விமர்சனம்
அடங்க மறு

அடங்க மறு
ஜெயம் ரவி ராஷி கண்ணா கார்த்திக் தங்கவேலின் சென்சேஷன் சத்யன் சூரியன்
தன் குடும்பத்தை சாகடித்தவனை பழிவாங்கும் கதாநாயகன். படம் "அடங்க மறு" கதாநாயகன் ஜெயம் ரவி, கதாநாயகி ராஷிகன்னா, டைரக்‌ஷன் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள அடங்க மறு படத்தின் விமர்சனம்.
Chennai
கதையின் கரு:  ஜெயம் ரவி, ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அவர்களின் குழந்தை என அந்த கூட்டு குடும்பத்தில் சந்தோஷமாக இருக்கிறார். ஒருநாள் இரவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சரின் மகன் வந்த காரை ஜெயம் ரவி தடுத்து நிறுத்துகிறார். தன்னை எப்படி தடுத்து நிறுத்தலாம்? என்று சீறுகிறார், அமைச்சரின் மகன். அவரை சந்தர்ப்பம் பார்த்து ஜெயம் ரவி அடித்து உதைத்து, போலீஸ் அடி எப்படியிருக்கும்? என்பதை காட்டுகிறார். இப்படி ஆரம்பிக்கிறது கதாநாயகனுக்கும், வில்லனுக்குமான மோதல்.

கலெக்டரின் மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து இளம் பெண்களை கற்பழித்து கொலை செய்கிறான். அந்த கும்பலை கைது செய்து போலீஸ் காவலில் வைக்கிறார், ஜெயம் ரவி. கலெக்டர் தன் மகனையும், அவனுடைய நண்பர்களையும் தனது செல்வாக்கை பயன்படுத்தி விடுவிக்கிறார். ஜெயம் ரவியை பழிவாங்க கலெக்டரின் மகனும், அவனுடைய நண்பர்களும் கூலிப்படையை ஏவி, அவருடைய குடும்பத்தையே தீவைத்து எரித்து கொன்று விடுகிறார்கள்.

குடும்பத்தினரை இழந்த ஜெயம் ரவி, கொலையாளிகளை எப்படி தீர்த்து கட்டுகிறார்? என்பது மீதி கதை.

புதுசாக வேலைக்கு வந்த ஒரு இளம் போலீஸ் அதிகாரியின் திறமை, ஆதங்கம், திருப்பி அடிக்கும் துணிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்தி, காக்கி சட்டைக்கு கம்பீரம் சேர்க்கிறார், ஜெயம் ரவி. அமைச்சர் மகனின் அடாவடிக்கு பாடம் கற்பிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது, அவருடைய அதிரடி ஆட்டம்.

இவருக்கும், கதாநாயகி ராஷிகன்னாவுக்குமான காதலுக்கு அதிக வேலை இல்லை. குடும்பத்தினரை இழந்து கதறும்போதும், உயர் அதிகாரி சம்பத்ராஜின் அதிகார துஷ்பிரயோகத்தை பார்த்து உள்ளுக்குள்ளேயே பொறுமும்போதும், உணர்வுகளை வெகு இயல்பாக முகத்துக்கு கொண்டு வந்திருக்கிறார், ஜெயம் ரவி. குடும்பத்தை அழித்த அதிகார வர்க்கத்தை அவர் புத்திசாலித்தனமாக பழிதீர்க்கும் விதத்துக்கு கைதட்ட தோன்றுகிறது.

ராஷிகன்னா, ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். உயர் அதிகாரிகளாக வரும் சம்பத்ராஜ், அழகம்பெருமாள் ஆகிய இருவரில், சம்பத்ராஜ் வில்லத்தனமாகவும், அழகம்பெருமாள் நேர்மையாகவும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். இவர்களுடன் மைம் கோபியும் வில்லனாக வருகிறார். முனீஸ்காந்த் கலகலப்பூட்டுகிறார். பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி ஆகியோரும் கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புக்குரிய காட்சிகளை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். சாம் சி.எஸ். பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வேகம் கூட்டியிருக்கிறார். கதாநாயகனுக்கும், அதிகாரவர்க்கத்துக்கும் இடையேயான பழைய கதைதான். படத்தின் முதல் பாதி வேகமும், விறுவிறுப்புமாக பதற்றமாக வைத்து இருக்கிறது. இரண்டாம் பாதி பழிவாங்கும் படலமாக பல திருப்பங்களுடன் கடந்து போகிறது. டைரக்டர் கார்த்திக் தங்கவேல் தரமான படங்களை கொடுத்த டைரக்டர்கள் பட்டியலில் இணைவார்.

முன்னோட்டம்

பொன்மகள் வந்தாள்

ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.

பதிவு: மே 29, 11:09 PM

மாஸ்டர்

விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 17, 05:33 AM

சக்ரா

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 13, 12:13 AM
மேலும் முன்னோட்டம்