பெண்கள் கால்பந்து விளையாட்டு பின்னணியில் வந்துள்ள அதிரடி படம் 'பிகில்'


பெண்கள் கால்பந்து விளையாட்டு பின்னணியில் வந்துள்ள அதிரடி படம் பிகில்
x
தினத்தந்தி 28 Oct 2019 8:10 AM GMT (Updated: 28 Oct 2019 8:10 AM GMT)

மக்களுக்கு நன்மை செய்யும் தாதா ராயப்பனாக விஜய். அவருடைய மகன் மைக்கேலாக வரும் இன்னொரு விஜய் கால்பந்து விளையாட்டு வீரர். மகனை தேசிய போட்டியில் பங்கெடுக்க வைத்து கோப்பையை வாங்க வேண்டும் என்பது ராயப்பன் ஆசை. இதற்காக தனது தாதா கறை படியாமல் வளர்க்கிறார்.

மைக்கேலுக்கும், நயன்தாராவுக்கும் காதல். அந்த காதலை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்கிறார். தேசிய கால்பந்து போட்டிக்கு புறப்படும் மைக்கேலை வழியனுப்ப ரெயில் நிலையத்துக்கு வருகிறார் ராயப்பன். அப்போது ராயப்பனை எதிரிகள் குத்திக் கொல்கிறார்கள். அதை பார்க்கும் மைக்கேல் அதிர்ச்சியாகி தந்தையை கொன்றவர்களை அந்த இடத்திலேயே பழி தீர்க்கிறார். இதனால் அவரது விளையாட்டு வீரர் கனவு தகர்ந்து, தந்தையைப்போல் தாதாவாகிறார். 

சக விளையாட்டு வீரரான கதிரை அழைத்து, கால்பந்து பயிற்சியாளராக்கி விளையாட்டில் ஆர்வம் உள்ள ஏழை பெண்களுக்கு பயிற்சி அளிக்க வைக்கிறார். தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அந்த பெண்கள் தகுதியாகிறார்கள். அவர்களுடன் போட்டியில் பங்கேற்க டெல்லி செல்ல கதிர் தயாராகும்போது, விஜய்யை தாக்க வரும் ரவுடியால் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். 

அவரால் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பு ஏற்கிறார் மைக்கேல் விஜய். ரவுடி பயிற்சியாளராக இருப்பதா? என்று எதிர்ப்புகள் வருகின்றன. அதை மீறி போட்டியில் தனது அணியை ஜெயிக்க வைத்தாரா? என்பது மீதி கதை.

ராயப்பன் வேடத்தில் தாதாவாக கெத்து காட்டுகிறார் விஜய். காரில் எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்க எதிரிகள் ஏரியாவுக்குள் ஒற்றை ஆளாக புகுந்து அத்தனை பேரையும் துவம்சம் செய்யும் அதிரடியில் ஆரவாரம். ரவுடித்தனங்களில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டுகள்தான் உதவும் என்று மகன் விஜய்யிடம் சொல்லி தன்னை பாசமாக கட்டிப்பிடிக்க வைப்பதும், ரெயில் நிலையத்தில் தன்னை எதிரிகள் குத்தி சாய்த்த நிலையில், பழிவாங்க மகன் அரிவாள் எடுத்து ரவுடியாக மாறும் காட்சியை பார்த்து பதறுவதிலும் பாசமான தந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

மைக்கேலாக வரும் விஜய் கலகலப்பு. போலீஸ் வேடத்தில் மாணவர்களை தாக்கும் ரவுடிகளை விரட்டி அடித்து நொறுக்கும் ஆரம்ப சண்டையில் அனல். கால்பந்து பயிற்சியாளராக மாறியபின் புதிய ஸ்டைல் காட்டுகிறார். வீராங்கனைகள் உதாசினம் செய்யும்போது கலங்குவது, தோல்வியில் இருக்கும் அவர்களுக்கு கடும் பயிற்சிகள் அளித்து திறமைசாலிகளாக்குவது என்று கதாபாத்திரத்துக்கு அழுத்தம் சேர்க்கிறார். 

நயன்தாரா வசீகரிக்கிறார். ரெயில் நிலையத்தில் முறைத்தவர்களை விஜய் வைத்திருக்கும் வெற்றி கோப்பையை வைத்து அடித்து துரத்துவது கலகலப்பு. கதிர் சிறிது நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார். திராவக வீச்சாலும், திருமணத்தாலும் விளையாட்டு கனவுகள் கலைந்து வீட்டில் முடங்கிய இரண்டு பெண்களை விஜய் அழைத்து வந்து போட்டியில் பங்கெடுக்க வைக்கும் காட்சிகள் உயிரோட்டமானவை. 

அணி மானேஜராக வரும் விவேக், யோகிபாபு சிரிக்க வைக்கின்றனர். ஷாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி வில்லத்தனத்தில் மிரட்டுகின்றனர். ஆனந்தராஜ், ஞானசம்பந்தம், தேவதர்ஷினி ஆகியோரும் உள்ளனர். வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா உள்ளிட்ட பெண்கள் அனைவரும் கதாபாத்திரத்தில் கச்சிதம். காட்சிகள் நீளத்தை குறைத்து இருக்கலாம். விளையாட்டு பின்னணியில் பெண்களை பெருமைப்படுத்தும் படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் அட்லி. 

காதல், கலகலப்பு, அடிதடி என்று காட்சிகளை விறுவிறுப்பாகவும் நகர்த்துகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிங்கப்பெண்ணே பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் பலம். ஜே.கே.விஷ்ணுவின் கேமரா மைதானத்தில் சுழன்று கால்பந்து விளையாட்டை அபாரமாக காட்சிப்படுத்தி உள்ளது.

Next Story