சாதி வெறியில் நடக்கும் கொலைகள் படம் அசுரன் - விமர்சனம்


சாதி வெறியில் நடக்கும் கொலைகள் படம் அசுரன் - விமர்சனம்
x
தினத்தந்தி 7 Oct 2019 12:30 AM GMT (Updated: 7 Oct 2019 12:30 AM GMT)

தனுஷ்-மஞ்சுவாரியர் இருவரும் கணவர்-மனைவி. ஏழை விவசாய குடும்பம். இவர்களுக்கு டீஜய் அருணாசலம், கென் கருணாஸ் என 2 மகன்கள். ஒரே ஒரு மகளும் இருக்கிறாள்.

கதையின் கரு:  இந்த குடும்பத்துக்கும், மேட்டுக்குடியை சேர்ந்த தொழில் அதிபர் ‘ஆடுகளம்’ நரேனுக்கும் இடையே விரோதம் இருந்து வருகிறது. ஒரு மோதல் காரணமாக தனுசை ஊராரின் கால்களில் விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்க வைக்கிறார், நரேன்.

அதை கேள்விப்பட்ட தனுசின் மூத்த மகன் டீஜய் அருணாசலம், நரேனை அடித்து அவமானப்படுத்துகிறார். இது, நரேனுக்குள் கொலை வெறியை ஏற்படுத்துகிறது. டீஜய் அருணாசலத்தை கொலை செய்து, உடலை நிர்வாணமாக பொட்டல் காட்டில் வீச செய்கிறார். அண்ணனை கொன்ற நரேனை தம்பி கென் வெட்டி சாய்க்கிறார். அவனை கொலை செய்ய நரேன் குடும்பத்தினர் தேடுகிறார்கள். தனுஷ் தனது மகனுடன் காட்டுக்குள் அடைக்கலமாகிறார். அங்கேயும் கொலை வெறியர்கள் வந்து விடுகிறார்கள்.

அவர்களிடம் இருந்து மகன் கென்னை காப்பாற்றும் தனுஷ், வக்கீல் பிரகாஷ்ராஜ் மூலம் சமரசத்துக்கு ஏற்பாடு செய்கிறார். இதற்காக, தனுஷ் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை நரேன் குடும்பத்துக்கு எழுதிக் கொடுக்கிறார். அதை பெற்றுக்கொண்ட நரேன் குடும்பத்தினர், சமாதானம் ஆவது போல் நடித்து, கென்னை போட்டுத்தள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கென் தப்பினாரா, இல்லையா? தனுஷ் என்ன ஆகிறார்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

தனுஷ் இளைஞராகவும், முதியவராகவும் 2 விதமான தோற்றங்களில் வருகிறார். இடைவேளை வரை அப்பா தனுஷ், இடைவேளைக்குப்பின் ‘பிளாஷ்பேக்’கில், மகன் தனுஷ். இளைஞர், முதியவர் என 2 வேடங்களிலும் நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். அப்பா வேடத்தில் பொறுமையையும், நிதானத்தையும் காட்டியிருக்கிறார். மகன் தனுஷ், ஒரு கிராமத்தின் எழுச்சி மிகுந்த இளைஞராக தெரிகிறார். முறைப்பெண்ணுடன் காதல், அவளுக்கு நடந்த அவமானத்துக்கு காரணமானவனுடன் மோதல், மகனை காப்பாற்ற போராடும் தந்தை என படம் முழுக்க தனுஷ் கொடி பறக்கிறது. சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்றவர் என்பதை பல இடங்களில், நிரூபிக்கிறார்.

அவருக்கு பொருத்தமான ஜோடி (மனைவி), மஞ்சுவாரியர். ஒப்பனை எதுவும் இல்லாமல், அழுக்கு சேலை, எண்ணை வடிந்த முகம் என ஒரு ஏழை குடும்பத்து மனைவியாக, 3 பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறார். மூத்த மகனாக வரும் டீஜய் அருணாசலம், கருணாசின் மகன் கென் கருணாஸ் ஆகிய இரண்டு பேரிடமும் தனி கதாநாயகர்களாக உயரும் தகுதி தெரிகிறது.

பிரகாஷ்ராஜ் ஏழைகளுக்கு உதவும் வக்கீலாகவும், பாலாஜி சக்திவேல் கிராமத்து போலீஸ் அதிகாரியாகவும் மனதில் நிற்கிறார்கள். பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், ஏ.வெங்கடேஷ், பவன், சுப்பிரமணியம் சிவா, நிதிஷ் வீரா ஆகியோரின் கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவை.

காடுகளின் அழகையும், ஆபத்துகளையும் ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் விதம், படம் பார்ப்பவர்களை அந்த இடங்களுக்கே அழைத்து செல்கிறது. ஜீ.வி.பிரகாசின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. படத்தில் ரத்த சேதம் அதிகம்.

டைரக்டர் வெற்றிமாறன் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார். தொடக்க காட்சியே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை பதற்றத்திலேயே உட்கார வைக்கிறது. கொலைகளும், அவை ஏற்படுத்தும் விளைவுகளும் பயத்தை ஏற்படுத்துகின்றன.

Next Story