சமகாலத்தில் நடந்த-நடந்து கொண்டிருக்கிற ஆணவ கொலையை ரத்தமும், சதையுமாக சொல்கிறது - எட்டுத்திக்கும் பற


சமகாலத்தில் நடந்த-நடந்து கொண்டிருக்கிற ஆணவ கொலையை ரத்தமும், சதையுமாக சொல்கிறது - எட்டுத்திக்கும் பற
x
தினத்தந்தி 10 March 2020 10:35 PM GMT (Updated: 10 March 2020 10:35 PM GMT)

12 மணி நேரத்தில் நடக்கும் கதை. இரவு 12 மணிக்கு தொடங்கும் கதை பகல் 12 மணிக்கு முடிகிறது. படம் "எட்டுத்திக்கும் பற" விமர்சனம்.

சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கலாம் என்று ஊரை விட்டு ஓடிவரும் ஒரு காதல், சாலையோர வாசியாக வாழ்க்கை முடியக்கூடாது. மற்றவர்களைப்போல் அங்கீகரிக்கப்பட்ட சக மனிதனாக வாழ ஆசைப்படும் காதலர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான இருவர், திருமணம் செய்து புது வாழ்க்கையை தொடங்க நினைக்கும் வயதான தம்பதிகள் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.

வாழ ஆசைப்பட்ட காதலர்கள் வாழ்ந்தார்களா, இல்லையா? என்பதை சொல்கிறது, படம்.

ஊரை விட்டு ஓடி வரும் காதலர்களாக சாந்தினி-சாஜுமோன் இருவருமே நிஜ காதலர்களை கண்முன் கொண்டு வருகிறார்கள். சாலையோர வாசியாக நித்திஷ் வீரா-சாவந்திகா. இவர்கள் இரண்டு பேர் தொடர்பான காட்சிகள், வேகமான கதையோட்டத்துக்கு உதவுகின்றன. வயதான தம்பதிகளாக தீக்கதிர் குமரேசன்-நாச்சியாள் சுகந்தி தொடர்பான காட்சிகள், புதுக்கவிதை.

காதலர்களை சேர்த்து வைக்கும் வக்கீல் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. இவர் தொடர்பான காட்சி, அடுத்தது என்ன? என்று எதிர்பார்க்க வைக்கிறது. அவர் மனைவியாக சமிக்‌ஷா நடித்து இருக்கிறார். ஆணவ கொலையை ஆதரிக்கும் ஆண்டவராக முத்துராமன், பதற வைக்கிறார். முனீஸ்காந்த் திருடராக வருகிறார். இவர் தொடர்பான காட்சிகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

சிபின் சிவனின் ஒளிப்பதிவும், எம்.எஸ்.ஸ்ரீகாந்த் பின்னணி இசையும் படத்தை உயர்த்தி பிடிக்கின்றன. கதை-திரைக்கதை-வசனம், டைரக்‌ஷன்: கீரா. காதலின் பல்வேறு கோணத்தை கதை சித்தரிக்கிறது. படத்தின் முதல் பாதியில், மெதுவான கதையோட்டம். அதை இரண்டாம் பாகம் சரி செய்கிறது.

“யானை நடமாடுகிற வழித்தடத்தில் சிலையை வைக்கிறான், சாமியார். அதை தட்டிக்கேட்டால், தீவிரவாதி” போன்ற வசன வரிகள், புரட்சிகரமானவை.

Next Story