சூப்பர் டீலக்ஸ்


சூப்பர் டீலக்ஸ்
x
தினத்தந்தி 30 March 2019 4:30 PM GMT (Updated: 30 March 2019 4:30 PM GMT)

மூன்று விதமான கதைகள், வேறு வேறு கோணத்தில் சொல்லப்படுகின்றன. இறுதியில், அவை ஒரு நேர்க்கோட்டில் இணைகின்றன. எல்லாமே ‘செக்ஸ்’சை அடிப்படையாக கொண்டதுதான் என்ற கருத்தை திரைக்கதை சித்தரிக்கிறது.

திருமணத்துக்குப்பின், வெளியூர் சென்ற கணவர் 7 வருடங்கள் ஆகியும் திரும்பி வரவில்லை. அவர் எப்போது திரும்பி வருவார்? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார், காயத்ரி. அந்த கணவரோ திருநங்கையாக திரும்பி வருகிறார்! (விஜய் சேதுபதி) காயத்ரி உள்பட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

சேலை கட்டிய அப்பாவை பார்த்து காயத்ரி-விஜய்சேதுபதி தம்பதிகளின் ஒரே மகன் அஸ்வந்த் அசோக்குமார் ஆச்சரியப்படுகிறான். இருப்பினும், அப்பா இல்லாதவன் என்று பள்ளிக்கூடத்தில் இகழ்ந்து பேசிய சக மாணவர்களுக்கு அப்பாவை காட்டி விடலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்கிறான், அந்த சிறுவன்.

மகனுடன் வெளியில் செல்லும் (திருநங்கை) விஜய் சேதுபதி, போலீஸ் அதிகாரி பகவதி பெருமாளிடம் மாட்டிக் கொள்கிறார். அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறார், பகவதி பெருமாள். அதற்கு திருநங்கை விஜய் சேதுபதி பணிந்தாரா? என்பது, ஒரு கதை.

கணவர் பகத் பாசில் வீட்டில் இல்லாத சமயத்தில், காதலருடன் ‘செக்ஸ்’ வைத்துக் கொண்ட சமந்தா, அங்கேயே இறந்து போகிற காதலர், அவருடைய உடலை அப்புறப்படுத்த முயலும்போது, படம் எடுத்து மிரட்டும் போலீஸ் அதிகாரி, இன்னொரு கதை.

விடலை பையன்கள் நான்கு பேர் சேர்ந்து டி.வி.யில் ஆபாச படம் பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதற்கான முயற்சிகளில் 4 பேரும் ஈடுபடும்போது, அவர்களில் ஒரு பையனின் அம்மா ரம்யாகிருஷ்ணனே ஆபாச படத்தில் நடித்திருப்பதை பார்த்து, பாதிக்கப்படும் மகன். அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க விடாமல், கடவுள் காப்பாற்றுவார் என்று கூறுகிற அதிதீவிர பக்தர் அப்பா மிஸ்கின்-மற்றொரு கதை.

இந்த மூன்று கதைகளையும் ஒரே நேர்க்கோட்டில் தடுமாற்றம் இல்லாமல் கொண்டு வந்திருக்கிறார், டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா. அழுத்தமான கதைகளுக்கு மத்தியில், தியேட்டரை கலகலப்பாக வைத்திருக்கிறது, மெலிதான நகைச்சுவை கலந்த வசனங்கள். குறிப்பாக, விஜய் சேதுபதி திருநங்கையாக வந்து நிற்கும் காட்சி. “நகம் வெட்டிக் கொள்கிற மாதிரி, முடி வெட்டிக் கொள்கிற மாதிரி, என் உடம்பை எனக்கு பிடிக்கிற மாதிரி மாத்திக்கிட்டேன்...இது தப்பா?” என்று அவர் நியாயம் கேட்கும் காட்சியில், கைதட்டுகிறார்கள். பகத் பாசிலின் நடிப்பு, அவருடைய கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறது.

சமந்தா தொடர்பான படுக்கை அறை காட்சியும் வசனமும், திருஷ்டி பரிகாரம். ஹாலிவுட் பட நாயகிகளை மிஞ்சிய துணிச்சல்! சுமார் பதினைந்து வயது பையனுக்கு அம்மாவாக ரம்யாகிருஷ்ணன். “பார்க்க லட்சம் பேர் இருக்கும்போது, நடிக்க நாலு பேர் இருக்கத்தான் செய்வார்கள்” என்று அவர் பக்க நியாயத்தை சொல்லும் வசன வரிகளில், குறும்பு. மிஷ்கின், சுனாமியில் தப்பிய அதிதீவிர கடவுள் பக்தராகவே மாறியிருக்கிறார்.

யுவன் சங்கர்ராஜாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு அழுத்தம் சேர்க்கிறது. பி.எஸ்.வினோத், நீரவ்ஷா ஆகிய இருவரின் கேமராக்களுக்கு அதிக வேலை. சந்து பொந்துகளில் எல்லாம் கேமரா ஓடி, ஆச்சரியப்படுத்துகிறது. சில இடங்களில் வசன வரிகள் தெளிவாக இல்லை. இந்த சின்ன குறையை தவிர்த்து பார்த்தால், புதுமையாக கதை சொன்ன விதத்துக்காக டைரக்டர் தியாகராஜன் குமாரராஜாவை பாராட்டலாம்.

Next Story