நட்பே துணை


நட்பே துணை
x
தினத்தந்தி 18 April 2019 4:26 PM GMT (Updated: 18 April 2019 4:26 PM GMT)

ஒரு விளையாட்டு மைதானமும், அதை ‘ஸ்வாகா’ செய்ய முயற்சிக்கும் அமைச்சரும். படம் "நட்பே துணை" கதாநாயகன் ஹிப்ஹாப் ஆதி, கதாநாயகி அனகா, டைரக்‌ஷன் பார்த்திபன் தேசிங்கு இயக்கிய படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

கதையின் கரு:  விளையாட்டு மைதானமாக இருக்கும் நிலத்தை வெளிநாட்டு மருந்து கம்பெனிக்கு குத்தகைக்கு விட்டு கோடிக் கணக்கில் பணம் பார்க்க முயற்சிக்கிறார், அமைச்சர் கரு.பழனியப்பன். ஹிப்ஹாப் ஆதியும், பயிற்சியாளர் ஹரிஸ் உத்தமனும் அந்த விளையாட்டு மைதானத்தை அமைச்சரிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

ஆக்கி போட்டியில் ஹிப்ஹாப் ஆதியின் அணி மோதி ஜெயித்தால், மைதானத்தை விளையாட்டு வீரர்களுக்கே விட்டுக் கொடுத்து விடுவோம் என்கிறார்கள் அமைச்சர் கரு.பழனியப்பனும், அவருடைய கைத்தடிகளும். அதன்படி, ஆக்கி போட்டிக்கு 2 அணியினரும் தயாராகிறார்கள். வெற்றி யாருக்கு? அமைச்சர் சிபாரிசு செய்யும் வெளிநாட்டு மருந்து கம்பெனிக்கா அல்லது உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கா...? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

ஹிப்ஹாப் ஆதியின் இளமையும், உடல் மொழியும் அந்த விளையாட்டு சாம்பியன் கதாபாத்திரத்துக்கு கை கொடுத்து இருக்கிறது. அசல் வீரராகவே மாறியிருக்கிறார். இவருக்கும், அனகாவுக்குமான காதலும், மோதலும் ரசிக்க வைக்கின்றன. விளையாட்டு வீராங்கனையாக வரும் அனகா, அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

அமைச்சர் அரிச்சந்திரனாக கரு.பழனியப்பன். சிறந்த டைரக்டர் என்பதால் நடிப்பு சுலபமாக வந்திருக்கிறது. கண்களை உருட்டி மிரட்டாமல், ஆணவமாக சிரிக்காமல், அலறி ஆர்ப்பாட்டம் செய்யாமல், இயல்பான வில்லனாக வெறுப்பை கூட்டுகிறார். வில்லன் போல் அறிமுகமாகி, நேர்மையான பயிற்சியாளராக மனதில் பதிகிறார், ஹரிஸ் உத்தமன். உயரமும், கம்பீர குரலும் கதாபாத்திரத்துக்கு கை கொடுத்து இருக்கிறது.

துணை வில்லனாக குமரவேல், ஹிப்ஹாப் ஆதியின் அம்மாவாக கவுசல்யா ஆகிய இருவரும் ஒரு சில சீன்களில் வந்தாலும், நிறைவு. ஹிப்ஹாப் ஆதியின் இசையில், நிறைய பாடல்கள். புரியாத பாடல் வரிகள். “மொரட்டு சிங்கிள்...” பாடல் மட்டும் விதிவிலக்கு. அரவிந்த்சிங் ஒளிப்பதிவில், கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற குளிர்ச்சியான காட்சிகள்.

ஒரு விளையாட்டு மைதானத்தையும், அதை காப்பாற்ற முயற்சிக்கும் வில்லனையும் முக்கிய கதாபாத்திரங்களாக்கி, சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் பார்த்திபன் தேசிங்கு. படத்தின் ஆரம்ப காட்சிகள், கவனம் ஈர்க்காமல் கடந்து போகின்றன. இடைவேளைக்குப்பின், திரைக்கதை வேகமாக நகர்கிறது. ‘கிளைமாக்ஸ்,’ விறுவிறுப்பின் உச்சம்.

ஆட்டமும், பாட்டுமாக திருவிழா பார்த்த திருப்தி.

Next Story