ஒரு அடிதடி வீரனும், அவனுக்கு எதிரான வில்லன்களும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்


ஒரு அடிதடி வீரனும், அவனுக்கு எதிரான வில்லன்களும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்
x
தினத்தந்தி 10 Jan 2020 9:31 AM GMT (Updated: 10 Jan 2020 9:31 AM GMT)

சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் முன்னோட்டம்.

கதையின் கரு:  ஆரவ் அடிதடி, வெட்டு, குத்து என அலையும் வீரர். அமைச்சர் சாயாஜி ஷின்டேயின் அடியாளாக இருக்கிறார். இவருடைய அம்மா, ராதிகா சரத்குமார். அம்மாவை கண்டாலே ஆரவ் எரிந்து விழுகிறார். ஆனால், அம்மா ராதிகாவோ மகனின் வீரதீர செயல்களுக்கு எல்லாம் தானே காரணம் என்று ‘ரீல்’ விடுகிறார். பந்தா காட்டுகிறார்.

ஆரவை எங்கே எப்போது போட்டுத்தள்ளுவது என்று சதித்திட்டங்களை தீட்டுகிறார், ஹரிஸ் பெராடி. ஆரவை அழித்தால்தான் கட்சியில் முன்னேற முடியும் என்று அவர் நினைக்கிறார். இந்த நிலையில், ஆரவின் வீரத்தையும், துணிச்சலையும் பார்த்து அவர் மீது காவ்யாவுக்கு காதல் வருகிறது. ஆனால், அவரை கண்டுகொள்ளாமல், ஆரவ் அலட்சியப்படுத்துகிறார்.

காவ்யா மீது அவருடன் படிக்கும் அப்பாவி மாணவர் விஹான் காதல்வசப்படுகிறார். ஆரவ்வை ‘என்கவுன்டர்’ செய்ய வட மாநிலத்தை சேர்ந்த பிரதீப் ராவத் வரவழைக்கப்படுகிறார். இவர் ‘என்கவுன்டர்’ செய்யும்போது, அப்பாவி மாணவரான விஹான் குறுக்கே பாய்ந்து உயிரை இழக்கிறார். அவரின் ஆவி ஆரவ் உடலுக்குள் செல்கிறது. கோழையான விஹானின் ஆவி ஆரவுக்குள் புகுந்ததால், இவரும் கோழையாக மாறுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளே மீதி கதை.

‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான ஆரவுக்கு பெரிய திரையில் நாயகனாகும் அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அடிதடிக்கு அஞ்சாத ரவுடி வேடம் இவருக்கு பொருந்தி இருக்கிறது. சண்டை காட்சிகளில், ரசனை கூட்டுகிறார். அம்மா ராதிகா சரத்குமாரிடமும், காதலி காவ்யாவிடமும் கோபப்படுகிற காட்சிகளில், சிரிக்க வைக்கிறார். காவ்யா நடிக்க தெரிந்த அழகான நாயகி. காதலின் மகிமைகளையும், ஏமாற்றங்களையும் கண்களால் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராதிகா சரத்குமாருக்கு இதுவரை நடித்திராத நகைச்சுவை வேடம். சுருட்டு பிடிப்பது, ‘பைக்’ ஓட்டுவது என கதாநாயகர்களுக்கும், வில்லன்களுக்கும் சவால் விட்டு இருக்கிறார். அவர் ஆரவிடம் அடிவாங்குவதை ரசிக்க முடியவில்லை. சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெராடி இருவரும் வில்லன் வேலைகளை மிரட்டலாக செய்து இருக்கிறார்கள். ஆரவின் வலது கரமாக வரும் ஆதித்யா மேனன், சாம்ஸ், மதன்பாப் ஆகியோரும் ரசனையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தள தள பள பள அழகி நிகிஷா பட்டேல், வசீகர உடற்கட்டை காட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டு இருக்கிறார்.

பின்னணி இசையில், இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆவிகள் தொடர்பான காட்சிகளில் கே.வி.குகனின் கேமரா ஜாலம் காட்டியிருக்கிறது. இரண்டு தாதாக்களின் மோதல், மகா பலம் பொருந்திய நாயகனின் சாகசங்கள் என படத்தின் முதல் பாதியை ஜனரஞ்சகமாக காட்டியிருக்கும் டைரக்டர் சரண், அடுத்த பாதிக்கு ஆவிகளை நம்பியிருக்கிறார். ஆவிகள் தொடர்பான காட்சிகளில் பயமும் இல்லை. மிரட்டலும் இல்லை. ‘கிளைமாக்ஸ்,’ காரசாரமான மசாலா.

Next Story