விமர்சனம்
ரசிகர்களை திருப்திபடுத்தி காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் தர்பார் - சினிமா விமர்சனம்

ரசிகர்களை திருப்திபடுத்தி காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் தர்பார் - சினிமா விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா ஏ.ஆர்.முருகதாஸ் அனிருத் சந்தோஷ் சிவன்
போலீஸ் வேடத்தில் ரஜினிகாந்தை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது என்று ஆதங்கப்படுகிற ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் விருந்து. கதையும், வேடமும் அவருக்கு அப்படி பொருந்தி இருக்கிறது. படம் தர்பார் விமர்சனம்.
Chennai
ஜனவரி,

மும்பை போலீஸ் நிலையத்தை தீ வைத்து எரித்து 17 போலீசாரை கொன்ற சம்பவத்தால், மும்பை போலீஸ் மத்தியில் பீதி நிலவுகிறது. பல போலீஸ்காரர்கள் பயந்து வீட்டுக்குள் முடங்குகிறார்கள். இந்த நிலைமையை சரி செய்ய, டெல்லியில் ‘என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட்’ ஆக இருக்கும் ரஜினிகாந்தை மும்பைக்கு கொண்டு வருகிறார்கள்.

மும்பை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்கும் ரஜினிகாந்த் போதை மருந்து மற்றும் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் கும்பல்களை சம்ஹாரம் செய்வதில் தீவிரமாக இருக்கிறார். இந்த குற்றங்களில், ஒரு பெரிய தொழில் அதிபரின் மகனுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து, அவனை கைது செய்கிறார். ஜெயிலில் ஆள் மாறாட்டம் நடக்கிறது. ரஜினிகாந்த் கைது செய்த தொழில் அதிபரின் மகனுக்கு பதில், அவனுடைய பெயரில் வேறு ஒரு ஆசாமி ஜெயிலில் இருக்கிறான்.

ஒரிஜினல் குற்றவாளி போலி பாஸ்போர்ட் மூலம் தாய்லாந்துக்கு பறந்து விடுகிறான். அவனை ரஜினிகாந்த் தந்திரமாக வெளியே வரவழைத்து கொன்று விடுகிறார். தொழில் அதிபரின் மகன் அவருடைய சொந்த மகன் அல்ல என்பதும், அவன் போதை மருந்து கடத்தலில் உலக அளவில் தலைவனாக இருக்கும் சுனில் ஷெட்டியின் மகன் என்பதும் தெரியவருகிறது.

மகனின் வளர்ப்பு தந்தையாக இருந்த தொழில் அதிபரை, சுனில் ஷெட்டி கொடூரமாக கொலை செய்கிறார். ரஜினிகாந்தின் ஒரே மகள் நிவேதா தாமசையும் விபத்தை ஏற்படுத்தி கொன்று விடுகிறார். தன் செல்ல மகளை இழந்த ரஜினிகாந்த் தேடித்தேடி போய் ரவுடிகளையும், தாதாக்களையும் வேட்டையாடுகிறார். உண்மையான கொலைகாரனை அவர் கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பது மீதி கதை.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிக்கு காட்சி ரஜினிகாந்த் வருகிறார். படத்தில் அவர் இல்லாத சீன் எது? என்று வினாடி வினா போட்டி வைக்கலாம். போலீஸ் கமிஷனர் வேடத்தில் அவருடைய ஸ்டைல், கம்பீரம், மிடுக்கு அத்தனையும் ரசிக்க வைக்கிறது. நயன்தாராவுடன் காதல், போதை மருந்து மற்றும் பெண்கள் கடத்தல் கும்பலுடன் மோதல், யோகி பாபுவுடன் காமெடி என கதாநாயகனுக்குரிய கடமைகளை ரசனையுடன் செய்து இருக்கிறார். சண்டை காட்சிகளில், அவருடைய வேகம் பிரமிப்பூட்டுகிறது.

“ஜெயிலுக்குள் செல்போனா?” என்று அவர் கேட்க, காசு இருந்தால் ஷாப்பிங் கூட போகலாம்” என்று சக அதிகாரி சொல்லும் அரசியல் ‘பஞ்ச்’ வசனத்துக்கு தியேட்டரில் கைதட்டுகிறார்கள். ரஜினிகாந்த்-நிவேதா தாமஸ் தொடர்பான அப்பா-மகள் பாச காட்சிகள், கண்கலங்க வைக்கின்றன.

நயன்தாரா, ஊறுகாய் மாதிரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கும், கதைக்கும் எந்த தொடர்பும் இல்லாதது, ஏமாற்றம். ரஜினிகாந்தின் மகளாக நிவேதா தாமஸ், பாசமுள்ள அப்பாக்களை அழவைத்து விடுகிறார். இந்தி பட உலகின் முன்னாள் கதாநாயகன் சுனில் ஷெட்டி வில்லனாக வருகிறார். போதை மருந்து கடத்தல் ஆசாமியாக மிரட்டுகிறார். அவரை விட, அவர் கையில் வைத்திருக்கும் கத்தி பயமுறுத்துகிறது. யோகி பாபு தன்னால் முடிந்த வரை, வசன காமெடி மூலம் சிரிக்க வைக்கிறார்.

அனிருத்தின் பின்னணி இசை, காட்சிகளுக்கு பலம் கூட்டுகிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, காட்சிகளை உயிரோட்டமாக பதிவு செய்து இருக்கிறது. கதை சொன்ன விதத்திலும், காட்சிகளை கடத்தும் விதத்திலும், திறமையான டைரக்டர் என்பதை ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் நிருபித்து இருக்கிறார். போலீஸ் கமிஷனர் ஜெயிலுக்குள் போய் ஒரு கைதியை சுட்டுக்கொல்வது, ‘லாஜிக்’ மீறல். இதுபோன்ற சின்ன சின்ன குறைகளை, காட்சிகளின் பிரமாண்டமும், வேகமான கதையோட்டமும் மறக்க வைத்து விடுகின்றன.

முன்னோட்டம்

பொன்மகள் வந்தாள்

ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.

பதிவு: மே 29, 11:09 PM

மாஸ்டர்

விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 17, 05:33 AM

சக்ரா

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு விஷால் தேர்வு செய்த கதாநாயகி! படம் `சக்ரா' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 13, 12:13 AM
மேலும் முன்னோட்டம்