இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் - விமர்சனம்


இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் - விமர்சனம்
x
தினத்தந்தி 10 Jan 2020 11:13 AM GMT (Updated: 10 Jan 2020 11:13 AM GMT)

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் விமர்சனம்.

கதையின் கரு:  இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட நிறைய குண்டுகள் கடலுக்குள் கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றாக தமிழக கடற்கரையோரம் ஒதுங்குகின்றன. அப்படி ஒரு குண்டு மகாபலிபுரம் கடற்கரையோரம் ஒதுங்குகிறது. அதை போலீஸ் கைப்பற்றுகிறது. அது போலீஸ் நிலையத்தில் இருந்து திருடப்பட்டு பழைய பொருட்களை வாங்கி விற்கும் கடைக்கு வந்து சேருகிறது.

அதை போலீஸ் ஒரு பக்கம் தேடுகிறார்கள். ஊடக நிருபர் ரித்விகாவும், அவரது தோழியும் இன்னொரு பக்கம் தேடுகிறார்கள். குண்டு என்று தெரியாமல் அதை லாரி டிரைவர் தினேஷ் புதுச்சேரிக்கு எடுத்து செல்கிறார். அவருக்கு குண்டு பற்றிய பயங்கரம் தெரியவந்ததும், அதை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுக்குள் புதைத்து விடுகிறார்.

பக்கத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருப்பது தெரிந்ததும், புதைக்கப்பட்ட குண்டை தோண்டி எடுத்து, வேறு இடத்துக்கு கடத்த முயற்சிக்கிறார். குண்டு காணாமல் போகிறது. இதற்கிடையில் தினேசுக்கும், ஆனந்திக்கும் இடையே காதல், அதை விரும்பாத ஆனந்தியின் அப்பா, மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையுடன் நிச்சயம் செய்கிறார். விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில், ஆனந்தி வீட்டில் இருந்து தப்பி ஓடுகிறார். பழைய லுங்கி-சட்டை, முகம் நிறைய தாடி சகிதம் லாரி டிரைவர் வேடம், தினேசுக்கு பொருந்தியிருக்கிறது. அப்பா மீதான பாசம், அவரை நினைத்து அழுகை, காதலி ஆனந்தியுடன் போனில் கொஞ்சல், போதையில் முதலாளியையே அடிக்கப் பாய்வது என ஒரு லாரி டிரைவரின் சுகம், சோகம் இரண்டையும் அதன் யதார்த்தம் மாறாமல், மிக இயல்பாக நடித்து இருக்கிறார், தினேஷ்.

அழகான ஆனந்தி, அழுக்குப்பையன் தினேசை ஆழமாக காதலிக்கிறார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்களுடன் வாக்குவாதம் செய்கிற காட்சிகளில், காதல்வசப்பட்ட பெண்ணாகவே மாறியிருக்கிறார். ஊடக நிருபராக ரித்விகா, பழைய பொருட்களை வாங்கி விற்கும் முதலாளியாக மாரிமுத்து, தினேசின் நண்பராக ரமேஷ் திலக், ஆயுத தரகராக ஜான் விஜய் என படம் முழுக்க உயிரோட்டமான கதாபாத்திரங்கள். கதாபாத்திரங்களுக்கு பொருந்துகிற நடிகர்கள். முனீஷ்காந்தின் நகைச்சுவை படம் முழுவதும் கலகலப்பூட்டுகிறது.

டென்மாவின் இசையில், பாடல்கள் சுகமான ராகங்கள். பின்னணி இசை, காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கிறது. கிஷோர் ஒளிப்பதிவு, சில காட்சிகளில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வசனம், அநேக இடங்களில் கைதட்ட வைக்கிறது.. “இந்த குண்டு இங்கே வெடிக்காது. பாகிஸ்தானில்தான் வெடிக்கும்” என்று தினேஷ் சொல்ல- “இங்கே ஏன் வெடிக்காது?” என்று நண்பர் கேட்க-“ஏன்னா இது நம்ம நாட்டில் செய்தது” என்று தினேஷ் சொல்லும் இடம், ஒரு உதாரணம்.

இப்படி ஒரு பயங்கரமான வெடிகுண்டு, அதை தேடும் போலீசார், காதல், மோதல், கடத்தல் என நிமிடத்துக்கு நிமிடம் படம் பார்ப்பவர்களுக்குள் பதற்றத்தை ஏற்படுத்தி, பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் அதியன் ஆதிரை. ஆரம்ப காட்சிகளில் வேகம் குறைவாக இருந்தாலும், உலக தரத்தில் ஒரு சினிமா பார்த்த திருப்தி.

Next Story