ஒழுங்கீனமாக இருக்கும் பள்ளிக்கூடத்தை பார்த்து, புதிதாக வந்த தலைமை ஆசிரியைக்கு வருத்தமும், கோபமும் வருகிறது படம் "ராட்சசி" - விமர்சனம்


ஒழுங்கீனமாக இருக்கும் பள்ளிக்கூடத்தை பார்த்து, புதிதாக வந்த தலைமை ஆசிரியைக்கு வருத்தமும், கோபமும் வருகிறது படம் ராட்சசி - விமர்சனம்
x
தினத்தந்தி 19 July 2019 5:45 PM GMT (Updated: 19 July 2019 5:45 PM GMT)

கதாநாயகனே தேவைப்படாத- கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. மோசமான நிலையில் உள்ள ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்தை புதிதாக வந்த ஒரு தலைமை ஆசிரியை முன்னுக்கு கொண்டு வருகிறார். படம் ராட்சசி சினிமா விமர்சனம்.

அந்த தலைமை ஆசிரியை வேடத்தில், ஜோதிகா. அவர் அந்த கிராமத்துக்கு பஸ்சில் வருவது போல் படம் தொடங்குகிறது. அவர் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்க உள்ள பள்ளிக்கூடம், ஒழுங்கீனத்தின் ஒட்டு மொத்தமாக இருப்பதை பார்த்து, வருத்தமும், கோபமும் வருகிறது. மாணவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடத்துக்கு வெளியே இருக்க வேண்டிய பெட்டிக்கடை உள்ளே இருக்கிறது, அந்த கடையில் மாணவர்கள் சிகரெட் வாங்குகிறார்கள். ஆசிரியைகள் அவர்களின் ஓய்வு அறையில் உட்கார்ந்து ஒப்பனை செய்து கொள்கிறார்கள். தலைமை ஆசிரியையின் அறை திறக்கப்படாமல் மூடிக்கிடக்கிறது. உதவி தலைமை ஆசிரியர், ரவுடி போல் காணப்படுகிறார். ஒரே ஒரு ஆசிரியை மட்டும் ஒழுங்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையை மாற்றி, மிக சிறந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொண்ட பள்ளியாக முன்னுக்கு கொண்டுவர முயற்சிக்கிறார், ஜோதிகா. இதற்கு உதவி தலைமை ஆசிரியர் உள்பட சில ஆசிரியர்களும், அரசியல்வாதிகளும் எதிர்ப்பாக இருக்கிறார்கள். ‘கான்வென்ட்’ நடத்தும் ஒரு பணக்காரருக்கு கோபம் வருகிறது. கிராமத்து பள்ளிக்கூடம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்கிறார்.

இத்தனை இடையூறுகளையும் பார்த்தும் ஜோதிகா பயப்படாமல் நேர்மையாக இருந்து அந்த பள்ளிக்கூடத்தை ‘நம்பர்-1’ ஆக மாற்றி காட்டுவது, கதை.

இதற்கு முன் பள்ளிக்கூடத்தை மையக்கருவாக கொண்ட படங்கள் வந்துள்ளன. அந்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கோணத்தில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அளவெடுத்து தைத்த ஆடை மாதிரி தலைமை ஆசிரியை வேடத்துக்கு ஜோதிகா அத்தனை கச்சிதமாக பொருந்துகிறார்.

தன் மீது கோபம் கொண்ட உதவி தலைமை ஆசிரியருக்கும், அரசியல்வாதி அருள்தாசுக்கும் பயப்படாமல், நேர்மையாக தனது பணியை தொடர்வது, மூன்று கேள்விகளை கேட்டு திணற அடிப்பது, பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் தோழியைப்போல் பழகி, மதிய உணவை பங்கிட்டுக் கொள்வது ஆகிய காட்சிகளில், ஜோதிகா தலைமை ஆசிரியையாகவே வாழ்ந்திருக்கிறார்.

அப்பாவின் மரணத்தை பார்த்து மவுனமாக கண்கலங்கும் இடத்திலும், பூர்ணிமா சொல்கிற ‘பிளாஷ்பேக்’கை கேட்டு தனது காதலை நினைவு கூர்கிற காட்சியிலும், நெகிழவைத்து விடுகிறார், ஜோதிகா. பூர்ணிமா முதல்முறையாக வயதான அம்மா வேடத்துக்கு வந்து இருக்கிறார். நல்ல ஆசிரியையாக அவர் மனதில் பதிகிறார். மகனை பற்றி சொல்கிற இடத்தில், உருக்கம்.

யோகிபாபு இல்லாத சமீபகால படம், இது. காமெடி வேலையை அந்த சுட்டிப்பயல் கவனித்துக் கொள்கிறான். அவன் கன்னத்தில் ஜோதிகா முத்தம் கொடுத்ததும், அவரை அவன் காதலுடன் பார்ப்பதும், ஜோதிகாவை பெண் பார்க்க வருவதும், விரசம் இல்லாத அக்மார்க் நகைச்சுவை. சமூக பிரச்சினைகள் பற்றி கருத்து சொல்லும் ஆட்டோ டிரைவர் மூர்த்தியும் தமாஷ் செய்கிறார். தினமும் தனது ஆட்டோவில் வரும் ஜோதிகா என்ன வேலை செய்கிறார்? என்பதை மூர்த்தி தெரிந்து கொள்ளாமல் இருப்பது, காதுல பூ.

கதையின் போக்குக்கு ஏற்ப கேமரா நகர்ந்து இருக்கிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ஒன்று கூட நினைவில் இல்லை. கவுதம்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். சில காட்சிகள் ஆவண படம் போல் இருக்கிறது. சமூக விழிப்புணர்வு கொண்ட ஒரு கருத்தை அழகாகவும், ஆழமாகவும் பதிவு செய்ததற்காக, பாராட்டுகள்.

Next Story