அப்பாவை கொலை செய்தவரை கொல்ல முயற்சிக்கும் மகன் - வானம் கொட்டட்டும்


அப்பாவை கொலை செய்தவரை கொல்ல முயற்சிக்கும் மகன் - வானம் கொட்டட்டும்
x
தினத்தந்தி 8 Feb 2020 4:53 PM GMT (Updated: 2020-02-08T22:23:41+05:30)

தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  கதை சம்பவங்கள் தேனி மாவட்டம் சின்னமனூரில் நடப்பது போல் படம் தொடங்குகிறது. சரத்குமாரின் அண்ணன், பாலாஜி சக்திவேல். இவரை கொல்ல முயற்சித்தவர்களை வெட்டி கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போகிறார், சரத்குமார். இவருடைய மனைவி ராதிகா. கொலைகாரரின் மனைவி என்று ஏளனம் செய்யும் ஊரில் வாழ விரும்பாமல், மகன் விக்ரம் பிரபு, மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் சென்னையில் குடியேறுகிறார். ஒரு அச்சு ஆபீசில் வேலை செய்து மகனையும், மகளையும் வளர்க்கிறார்.

விக்ரம் பிரபு, டிரைவராக வேலை செய்கிறார். பின்னர், கோயம்பேடு மார்க்கெட்டில், வாழைத்தார் வியாபாரம் செய்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சட்ட கல்லூரியில் படிக்கிறார். விக்ரம் பிரபு, வாழ்ந்து கெட்டுப்போன குடும்பத்தை சேர்ந்த மடோனா செபாஸ்டியான் மீது காதல்வசப்படுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், உறவுக்காரரான சாந்தனுவுடன் சுற்றுகிறார்.

இந்த சூழ்நிலையில், சரத்குமார் ஜெயில் தண்டனை முடிந்து வெளியே வருகிறார். ராதிகா போன உயிர் திரும்பி வந்ததாக உணர்கிறார். ஆனால் மகன் விக்ரம் பிரபுவும், மகள் ஐஸ்வர்யா ராஜேசும் அப்பாவை ஏற்க மறுக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவரின் மகன் நந்தா பழிக்குப்பழி வாங்குவதற்காக, சரத்குமாரை பின்தொடர்கிறார். அதன் பின் நடப்பது, உணர்ச்சிகரமான மோதல்களும், போராட்டங்களும்...

விக்ரம் பிரபுவுக்கு அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி ஒரு கதாபாத்திரம். அப்பா மீதான கோபம், தங்கை மீதான பாசம், மடோனா செபாஸ்டியான் மீதான காதல், அடியாட்களையும், கொலைகார கூட்டத்தையும் துவம்சம் செய்கிற ஆக்ரோ‌ஷம் என ஒரு கதாநாயகனுக்கே உரிய கடமைகளை கச்சிதமாக செய்கிறார். சராசரி இளைஞருக்கே உரிய தோற்றம், ஆதங்கம், காதல், மோதல் என சகல ரூட்டிலும் காட்டும் பாய்ச்சல், ரசிக்க வைக்கிறது.

மடோனா செபாஸ்டியான் வாழ்ந்து கெட்டுப்போன பணக்கார குடும்ப பெண் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு. ஐஸ்வர்யா ராஜேசின் கேலி, கிண்டல், அண்ணனை சீண்டி விளையாடுவது ஆகிய காட்சிகளில், உற்சாகமாக தெரிகிறார். அவருடைய காதலராக வரும் சாந்தனுவுக்கு அதிக வேலை இல்லை.

கதையின் முதுகெலும்பு மாதிரி சரத்குமார், ராதிகா சரத்குமாரின் கதாபாத்திரங்கள். அண்ணனை கொலை செய்ய முயன்றவர்களை வெட்டி சாய்க்கும் ஆவேசம், ஜெயிலில் தன்னை பார்க்க வரும் மனைவி ராதிகாவின் முகம் காண துடிக்கும் ஏக்கம், மகனும், மகளும் தன்னை அன்னியமாக பார்ப்பதால் ஏற்படும் வேதனை ஆகிய அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் மிக இயல்பாக காட்டி, கலங்க வைக்கிறார், சரத்குமார். அவருடைய மதுரை தமிழுக்கு கூடுதல் மார்க்.

கொலைகார குடும்பம் என்று பேசப்படுவதை தவிர்ப்பதற்காக குழந்தைகளுடன் சென்னைக்கு பயணம் ஆவதில் ஆரம்பித்து, பிள்ளைகளை கண்ணியமாக வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு மிகுந்த அம்மாவாக–கணவரை ஜெயிலில் பார்த்து கண்கலங்கும் மனைவியாக–ஒரு நடுத்தர குடும்பத்து பெண் கதாபாத்திரத்தில், ராதிகா வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

வில்லன் நந்தாவுக்கு அண்ணன்–தம்பியாக இரட்டை வேடங்கள். அவருடைய நீளமான தலைமுடியும், முக ஒப்பனையும் மிரட்டுகின்றன. பாலாஜி சக்திவேல் பாசமுள்ள அண்ணனாகவும், பெரியப்பாவாகவும் கண்களுக்குள் நிற்கிறார்.

சித் ஸ்ரீராம் இசையில், ‘‘கண்ணு தங்கம்...’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையுடன் ஒன்ற வைக்கிறது, பிரீதா ஜெயராமின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறது..

மடோனா செபாஸ்டியான் கதாபாத்திரமும், அவர் தொடர்பான காட்சிகளும் கதையுடன் ஒட்டவில்லை. இதுதான் படத்தின் ஒரே பலவீனம். வசனம், அநேக இடங்களில் கைதட்டல் பெறுகிறது. கதை சொன்ன விதத்திலும், காட்சிகளை வடிவமைத்த நேர்த்தியிலும், சிறந்த டைரக்டர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார், தனா.

Next Story