சர்கார்


சர்கார்
x
தினத்தந்தி 8 Nov 2018 4:32 PM GMT (Updated: 8 Nov 2018 4:32 PM GMT)

ஒரு கள்ள ஓட்டும், கதாநாயகன் எடுக்கும் முடிவுகளும். படம் ‘சர்கார்’ கதாநாயகன் விஜய்,கதாநாயகி கீர்த்தி சுரேஷ், டைரக்‌ஷன்: ஏ.ஆர்.முருகதாஸ், இயக்கியுள்ள சர்கார் படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  அமெரிக்காவில், ‘நம்பர்-1’ கம்ப்யூட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கும் ‘சுந்தர் ராமசாமி’(விஜய்)யின் பெயரை சொன்னாலே அனைத்து நாடுகளும் பயப்படுகின்றன. அவர் ஒரு நாட்டுக்கு வந்தால், அங்கு ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி விட்டுதான் வெளியேறுவார் என்று அஞ்சுகின்றன. அப்படிப்பட்ட விஜய் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சென்னை வருகிறார். அவருடைய ஓட்டை வேறு யாரோ (கள்ள ஓட்டாக) போட்டு விடுகிறார்கள். ஓட்டு உரிமை கோரி விஜய் கோர்ட்டுக்கு போகிறார். அவருக்கு கோர்ட்டு ஓட்டுரிமையை வழங்குகிறது.

இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. கள்ள ஓட்டுகளால் ஓட்டுரிமையை இழந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களுக்கும் ஓட்டுரிமையை வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு போடுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் மறு தேர்தல் நடத்த கோர்ட்டு உத்தரவிடுகிறது.

இது, ஏற்கனவே 2 முறை முதல்வராக இருந்து, 3-வது முறையாக முதல்வராக தயாராகும் பழ.கருப்பையாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. கலவரத்தை தூண்டி விடுகிறார். மறு தேர்தலில் அவரை எதிர்த்து விஜய் போட்டியிடுகிறார். அவர் பின்னால் இளைஞர்களும், பொதுமக்களும் திரள்கிறார்கள். விஜய்யை தீர்த்துக் கட்ட பழ.கருப்பையா சதி செய்கிறார்.

அவருடைய சதி என்ன ஆகிறது, மறு தேர்தல் நடந்ததா, இல்லையா, அதில் யாருக்கு வெற்றி கிடைத்தது, முதல்வர் பதவியை ஏற்பது யார்? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது, மீதி கதை.

இதுவரை தரை லோக்கலாக வந்து சாகசங்கள் செய்த விஜய், இந்த படத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரராக வருகிறார். ‘சுந்தர் ராமசாமி’ கதாபாத்திரத்தில் அவருடைய நடை-உடை-பாவனை அத்தனையும் ரசிக்க வைக்கிறது. கோடீஸ்வரர் வேடத்தில் அவருடைய ஸ்டைல், வேகம் இரண்டும் கூடியிருக்கிறது. வயது குறைந்து இன்னும் இளமையாக தெரிகிறார்.

சண்டை காட்சிகளில் அவருடைய சாகசங்கள் வியக்க வைக்கிறது. அரசியல் கலந்த ‘பஞ்ச்’ வசனங்களுக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு.

காதலுக்கும், டூயட்டுக்கும் முக்கியத்துவம் இல்லாத கதை என்பதால், கதாநாயகி கீர்த்தி சுரேசுக்கு அதிக வேலை இல்லை. சில காட்சிகளே வந்து போனாலும், ‘வில்லி’யாக வரலட்சுமி சரத்குமார் மிரட்டியிருக்கிறார். அரசியல்வாதி வேடத்துக்கு பழ.கருப்பையா நூற்றுக்கு நூறு பொருந்தியிருக்கிறார். இரண்டாவது வில்லன் என்றாலும், ராதாரவி நடிப்பில் முதல் இடம். திருப்பத்தை ஏற்படுத்தும் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ், கம்பீரம்.

கதைக்கு காரணகர்த்தாவாக இருக்கும் தமாசான வேடத்தில் யோகி பாபுவை திரையில் பார்த்ததுமே சிரிப்பு. விஜய்யுடன் அவர் வருகிற காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். விஜய்யின் உறவினராக லிவிங்ஸ்டன், சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் சென்னை நகரின் இரவு நேர அழகு கூடியிருக்கிறது. கார் துரத்தும் காட்சிகளிலும், அரசியல் கூட்டங்கள் மற்றும் கலவரத்தை படமாக்கியிருக்கும் விதத்திலும் பிரமிக்க வைக்கிறார், ஒளிப்பதிவாளர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் 2 பாடல்கள், ‘ஹிட்’ ரகம். பின்னணி இசை, கதையோட்டத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

விஜய்க்கு பொருந்துகிற மாதிரி முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையை தேர்வு செய்திருக்கிறார், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். கதை சொன்ன விதமும், காட்சிகளின் பிரமாண்டமும் ‘சர்கார்’ரை உயரத்தில் தூக்கிப் பிடிக்கின்றன. இடைவேளை வரை படம், சூப்பர் வேகம். இடைவேளைக்குப்பின், சில காட்சிகளில் பிரசார நெடி இருப்பதை தவிர்த்து இருக்கலாம். நெல்லையில் ஒரு குடும்பமே தீக்குளித்ததையும், மெரினா போராட்டத்தையும் கதைக்குள் செருகியிருப்பது, படத்துக்கு கூடுதல் பலம்.

Next Story