கதாநாயகனுக்கு கபடி சாம்பியன் ஆக ஆசை: படம் வெண்ணிலா கபடி குழு-2 - விமர்சனம்


கதாநாயகனுக்கு கபடி சாம்பியன் ஆக ஆசை: படம் வெண்ணிலா கபடி குழு-2 - விமர்சனம்
x
தினத்தந்தி 20 July 2019 6:32 PM GMT (Updated: 20 July 2019 6:32 PM GMT)

கதாநாயகன் விக்ராந்த் தனது தந்தையைப்போல் கபடி சாம்பியன் ஆக ஆசை, மாஸ்டர் கிஷோரை சந்தித்து கபடி அணியை உருவாக்குகிறார். அவருடைய காதலும், லட்சியமும் ஜெயித்ததா, இல்லையா? படம் வெண்ணிலா கபடி குழு-2 சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  பசுபதி, ஒரு முன்னாள் கபடி சாம்பியன். திருமணமாகி மனைவி, குழந்தைகள் என்று ஆனபிறகும் கூட, கபடி மீதான மோகம் அவருக்கு குறையவில்லை. எந்த ஊரில் கபடி விளையாட்டு நடந்தாலும், அங்கே அவர் ஆஜராகி விடுகிறார். அவருடைய மகன் விக்ராந்த், அந்த கிராமத்தில், இசைத்தட்டு விற்கும் கடை நடத்தி வருகிறார்.

ஒரு சுபயோக சுப தினத்தில் அவர், அர்த்தனா பினுவை பார்க்கிறார். முதல் பார்வையிலேயே காதல் வந்து விடுகிறது. அவரை பின்தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்துகிறார். அர்த்தனா பினுவுக்கும் விக்ராந்த் மீது காதல் வருகிறது. இந்த காதலை அர்த்தனா பினுவின் அப்பா ரவிமரியா எதிர்க்கிறார். காதலர் விக்ராந்தை மறந்து விடுவதாக மகள் அர்த்தனா பினுவிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு, அவரை வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.

இதேபோல் விக்ராந்தை அவருடைய தந்தை பசுபதி வெளியூருக்கு அனுப்புகிறார். விதி, காதலர்கள் இருவரையும் ஒரே ஊரில் கொண்டு போய் சேர்க்கிறது. விக்ராந்த் தனது தந்தையைப்போல் கபடி சாம்பியன் ஆக ஆசைப்படுகிறார். மாஸ்டர் கிஷோரை சந்தித்து அவர் தலைமையில் ஒரு கபடி அணியை உருவாக்குகிறார். அவருடைய காதலும், லட்சியமும் ஜெயித்ததா, இல்லையா? என்பது மீதி கதை.

விக்ராந்த், கபடி வீரர் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருந்துகிறார். கபடி போட்டிகளின்போது அவர் எதிர் அணி வீரர்களின் முதுகில் புரண்டபடி, சுழன்று ஆடும் வித்தை ரசிக்கும்படி இருக்கிறது. அர்த்தனா பினுவுடன் காதல்-டூயட் காட்சிகளில், அவருடைய நடிப்புக்கும், ஆட்டத்துக்கும் அதிக மார்க் கொடுக்கலாம்.

அர்த்தனா பினுவுக்கு வசீகர முகம். இவருடைய காதல் விவகாரம் பற்றி கேள்விப்பட்ட அப்பா ரவிமரியா கொட்டும் மழையில் நனைந்தபடி நிற்க-அதைப்பார்த்து இவர் உருக-“உங்க கவுரவத்துக்கு எதிராக நடந்து கொள்ள மாட்டேன்” என்று சத்தியம் செய்யும் காட்சியில், அர்த்தனா நடிப்பிலும் பெயர் வாங்குகிறார். பாசமுள்ள அப்பாவாக பசுபதி, நெகிழவைக்கிறார். சூரியின் புரோட்டா கடை காமெடி, தியேட்டரை அமர்க்களப்படுத்துகிறது. கிஷோர், ரவிமரியா இருவரும் கதாபாத்திரங்களாக மாறும் திறன் கொண்ட நடிகர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள்.

செல்வகணேஷ் இசையில் பாடல்கள், சுகமான ராகங்கள். கிராமத்து காட்சிகளை பதிவு செய்த நுட்பத்தில், கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு பேசப்படுகிறது. படத்தின் ஆரம்ப காட்சியை மங்களகரமாக தொடங்குவதற்கு பதில், கழிவறையை காட்டி, மூக்கை பிடிக்க வைத்தது, அருவருப்பு.

இந்த காட்சியை தவிர்த்து பார்த்தால், விறுவிறுப்பான கதையோட்டம் உள்ள ஜனரஞ்சகமான படம், ‘வெண்ணிலா கபடி குழு-2.’

Next Story