ஜருகண்டி


ஜருகண்டி
x
தினத்தந்தி 30 Oct 2018 4:38 PM GMT (Updated: 30 Oct 2018 4:38 PM GMT)

நடுத்தர குடும்பத்து இளைஞர் ஜெய் மற்றும் அவரது நண்பர் டேனியல் இருவரும் டிராவல்ஸ் தொழில் நடத்த வங்கியில் கடன் கேட்டு அலைகின்றனர்.

சொத்து உத்தரவாதம் இல்லாமல் கடன் தர முடியாது என்று அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். இதனால் போலி சொத்து பத்திரங்கள் மூலம் கடன் பெற்று கொடுக்கும் இளவரசுவை நாடுகிறார்கள்.

அவரும் கமிஷன் பெற்று வங்கியில் கடன் வாங்கி கொடுக்கிறார். போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட் திடீரென்று போலி பத்திர விஷயம் தனக்கு தெரியும் என்று அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். அந்த பணத்தை எப்படி புரட்டுவது என்று தவிக்கும்போது பணக்கார ரோபோ சங்கரை சந்திக்கின்றனர். அவர் தான் காதலிக்கும் ரெபா மோனிகாவை தன்னுடன் சேர்த்து வைத்தால் பணத்தை தருவதாக உறுதி அளிக்கிறார். இதனால் இருவரும் ரெபா மோனிகாவை கடத்தபோய் இன்னொரு பிரச்சினையில் சிக்குகிறார்கள். அவற்றில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது மீதி கதை.

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஜெய் சராசரி இளைஞனின் கனவுகளை யதார்த்தமாக பிரதிபலிக்கிறார். சிக்கல்களில் அவர் மாட்டுவதும் அதில் இருந்து விடுபட காய்நகர்த்தும் லாவகங்களும் ரசிக்க வைக்கின்றன. ரெபா மோனிகாவிடம் காதல் வயப்படுவதும் அவர் எதிரியாக பாவிக்கும் நிலையிலும் உதவிகள் செய்வதும் அழுத்தமானவை. அடிதடியிலும் வேகம் காட்டுகிறார்.

ஆதரவற்ற பெண்ணாக வந்து ரவுடிகள் வலையில் மாட்டி தப்பிக்க போராடும் பரிதாபகரமான பெண் கதாபாத்திரம் ரெபா மோனிகாவுக்கு. அதை நிறைவாக செய்துள்ளார். டேனியல், ரோபோ சங்கர் சிரிக்க வைக்கின்றனர். அமித்குமார் திவாரி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வில்லன் ஏரியாவை வலுவில்லாமல் நகர்த்தியது நெருடல்.

அடுத்து என்ன என்ற பதட்டங்களுடன் காட்சிகளோடு ஒன்ற வைத்து முடிச்சும் அவிழ்ப்புமாக விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஏன்.என்.பிச்சுமணி. ஆர்.டி.ராஜசேகர் கேமரா ‘சேசிங்’ காட்சிகளில் கடுமையாக உழைத்து இருக்கிறது. போபோ சசியின் பாடல்கள் கேட்கும் ரகம்.

Next Story