விமர்சனம்
தனது உயிரை கொடுத்து பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக கதாநாயகன் சூர்யா - படம் காப்பான் விமர்சனம்

தனது உயிரை கொடுத்து பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக கதாநாயகன் சூர்யா - படம் காப்பான் விமர்சனம்
சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி சாயிஷா சய்கல் கே.வி.ஆனந்த் ஹாரிஸ் ஜெயராஜ் எம்.எஸ். பிரபு
தனது உயிரை கொடுத்து பிரதமரை பாதுகாக்கும் அதிகாரியாக கதாநாயகன் எப்படியெல்லாம் போராடுகிறார். படம் காப்பான் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
Chennai
கதையின் கரு:  ஒரு கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிற இளைஞர், சூர்யா.  பக்கத்து ஊர்களில் உள்ள நிலங்கள் எல்லாம் காய்ந்து போய் கிடக்கிறது. சூர்யா ஊரில் மட்டும் பயிர்கள் எல்லாம் பச்சை பசேர் என பசுமை புரட்சியுடன் காணப்படுகிறது. இதற்கு காரணம் இயற்கை விவசாயம்தான் என்கிறார், சூர்யா.

அவர் திடீரென்று வில்லனைப்போல் மாறுகிறார். அந்த கிராமத்தில் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை அழித்து ஒழிக்கிறார். அவர் உண்மையில் மத்திய அரசின் உளவுப்படை அதிகாரி. பிரதமர் மோகன்லால் உத்தரவின்படி, சூர்யா சத்தமே இல்லாமல் ஆயுதங்களை அழித்து ஒழிக்கிறார். அவரை பிரதமர் மோகன்லால் தனது ‘எஸ்.பி.ஜி. பாதுகாப்பு படை அதிகாரியாக நியமிக்கிறார். (எஸ்.பி.ஜி. படை என்பது பிரதமர் உயிரை பாதுகாப்பதற்காக தனது உயிரை கொடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவு)

தீவிரவாதிகளிடம் இருந்தும், உள்நாட்டு துரோகி ஒருவரிடம் இருந்தும் பிரதமரை பாதுகாக்க சூர்யா எப்படியெல்லாம் போராடுகிறார்? என்பது மீதி கதை.

கிராமத்து விவசாயியாக அறிமுகமாகும் சூர்யா, அந்த கதாபாத்திரம் மூலம் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? என்று விளக்கும் காட்சிகளில், ஒரு கிராமத்து இளம் விவசாயியை கண்முன் நிறுத்துகிறார். அவர் பிரதமரின் எஸ்.பி.ஜி. படை அதிகாரியாக வரும் காட்சிகளில், கம்பீரம் காட்டுகிறார். சாயிஷாவுடனான காட்சிகளில் ஒட்டியும், ஒட்டாமல் காதலை வெளிப்படுத்துகிறார். சண்டை காட்சிகளில் சூர்யாவின் சாகசங்கள் வியக்க வைக்கின்றன. படத்தின் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ப சண்டை காட்சிகளில் சூர்யா துணிச்சலின் உச்சம். குறிப்பாக, ரெயில் கூரை மீதான சண்டை காட்சியில், இருக்கை நுனியில் அமர வைக்கிறார்.

சூர்யா மீது காதல்வசப்பட்டு அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் பெண்ணாக வருகிறார், சாயிஷா. அவர் மீது பிரதமரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்படும் காட்சியில், நடிப்பதற்கு சந்தர்ப்பம். சாயிஷா பயன்படுத்திக் கொண்டார்.

பிரதமர் கதாபாத்திரத்தில் மோகன்லால், மிக சரியான தேர்வு. அவருடைய மகனாக ஆர்யா. பிரதமரின் மகனாக எந்த பொறுப்பும் இல்லாத இளைஞராக ஜாலியான கதாபாத்திரத்தில், ஆர்யா கச்சிதம். மிகப்பெரிய தொழில் அதிபராக பொம்மன் இரானி, ஆர்ப்பாட்டம் இல்லாத வில்லனாக மிரட்டியிருக்கிறார். பிரதமரின் பாதுகாப்பு படையை சேர்ந்த இன்னொரு அதிகாரியாக-சூர்யாவின் நண்பராக சமுத்திரக்கனி, ஒன்றிரண்டு காட்சிகளில் வந்தாலும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்து இருக்கிறார். திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் பூர்ணாவுக்கு ஊறுகாய் மாதிரி ஒரு கதாபாத்திரம்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, அழகான காஷ்மீருக்கு மேலும் அழகு சேர்த்து இருக்கிறது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 2 பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. வேகமான கதையோட்டத்துக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது, பின்னணி இசை. விவசாயத்தின் மேன்மையை திரைக்கதைக்குள் மிக நுட்பமாக புகுத்தியிருக்கிறார், டைரக்டர் கே.வி.ஆனந்த். கார்பரேட் நிறுவனங்களால் விவசாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை உருக்கமாக சித்தரித்து இருக்கிறார். இது தொடர்பான வசன வரிகளுக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு. சிலிபெரா என்ற பூச்சிகள் தொடர்பான காட்சி, பயமுறுத்துகிறது.

படத்தில், துப்பாக்கி சத்தம் அதிகம். வில்லன் பொம்மன் இரானி பிரதமர் வீட்டுக்குள் மிக சுலபமாக நுழைவதும், புதிய பிரதமர் ஆர்யாவுடன் வாக்குவாதம் செய்வதும், நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள். ஒரே படத்துக்குள் பல்வேறு பிரச்சினைகளை புகுத்தியிருப்பது, ‘ஓவர் டோஸ்.’ இந்த குறைகளை தவிர்த்து பார்த்தால், ஜனரஞ்சகமாகவும், விறுவிறுப்பாகவும் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் கே.வி.ஆனந்த்.

முன்னோட்டம்

பொன்மகள் வந்தாள்

ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.

பதிவு: மே 29, 11:09 PM

மாஸ்டர்

விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 17, 05:33 AM

சக்ரா

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 13, 12:13 AM
மேலும் முன்னோட்டம்