திருமணம்


திருமணம்
x
தினத்தந்தி 2 March 2019 6:21 PM GMT (Updated: 2 March 2019 6:21 PM GMT)

சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் சினிமா விமர்சனம்.

மீண்டும் ஒரு சேரன் படம். அவரே நடித்து டைரக்டு செய்திருக்கிறார்.

கதைப்படி, சேரன் வருமான வரி அதிகாரி. அவருடைய தங்கை காவ்யா சுரேஷ். இவருக்கும், சுகன்யாவின் தம்பி உமாபதி ராமய்யாவுக்கும் காதல் அரும்புகிறது. இருவரும், குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். குடும்பத்தினரும் சம்மதிக்கிறார்கள். இரு குடும்பத்தினரும் சந்தித்து திருமண பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

அப்போது, திருமண செலவில் சிக்கனத்தை கடைபிடித்தால் வீண் செலவுகள் ஏற்படாது என்று சேரன் சில யோசனைகளை சொல்கிறார். அது சுகன்யாவுக்கு பிடிக்கவில்லை. “நாங்க ஜமீன் குடும்பம். அதனால் சிக்கனம் வேண்டாம்” என்கிறார். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், சேரன் சிக்கன கொள்கையை கடைபிடிக்க, அதற்கு சுகன்யா உடன்பட மறுத்து, திருமணத்தை நிறுத்தி விடலாம் என்கிறார்.

காதலர் இருவரும் கண்ணீர் விட, “ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்று உமாபதி கேட்கிறார். அதற்கு காவ்யா மறுத்து விடுகிறார். இருவருக்கும் திருமணம் நடந்ததா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

சேரன், அறிவுடை நம்பி கதாபாத்திரத்தில், நூறு சதவீதம் பொருந்தியிருக்கிறார். பொறுப்புள்ள குடும்ப தலைவராக, அன்பான அண்ணனாக, சிக்கனத்தை கடைபிடிக்கும் இளைஞராக, கச்சிதம். மூத்த அதிகாரி ஜெயப்பிரகாசுக்கு யோசனை சொல்லும் பண்பு, அவரிடமே தங்கை திருமணம் தொடர்பாக யோசனை கேட்கும் தெளிவு, மாப்பிள்ளை பற்றி விசாரிக்கும் அக்கறை, வீண் செலவுகளை தவிர்க்கலாமே என்று ஆலோசனை சொல்லும் புத்திசாலித்தனம் என அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார், சேரன்.

அக்காள் கதாபாத்திரத்தில் சுகன்யா, துடைத்த கண்ணாடி போல் பளிச். அவருடைய தோற்றமும், நடிப்பும் ‘மனோன்மணி’ கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறது. தம்பி மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை இன்னும் நெகிழவைக்கிற மாதிரி காட்டியிருக்கலாம். உமாபதி-காவ்யா, இருவரும் எல்லை தாண்டாத காதலர்களாக மனதில் பதிகிறார்கள்.

தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் குடும்பத்து பெரியவர்களாக தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கிறார்கள். இருவரும் தங்கள் குடும்பங்களின் முன்கதையை கூறும்போது, போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். வருமான வரி உயர் அதிகாரியாக ஜெயப்பிரகாஷ், இன்னொரு அதிகாரியாக மனோபாலா ஆகிய இருவரும் அளவோடு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் போனில் பேசிக்கொண்டிருக்கும் கார் டிரைவராக கலகலப்பூட்டுகிறார், பாலசரவணன்.

கோவை பக்கமுள்ள ஒரு பசுமை போர்த்திய கிராமத்தை காட்டிய அழகில், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் திறமை காட்டியிருக்கிறார். இடைவேளை வரை கதையும், காட்சிகளும் சுமாரான வேகத்துடன் நகர்கின்றன. இடைவேளைக்குப்பின், கதை வேகம் பிடிக்கிறது. உமாபதிக்கும், காவ்யாவுக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வியுடன், விறுவிறுப்பான கதையோட்டம். ஒரு காதல் கதையை குடும்ப பின்னணியில், வெட்டு-குத்து-வன்முறை இல்லாமல் சொல்லி, கதையுடன் ஒன்ற வைத்திருக்கும் நுட்பத்தில், டைரக்டர் சேரன் உயர்ந்து நிற்கிறார்.

Next Story