உறியடி-2


உறியடி-2
x
தினத்தந்தி 13 April 2019 4:47 PM GMT (Updated: 13 April 2019 4:47 PM GMT)

விஷ வாயுவை வெளிப்படுத்தும் ஆலையும், அப்பாவி பொதுமக்களும். படம் "உறியடி-2" கதாநாயகன் விஜய்குமார், கதாநாயகி விஸ்மயா, டைரக்‌ஷன் விஜய்குமார்,தயாரிப்பு சூர்யா படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  மற்ற மாநிலங்கள் எல்லாம் “வேண்டாம்” என்று சொன்ன ஒரு ஆலையை தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் தொடங்குகிறார், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு கோடீஸ்வரர். அந்த ஆலை இயங்கும்போது, அதில் இருந்து கசியும் வாயுவில் ஒரு சொட்டு தண்ணீர் கலந்தால் போதும்...விஷவாயு வெளியேறி, அதை சுவாசிப்பவர்களை கொன்று விடும். இந்த ஆபத்தை மறைத்து, ஆலை அதிபர் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார். அவருக்கு ஒரு சாதி கட்சி தலைவரும், இன்னொரு பிரமுகரும் ஆதரவாக இருக்கிறார்கள்.

விஜய்குமாரும், அவருடைய 2 நண்பர்களும் அந்த ஆலையில் பணிபுரிகிறார்கள். அவர்கள் பயந்தது போலவே ஒருநாள் ஆலைக்குள் விபத்து ஏற்படுகிறது. அதில், விஜய்குமாரின் நண்பர் பலியாகிறார். ஆலையில் ஏற்பட்ட விஷவாயுவின் தாக்குதலால்தான் நண்பன் பலியானான் என்று நிர்வாகத்திடம் கூறுகிறார், விஜய்குமார். அதைப்பற்றி கவலைப்படாமல் விஜய்குமாரையும், அவருடைய நண்பரையும் கொல்ல முயற்சி நடக்கிறது. அந்த கொலை வெறியில் இருந்து விஜய்குமாரும், நண்பரும் தப்புகிறார்கள்.

இந்த நிலையில், ஆலையில் இருந்து விஷவாயு வெளியேறுகிறது. அதை சுவாசித்த பொதுமக்கள் கொத்து கொத்தாக செத்து விழுகிறார்கள். விஷவாயுவை கசிய வைத்ததே விஜய்குமார்தான் என்று பொய் புகார் பதிவு செய்து, அவரை போலீஸ் கைது செய்கிறது. ஜாமீனில் வெளியே வரும் விஜய்குமார் தனது கிராம மக்களின் சாவுக்கு காரணமான ஆலை அதிபரையும், கைத்தடிகளாக இருக்கும் அரசியல்வாதிகளையும் எப்படி பழிவாங்குகிறார்? என்பது மீதி கதை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அபாயமும், அதை எதிர்த்து நடந்த போராட்டங்களுமே கதையின் கரு. விஜய்குமார் திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருப்பதுடன், கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். அவர் நடித்தது போலவே தெரியவில்லை. ஒப்பனை எதுவும் இல்லாமல், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞராக, மிக இயல்பாக, கதாபாத்திரமாகவே தெரிகிறார்.

கதாநாயகி விஸ்மயாவுக்கு டாக்டர் கதாபாத்திரம். அழகான புதுமுக நாயகிகளின் பட்டியலில் இவரும் இடம் பெறுவார். இவரைப் போலவே முக்கிய கதாபாத்திரங்களில் அனைவரும் பொருத்தமான புதுமுகங்கள். அதுவே படம் பார்ப்பவர்களை கதையுடன் ஒன்றவைப்பதற்கு காரணமாகி விடுகிறது. ஆலை அதிபரில் இருந்து சாதி கட்சி தலைவர் வரை-அழுத்தமான வில்லன்கள். பொதுமக்களாக அசல் கிராமவாசிகளே வருகிறார்கள்.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை, சில இடங்களில் மிகையாக அலறியிருக்கிறது. வாத்தியங்களை அடக்கி வாசித்திருக்கலாம். கிராமத்தின் சந்து பொந்துகளில் கூட பிரவீன்குமாரின் கேமரா வேகமாக ஓடியிருக்கிறது. அந்த அபாயகரமான ஆலையையும், அதன் ஆபத்துக்களையும் இன்னும் பயப்படுகிற மாதிரி பதிவு செய்திருக்கலாம். அந்த பயத்தை வசன வரிகள் மூலம் படம் பார்ப்பவர்களுக்கு கடத்தியிருக்கிறார், டைரக்டர் விஜய்குமார். ‘கிளைமாக்ஸ்,’ சரியான முடிவு என்று இளைஞர்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.

Next Story