ஒரு சைக்கோ கொலையாளியும், கண்பார்வையற்ற கதாநாயகனும் - சைக்கோ விமர்சனம்


ஒரு சைக்கோ கொலையாளியும், கண்பார்வையற்ற கதாநாயகனும் - சைக்கோ விமர்சனம்
x
தினத்தந்தி 25 Jan 2020 4:58 PM GMT (Updated: 25 Jan 2020 4:58 PM GMT)

நகரில் திடீர் திடீர் என பெண்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரி நடக்கின்றன. கொலை செய்யப்படும் பெண்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன.

கதையின் கரு:   கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், கண்பார்வையற்றவர். இவருடைய காதலி அதிதிராவும் கடத்தப்படுகிறார். கொலையாளியின் கவனத்தை திருப்பி, அதிதிராவ் உயிர் தப்புகிறார். அவரை இரும்பு சங்கிலியால் அந்த ஆசாமி கட்டிப்போடுகிறான். கொலையாளி யார் என்று தெரியாமல் போலீஸ் திகைக்கிறது. அந்த போலீஸ் படையில், டைரக்டர் ராமும் ஒருவர். அவரும் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை பிடிக்க போலீஸ் படை ஒரு பக்கம் தேடுதல் வேட்டை நடத்த–இன்னொரு பக்கம் உதயநிதி துப்பறிகிறார்.

உதயநிதி தன்னை நெருங்குவதை உணர்ந்த கொலையாளி, அவரை பல வழிகளில் மிரட்டுகிறான். அதற்கெல்லாம் அஞ்சாமல் உதயநிதி தன் காதலியை மீட்பதில் உறுதியாக இருக்கிறார். அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

கண்பார்வையற்ற இளைஞர் வேடத்தில் உதயநிதி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாசனை திரவியத்தை வைத்து காதலியின் வருகையை கண்டுபிடிக்கிறார். பார்வையில்லையே என்று பயப்படாமல் நெடுஞ்சாலையில் வேகமாக கார் ஓட்டுகிறார். பசி, தூக்கம் மறந்து காதலியை தேடி அலைகிறார். ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து கொலையாளியை நெருங்குகிறார். இப்படி படம் முழுக்க உதயநிதிக்கு நிறைய வேலைகள். கவுதமன் என்ற பார்வையற்ற இளைஞராக மனதில் ஆழமாக பதிகிறார்.

அவருடைய காதலி தாஹினியாக அதிதிராவ், அனுதாபத்தை சம்பாதிக்கிறார். படத்தின் முக்கிய திருப்பமாக அமைந்திருக்கிறது, நித்யாமேனன் வேடம். இருட்டு அறைக்குள் அமர்ந்திருக்கும் அவருடைய அறிமுக காட்சி, மிரட்டுகிறது. காரில் உதயநிதி பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ‘‘லெப்ட்...ரைட்...’’ என்று வழிகாட்டும்போது, சிலிர்க்க வைக்கிறார்.

கொலையாளியாக ராஜ்குமார். வழக்கமான பாலியல் வன்முறை, கற்பழிப்பு என்று வில்லத்தனம் எதுவும் செய்யாமல், கடத்தி கொலை செய்யும் குற்றவாளியாக ராஜ்குமார். இதுவே மாறுபட்ட வில்லத்தனமாக இருக்கும் என்று தப்பு கணக்கு போட்டு இருக்கிறார்கள். கொலைகாரனை பார்த்தால் ஒரு பயம் வருமே அது வரவில்லை. நடிப்பிலும் மிரட்டவில்லை. தமாசுக்கு சிங்கம்புலி. இவர் உதயநிதியின் பாதுகாப்பை கருதி, ‘‘உன்னை தனியே விட்டுவிட்டு போக மாட்டேன்’’ என்று சொல்லும் காட்சியில், திறமையான குணச்சித்ர நடிகராக மாறியிருக்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜாவும், ஒளிப்பதிவாளர் தன்வீர்மிர்ரும் படத்தின் மற்ற 2 கதாநாயகர்கள். இளையராஜாவின் பின்னணி இசை, காட்சிகளுக்கு உயிர் கொடுத்து படத்தை தூக்கி நிறுத்துகிறது. இரவு நேர காட்சிகளில், கேமரா பேசியிருக்கிறது. நிசப்தமாக விரிந்து கிடக்கும் நெடுஞ்சாலை கூட பயமுறுத்துகிறது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை திகிலாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் மிஷ்கின். வரிசையாக நடைபெறும் பெண்கள் கடத்தல்களும், கொலைகளும் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலீஸ் நடவடிக்கைகள் வேகம் காட்ட வேண்டாமா? இறுதி காட்சியில், கொலைகாரன் கதாபாத்திரத்தை நியாயப்படுத்தி இருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த பலவீனங்களை மீறி, படம் ஹாலிவுட் தரத்தில் நிமிர்ந்து நிற்பதில், டைரக்டர் மிஷ்கின் உழைப்பு தெரிகிறது.

Next Story