தடம்


தடம்
x
தினத்தந்தி 2 March 2019 6:28 PM GMT (Updated: 2 March 2019 6:28 PM GMT)

ஒரு கொலைகாரனுக்கும், போலீசுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். படம் "தடம்" கதாநாயகன் அருண் விஜய், கதாநாயகி தான்யா ஹோப், டைரக்‌ஷன் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  சிவில் என்ஜினீயரான அருண் விஜய்யும், நடுத்தர குடும்பத்து பெண் தான்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். நகரில் நடக்கும் ஒரு கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அருண் விஜய் கைது செய்யப்படுகிறார். அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்து அடித்தும், உதைத்தும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில், என்ஜினீயர் அருண் விஜய் போன்ற உருவ ஒற்றுமை உள்ள இன்னொரு அருண் விஜய் குடிபோதையில் ரகளை செய்ததாக கைது செய்யப்பட்டு அதே போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறார். (இவரும், யோகி பாபுவும் திருட்டு தொழிலில் ஈடுபடுகிறவர்கள்) என்ஜினீயர், திருடன் இரண்டு பேரில், கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இறுதியில், உண்மையான கொலைகாரனை போலீசார் கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே ‘தடம்.’

என்ஜினீயர் அருண் விஜய்யும், திருடன் அருண் விஜய்யும் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை உள்ளவர்கள் என்பதே கதையின் ஜீவன். அதனால் இரட்டை வேடத்தில் அருண் விஜய் எந்த வித்தியாசமும் காட்டவில்லை. போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும் என்ஜினீயர் அருண் விஜய்யை திருடன் அருண் விஜய் தடுத்து நிறுத்தி, இருவரும் மோதிக்கொள்கிற சண்டை காட்சியில் பொறி பறக்கிறது. அதில் இருந்து கதை வேகம் பிடிக்கிறது.

என்ஜினீயர் அருண் விஜய்க்கும், தான்யா ஹோப்புக்கும் இடையேயான காதல் காட்சிகள், புதுக்கவிதையாக வருடிக் கொடுக்கிறது. தான்யா ஹோப்பின் உள்ளாடையை அருண் விஜய் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் குறும்புத்தனம் சிரிக்க வைக்கிறது என்றாலும், விரசம். இருவரும் உதட்டுடன் உதடு பொருத்தி நடித்துள்ள முத்த காட்சி, ரசிகர்களுக்கு போனஸ்.

பெண் போலீஸ் அதிகாரியாக வரும் வித்யா பிரதீப், பொருத்தமான தேர்வு. கொலையாளி யார்? என்று கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில், மிக இயல்பாக நடித்து இருக்கிறார். ‘பெப்சி’ விஜயன் வில்லத்தனமான போலீஸ் அதிகாரி. என்ஜினீயர் அருண் விஜய்யை கொலை வழக்கில் சிக்க வைத்து பழிவாங்க முயற்சிக்கும் அவரின் கதாபாத்திரம், காட்சிகளை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறது.

திருட்டு தொழில் செய்யும் அருண் விஜய்யின் நண்பராக யோகி பாபு, மாடியில் நின்று கொண்டு கீழே நடமாடும் பெண்ணை பார்த்து ரசிக்கும் போலீஸ்காரராக ஜார்ஜ் ஆகிய இருவரும் கலகலப்பூட்டுகிறார்கள். சோனியா அகர்வால் தொடர்பான ‘பிளாஷ்பேக்’ காட்சி, கலங்க வைக்கிறது. ஒரு தாய்க்கும், மகனுக்குமான அந்த காட்சிகள் உருக வைக்கின்றன. மீராகிருஷ்ணன் சிகரெட் பிடிக்கும் அம்மாவாக ஆச்சரியப்படுத்துகிறார்.

கோபிநாத்தின் கேமரா, சண்டை காட்சிகளில் சாகசம் புரிந்து இருக்கிறது. ஒளிப்பதிவு கதையுடனும், காட்சிகளுடனும் ஒன்றி பயணித்து இருக்கிறது. பின்னணி இசையில் வாத்தியங்களின் இரைச்சல் மிகையாக இருக்கிறது. டைரக்டர் மகிழ்திருமேனியின் புத்திசாலித்தனமான திரைக்கதையில், திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள். கிளைமாக்ஸ், யூகிக்க முடியாத முடிவு.

Next Story