மிஸ்டர் லோக்கல்


மிஸ்டர் லோக்கல்
x
தினத்தந்தி 26 May 2019 5:14 PM GMT (Updated: 26 May 2019 5:20 PM GMT)

ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞனுக்கும், பணக்கார பெண்ணுக்கும் இடையேயான மோதலும், காதலும். படம் "மிஸ்டர் லோக்கல்" கதாநாயகன் சிவகார்த்திகேயன், கதாநாயகி நயன்தாரா, டைரக்‌ஷன் ராஜேஷ் எம், தயாரிப்பு கே.ஈ.ஞானவேல்ராஜா படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  சிவகார்த்திகேயன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு கார் ‘ஷோரூமில்’ வேலை செய்கிறார். அம்மா ராதிகா சரத்குமார், தங்கை ஹரிஜாவுடன் வசித்து வரும் அவர், ‘பைக்’கில் போகும்போது, அவருடைய ‘பைக்’ மீது நயன்தாராவின் கார் மோதுகிறது. தொடர்ந்து இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது, இவர்களின் மோதல் வளர்கிறது.

இந்த நிலையில், நயன்தாராவின் கார் மீது ஒரு லாரி மோத-காயம் அடைந்த நயன்தாராவை சிவகார்த்திகேயன் காப்பாற்றி, ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். தன் உயிரை காப்பாற்றியதற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவிக்கிறார். அவருக்கு சிவகார்த்திகேயன் மீது காதல் வருவது போல் நடித்து, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறார்.

வெளிநாட்டில் வைத்து சிவகார்த்திகேயன் மீது அபாண்டமாக நயன்தாரா பழிபோடுகிறார். சிவகார்த்திகேயனும், அவருடைய அம்மா, தங்கை ஆகியோரும் திட்டம்போட்டு தன்னை விபத்தில் சிக்க வைத்து, பணத்தையும், அந்தஸ்தையும் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டுகிறார். அதற்காக, சிவகார்த்திகேயனை வெளிநாட்டு போலீசிடம் சிக்க வைக்கிறார்.

அதில் இருந்து சிவகார்த்திகேயன் எப்படி தப்புகிறார்? அவர் நயன்தாராவை பழிவாங்கினாரா, இல்லையா? என்பது மீதி கதை.

நடுத்தர குடும்பத்து கதாநாயகனுக்கும், கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த கதாநாயகிக்கும் இடையேயான மோதலும், காதலும், பலமுறை பார்த்து ரசித்து, சலித்த கதை. நடுத்தர குடும்பத்து இளைஞர் கதாபாத்திரம், சிவகார்த்திகேயனுக்கு அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி, கச்சிதமாக பொருந்துகிறது.

நயன்தாராவுடன் மோதல், அப்புறம் காதல், டூயட் என படம் முழுக்க வருகிறார். நயன்தாராவிடம் சவால் விடுகிறார். ரவுடிகளுடன் தூள் பறக்க சண்டை போடுகிறார். நண்பர் சதீசுடன் சேர்ந்து காமெடி செய்கிறார். ஒரு கதாநாயகனின் வேலைகளை பிசிறு இல்லாமல் செய்து இருக்கிறார்.

கதாநாயகனுடன் மோதல், முறைப்பு, டூயட், காட்சிக்கு காட்சி ஆடம்பர உடையலங்காரம் என பணக்கார பெண்ணாக நயன்தாரா நடிப்பிலும், தோற்றத்திலும் பிரகாசிக்கிறார். சில காட்சிகளில் ஒப்பனையையும் மீறி, அவருடைய வயது தெரிகிறது.

ஒரு நடுத்தர குடும்பத்தின் யதார்த்தமான அம்மாவாக ராதிகா சரத்குமார், அம்மா வேடத்துக்கு மரியாதை சேர்த்து இருக்கிறார். யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர் ஆகிய மூன்று பேரும் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். மூன்று பேரில் யோகி பாபு வரும் காட்சிகளும், அவருடைய வசன காமெடியும் கலகலப்பூட்டுகிறது. தம்பிராமய்யா வில்லனா, காமெடியனா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

ஹிப்ஹாப் ஆதி இசையில், ‘டக்குன்னு...” பாடல் மட்டும் நினைவில் நிற்கிறது. பின்னணி இசையில், வாத்தியங்களின் இரைச்சல் அதிகம். பாடல் காட்சிகளும், வெளிநாடு தொடர்பான காட்சிகளும், பளிச். ராஜேஷ் எம். டைரக்டு செய்து இருக்கிறார். காட்சிகளை கலகலப்புடன் நகர்த்துவதில், தேர்ந்தவர் என பெயர் வாங்கிய டைரக்டர், இந்த படத்திலும் அதை காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார்.

Next Story