ஹாலிவுட் பாணியில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாத-விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படம் கைதி


ஹாலிவுட் பாணியில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாத-விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படம் கைதி
x
தினத்தந்தி 28 Oct 2019 8:07 AM GMT (Updated: 28 Oct 2019 8:07 AM GMT)

கார்த்தி பத்து வருட ஜெயில் தண்டனையை முடித்து விட்டு, அவருடைய ஒரே மகளை பார்ப்பதற்கு வெளியே வருகிறார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் பிடித்து வைக்கிறது. அந்த சமயத்தில் போலீசார் பல கோடி மதிப்புள்ள போதை மருந்தை மடக்கி பிடித்து, பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் வைத்து பூட்டுகிறார்கள்.

போதை மருந்தை கடத்தல் கும்பல் மீட்க முயற்சிக்கிறது. இதற்காக போலீசார் குடிக்கும் மதுவில் போதை மருந்தை கலந்து அத்தனை போலீசாரையும் கொல்ல முயற்சிக்கிறார்கள். போதை மருந்து கலந்த மதுவை குடித்த போலீசார் மயங்கி விழுகிறார்கள். அவர்களுக்கு 4 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இறந்து விடுவார்கள் என்று பக்கத்து ஊர் டாக்டர் எச்சரிக்கிறார்.

மது அருந்தாத போலீஸ் அதிகாரி நரேன், அத்தனை போலீசாரையும் லாரி மூலம் காப்பாற்ற முயற்சிக்கிறார். அதற்கு லாரி ஓட்ட தெரிந்த ஒருவர் தேவை. கார்த்திக்கை வற்புறுத்தி லாரியை ஓட்ட வைக்கிறார், நரேன். “மயங்கிய நிலையில் உள்ள போலீசாரில் ஐந்து அதிகாரிகளை மட்டும் என்னிடம் ஒப்படைத்து விடு” என்று நரேனிடம் போதை மருந்து கும்பல் மிரட்டுகிறது.

அதற்கு நரேன் மறுப்பதால், வழிநெடுக அடியாட்களை அனுப்பி போலீசாரை கொல்ல முயற்சிக்கிறது, போதை மருந்து கும்பல். அவர்களை எதிர்த்து கார்த்தி போராடுகிறார். அதில் வெற்றி யாருக்கு? என்பது, ‘கைதி’யின் மீதி கதை.

தாடி-மீசையுடன் ‘கைதி’ வேடத்தில் கார்த்தி கச்சிதம். அவர் ஜெயிலுக்கு போனது எப்படி என்பதை சொல்லும்போதும், மகளுடன் போனில் பேசும்போதும், இறுதி காட்சியில், “ஏன் அழறே?” என்று மகள் கேட்க- “இனிமேல் அழ மாட்டேன்ம்மா” என்று உருகும்போதும், அப்பா-மகளின் பாசப்போராட்டங்கள் நெகிழ வைக்கிறது.

சண்டை காட்சிகளில் கார்த்தி பதற வைக்கிறார். குறிப்பாக, நடுக்காட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சியில், பதற்றத்தின் உச்சம். கார்த்தியின் மகளாக பேபி மோனிகா அனுதாபத்தை அள்ளுகிறார். நரேன், போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்துகிறார். கடத்தல் கும்பலின் தலைவர்களில் ஒருவரை ஜார்ஜ் அடித்து வீழ்த்தும் காட்சியில், கைதட்டுகிறார்கள். வில்லன் ஹரீஸ் உத்தமனுக்கு முக்கியத்துவம் இல்லை. ஜன்னலை பிடித்துக்கொண்டு கத்துவதோடு சரி. ரமணா, மிரட்டியிருக்கிறார்.

படம் முழுவதும் இரவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. நடுநிசி காட்சிகளையும், அதிகாலை காட்சிகளையும் படமாக்கி இருக்கும் விதத்தில், ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் கவனம் ஈர்க்கிறார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசையில் கதையுடன் ஒன்ற வைத்து விடுகிறார்.

பயணம் சார்ந்த கதையை அடர்ந்த காடுகளுக்குள் படமாக்கி, விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் லோகேஷ் கனகராஜ். ஒரு தந்தைக்கும், மகளுக்குமான கருவை அடிப்படையாக வைத்து காட்சிக்கு காட்சி மிரள வைத்து விடுகிறார். படத்தின் பெரும்பகுதி சண்டை காட்சிகளாக இருப்பது, திருஷ்டி பரிகாரம்.

“என்ஜினீயரிங் படித்த நீங்க போதை போடலாமா?” “அதனால்தான் போதை போடுகிறோம்...” “உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?” “இல்லை” நம்பிக்கை வரும்... என்ற வசன காட்சிகளுக்கு தியேட்டரில் அமோக வரவேற்பு.

Next Story