2 நண்பர்களும், அவர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசையும்: படம் "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" - விமர்சனம்


2 நண்பர்களும், அவர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசையும்: படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 4:29 PM GMT (Updated: 19 July 2019 4:29 PM GMT)

ரியோ ராஜ், விக்னேஷ்காந்த் இருவரும் நண்பர்கள். வெள்ளை மனம் கொண்ட இருவருக்கும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா சினிமா விமர்சனம்.

கதையின் கரு:   அவர்களின் மனதை புரிந்து கொண்ட பெரிய மனிதர் ராதாரவி தனது நோக்கத்தை நிறைவேற்ற அந்த இரண்டு நண்பர்களையும் பயன்படுத்திக் கொள்கிறார். தான் சொல்கிற மூன்று வேலைகளை செய்து முடித்தால், நிறைய பணம் கொடுப்பதாக அவர்களிடம் ஆசை காட்டுகிறார்.

அவருடைய முதல் வேலை, அந்த இரண்டு பேரும் எல்லா டி.வி.களிலும் ‘பிரேக்கிங் நியூஸ்’சில் வரவேண்டும். அந்த வேலையை இருவரும் வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள். அடுத்த வேலை ஒரு மனநோயாளியை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும். அந்த வேலையையும் நண்பர்கள் இருவரும் புத்திசாலித்தனமாக செய்து முடிக்கிறார்கள்.

அடுத்த வேலை, ரெயில் நிலையத்தில் ஒரு பெண்ணை ஒருவன் கொலை செய்ய வருகிறான். அவனிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும். இந்த வேலையை செய்வதற்கு முதலில் மறுக்கும் நண்பர்கள் இரண்டு பேரும் பிறகு சம்மதிக்கிறார்கள். அந்த வேலையை இரண்டு பேரும் செய்து முடிக்கிறார்களா, இல்லையா? என்பது, படத்தின் உச்சக்கட்ட காட்சி.

எந்த கவலையும் இல்லாமல் நண்பனுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் ரியோ ராஜ், பொருத்தமான தேர்வு. உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்த தெரிந்து இருக்கிறார். இவர் ரியோ ராஜை காதலிக்க-அவரும் இவரை காதலிக்க-இரண்டு பேரும் காதலை வெளிப்படுத்த தயங்கி, ‘கிளைமாக்ஸ்’க்கு முன்பு பகிர்ந்து கொள்வது, சுவாரஸ்யமான காதல் காட்சி.

கதாநாயகி ஷிரின் காஞ்வாலாவிடம் முக வசீகரம் இருக்கிறது. நடிப்பிலும் குறை வைக்கவில்லை. விக்னேஷ்காந்த் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். நல்ல பலன் கிடைக்கவில்லை. ராதாரவி வந்தபின்தான் படம் நிமிர்ந்து நிற்கிறது. வில்லனா, விவகாரமானவரா? என்ற ‘சஸ்பென்சுடன்’ அறிமுகமாகும் இவர், ரியோ ராஜ், விக்னேஷ்காந்த் ஆகிய இருவரிடமும் தனது சோகத்தை பகிர்ந்து கொள்கிற காட்சியில், நெகிழவைத்து விடுகிறார்.

மயில்சாமி இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டும் வருகிறார். அந்த 2 காட்சிகளிலும் கலகலப்பூட்டி விட்டு, மாயமாகி விடுகிறார். உச்சக்கட்ட காட்சியில் வரும் வில்லன், அந்தக்காலத்து சத்யராஜை நினைவூட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார், இசையமைப்பாளர் ஷபீர் ஆகிய இருவரும் டைரக்டர் கார்த்திக் வேணுகோபாலனுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள். படத்தின் முதல்பாதி, பாசஞ்சர் ரெயில் போல் மிதமான வேகம். ரியோ ராஜ், விக்னேஷ்காந்த் இருவரின் ‘காமெடி’யும் பொறுமையை சோதிக்கிறது. நாஞ்சில் சம்பத் தொடர்பான காட்சிகள், அரசியல் சாட்டையடி. இடைவேளைக்குப்பின், கதை எக்ஸ்பிரஸ் வேகம். ‘கிளைமாக்ஸ்,’ மனிதநேயத்துக்கு ஒரு சோதனை.

Next Story