இளம்பெண் மர்ம சாவுகளை விசாரிக்கும் இளம் இன்ஸ்பெக்டராக கதாநாயகன் படம் காளிதாஸ் - விமர்சனம்


இளம்பெண் மர்ம சாவுகளை விசாரிக்கும் இளம் இன்ஸ்பெக்டராக கதாநாயகன் படம் காளிதாஸ் - விமர்சனம்
x
தினத்தந்தி 10 Jan 2020 12:39 PM GMT (Updated: 10 Jan 2020 12:39 PM GMT)

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக பரத்தும், அவருக்கு ஜோடியாக அன்ஷீத்தல் நடிக்கும் ‘காளிதாஸ்’ படத்தின் விமர்சனம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத்தும் ஆன்ஷீத்தலும் கணவன், மனைவி. ஒரு
இளம்பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்ததை பரத் விசாரிக்கிறார். அப்போது இன்னொரு பெண்ணும் மாடியில் இருந்து விழுந்து சாகிறார். இதுபோல் மேலும் ஒரு மரணமும் நடக்க போலீஸ் பரபரப்பாகிறது. உதவி கமிஷனர் சுரேஷ் மேனனும் விசாரணையில் இறங்குகிறார்.

இறந்து போனவர்கள் பிற ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர்கள் என்று தெரிகிறது. கொலையா? தற்கொலையா? என்று தெரியாமல் போலீஸ் குழம்புகிறது. இறுதியில் மர்ம மரணங்களுக்கு பின்னணியில் ஒரு சைக்கோ கொலைகாரன் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இன்னொரு புறம் சதா வேலையில் மூழ்கி கிடக்கும் பரத் மீது மனைவிக்கு வெறுப்பு வருகிறது.

அப்போது பரத் வீட்டின் மாடியில் ஆதவ் கண்ணதாசன் வாடகைக்கு குடியேறுகிறார். அவரது அன்பான பேச்சில் ஆன்ஷீத்தல் ஈர்ப்பாகிறார். கொலையாளி தனது வீட்டில் புகுந்து விட்டதாக அதிர்ந்து பரத் வீட்டுக்கு விரைகிறார். கொலையாளியை கண்டு பிடித்தாரா? என்பது கிளைமாக்ஸ்.

பரத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்துள்ள அழுத்தமான கதை. அதை ஆரவாரமில்லாத இயல்பான நடிப்பால் தூக்கி நிறுத்தி உள்ளார். மர்ம சாவுகளை இளம் இன்ஸ்பெக்டராக இருந்து சாதுர்யமாக விசாரிப்பது, உயர் அதிகாரியின் நிர்ப்பந்தங்களை எதிர்கொள்வது, மனைவியின் தொல்லையால் தவிப்பது என்று உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இது அவருக்கு மைல் கல் படம்.

மனைவியாக வரும் ஆன்ஷீத்தல் அன்பு செலுத்தாத கணவன் மீது வெறுப்பும் ஆதவ் கண்ணதாசன் மீது ஈர்ப்புமாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். உயர் போலீஸ் அதிகாரியாக வரும் சுரேஷ் மேனன் அனுபவ நடிப்பால் கவர்கிறார். ஆதவ் கண்ணதாசன் சாதுர்யமான பேச்சாலும் துறுதுறு நடிப்பாலும் மனதில் நிற்கிறார்.

மனைவியின் உளவியல் பாதிப்பு கணவனுக்கு தெரியாமல் இருப்பது லாஜிக் மீறலாக இருந்தாலும் அதையும் மீறி திகில் பட வரிசையில் சஸ்பென்ஸ், யூகிக்க முடியாத திருப்பங்கள் என்று தனித்துவம் பெற்று படம் நிமிர்ந்து நிற்கிறது. நடிகர்களின் யதார்த்தமான நடிப்பிலும் துல்லியமான திரைக்கதையிலும் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி முதல் படத்திலேயே திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீசெந்தில். கடைசி நேர கிளைமாக்ஸ் காட்சிகளில் கதையின் போக்கையே ஒட்டு மொத்தமாக திருப்பி அதிர வைக்கிறார்.

சுரேஷ் பாலாவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் விஷால் சந்திரசேகரின் மிரட்டலான பின்னணி இசையும் திகில் கதைக்கு உதவி இருக்கிறது.

Next Story