காதல் தோல்வி, பொருளாதர நெருக்கடியால் நிலை குலைகிறார் கதாநாயகன் வெற்றி படம் "ஜீவி" - விமர்சனம்


காதல் தோல்வி, பொருளாதர நெருக்கடியால் நிலை குலைகிறார் கதாநாயகன் வெற்றி  படம் ஜீவி - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 5:00 PM GMT (Updated: 19 July 2019 5:00 PM GMT)

பெற்றோர் நிர்ப்பந்தத்தால் சென்னைக்கு சென்று ஒரு கடையில் ஜூஸ் போட்டு கொடுக்கும் வேலை பார்க்கிறார், படம் ஜீவி சினிமா விமர்சனம்.

கிராமத்தில் வசிக்கும் வெற்றி நண்பர்களுடன் ஊதாரியாக சுற்றுகிறார். பிறகு பெற்றோர் நிர்ப்பந்தத்தால் சென்னைக்கு சென்று ஒரு கடையில் ஜூஸ் போட்டு கொடுக்கும் வேலை பார்க்கிறார். அதே கடையில் கருணாகரனும் வேலை செய்கிறார். இருவரும் ஒரே அறையில் வாடகைக்கு தங்குகின்றனர்.

எதிர்கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் வெற்றிக்கு காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் வெற்றி வருமானத்தில் திருப்தி இல்லாமல் அந்த பெண் காதலை முறிக்கிறார். காதல் தோல்வி, பொருளாதர நெருக்கடியால் நிலை குலைகிறார் வெற்றி. அப்போது வீட்டு உரிமையாளர் ரோகிணி பார்வையற்ற தனது மகள் திருமணத்துக்கு வாங்கிய நகைகளை வைத்துள்ள பீரோ சாவியை தொலைத்து விட்டு தேடுகிறார்.

அந்த சாவி வெற்றி கையில் கிடைக்கிறது. ஊரில் தந்தை நெஞ்சுவலியால் இறந்து போனதாக தகவல் வர ரோகிணி வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடிவிட்டு ஊருக்கு கிளம்பி விடுகிறார் வெற்றி. மீண்டும் சென்னை திரும்பி வந்த அவரை போலீஸ் விசாரிக்கிறது. போலீசில் சிக்கினாரா? நகைகள் என்ன ஆனது? என்பது மீதி கதை.

வெற்றிக்கு முக்கிய படம், இறுக்கம், விரக்தி, சோகம், அதீத புத்திசாலித்தனம் என்று அத்தனை உணர்வுகளையும் முகத்தில் கடத்துகிறார். திருட்டு குற்ற உணர்வை சரிசெய்யும் இடத்தில் மனதில் நிற்கிறார். கருணாகரனுக்கு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரம். அதில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

ரோகிணி அலட்டாமல் யதார்த்தமாக நடித்து ‘ஸ்கோர்’ பண்ணுகிறார். தங்கைக்காக வாழும் அண்ணனாக வருகிறார் மைம்கோபி. அனில் முரளி, தங்கத்துரை, ரமா, மோனிகா, சின்ன கோட்ளா ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்கின்றனர். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதையை திருட்டு நிகழ்வுக்கு பிறகு விறுவிறுப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிநாத். தொடர்பியல், அறிவியல் விதி என்றெல்லாம் திரைக்கதையை சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் வலுவாக நகர்த்தி கவனம் பெற்றுள்ளார். வசனங்கள் ஈர்க்கின்றன.

சுந்தரமூர்த்தி இசையும், பிரவீன்குமார் ஒளிப்பதிவும் பலம் சேர்த்துள்ளன.

Next Story