை ராஜேந்திரனும், கருணாகரனும் துணை நடிகர்கள் போல் வந்துபோகிறார்கள். சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை, கதையுடன் இசைந்து இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி காட்சிகள் வரை சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு ‘பளிச்’ என்று இருக்கிறது. ஆனந்த் ஷங்கர் டைரக்டு செய்திருக்கிறார். ‘நோட்டா’ எந்த மாதிரி படம் என்பதை ஆரம்ப காட்சியே உணர்த்தி விடுகிறது. படத்தின் முன்பகுதியில் இருந்த வேகம், பின்பகுதியிலும் இருந்திருந்தால், படம் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்.

Next Story