ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த புத்திசாலி இளைஞர் விமான நிறுவனம் நடத்த ஆசை - சூரரைப் போற்று விமர்சனம்


ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த புத்திசாலி இளைஞர் விமான நிறுவனம் நடத்த ஆசை - சூரரைப் போற்று விமர்சனம்
x
தினத்தந்தி 13 Nov 2020 8:56 AM GMT (Updated: 13 Nov 2020 10:06 AM GMT)

ஒரு ரூபாய் கட்டணத்தில் தன் சொந்த கிராமத்து மக்களை விமான பயணம் செய்ய வைத்த ஒரு சாமான்யனின் கதை. சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் கரு.

ஒரு குக்கிராமத்தை சேர்ந்த இளைஞர், சூர்யா. அப்பா, ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். அம்மா ஊர்வசி, சராசரியான குடும்ப தலைவி. சூர்யாவும், அபர்ணாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். சொந்தமாக விமான நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது சூர்யாவின் பெரிய கனவு. அதை நிறைவேற்ற அவர் சந்திக்கும் சிக்கல்கள்தான் ஒட்டுமொத்த திரைக்கதை.

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த புத்திசாலி இளைஞர் விமான நிறுவனம் நடத்த ஆசைப்படுவதா? என்று பண முதலைகள் சூழ்ச்சி செய்து, சூர்யாவின் கனவு திட்டத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். அந்த சதிகளை கடந்து சூர்யா எப்படி வெற்றி பெறுகிறார்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

ஒரு விமானம் கட்டாயமாக வேறு ஒரு தளத்தில் தரையிறக்கப்படுவது போல் படம் ஆரம்பிக்கிறது. அதன் பின்னணியில் கதை நகர்கிறது. கிராமத்து சராசரி இளைஞர் நெடுமாறனாக அறிமுகமாகும் சூர்யா, தனது கனவுகளை நிறைவேற்ற ஒவ்வொரு படியாக ஏறி இறங்குவது, அவமரியாதைகளை சந்திப்பது ஆகிய காட்சிகளில் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

அப்பாவின் மரணம், விமான கட்டணத்துக்கு போதுமான பணம் இல்லாமல் சக பயணிகளின் கால்களில் விழுந்து கதறல் என பிற்பகுதி காட்சிகளில், சூர்யா உருக்கத்தின் உச்சத்தை தொடுகிறார். சூர்யா-அபர்ணா முறைப்பும், மோதலும் கலந்த காதல், கதகதப்பாக இருக்கிறது. அபர்ணா, நடிப்புக்கு புதுசு மாதிரி தெரியவில்லை. கிராமத்து பெண் வேடத்துக்கு நூறு சதவீதம் பொருந்துகிறார். ‘பூ’ ராம் அப்பா வேடத்திலும், ஊர்வசி அம்மா வேடத்திலும் கொஞ்சமே வந்தாலும், நெகிழவைக்கிறார்கள். நாயுடுவாக தமிழும், தெலுங்கும் கலந்து பேசும் மோகன்பாபு, கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். இதேபோல் பரேஸ் ரவால் பணக்கார வில்லனாக மிரட்டியிருக்கிறார். கருணாஸ், காளி வெங்கட் இருவரும் நண்பர்களாக குணச்சித்திர வேடத்துக்கு மாறியிருக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாசின் பின்னணி இசை, படத்துக்கு பெரிய பலம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறது.

டைரக்டர் சுதா கொங்கரா கதை சொன்ன விதம், கவிதை. மிக கவனமாக கதை சொல்லியிருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அன்னிய முகம் கொண்ட நடிகர்களும், படப்பிடிப்புக்காக தேர்ந்தெடுத்து இருக்கும் இடங்களும் பாராட்டுக்குரியவை. படத்தின் பெரிய பலவீனம், வேக குறைவு. சூர்யாவின் நடிப்பை போற்றலாம்.

Next Story