விமர்சனம்
” என்ன செய்தால் என்னை அம்மன் என்று நம்புவாய் “ நடுத்தர குடும்பத்து இளைஞரின் ஆசை - மூக்குத்தி அம்மன் விமர்சனம்

” என்ன செய்தால் என்னை அம்மன் என்று நம்புவாய் “ நடுத்தர குடும்பத்து இளைஞரின் ஆசை - மூக்குத்தி அம்மன்  விமர்சனம்
ஆர்.ஜே.பாலாஜி நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜி கிரீஷ் ஜி. தினேஷ் கிருஷ்ணன்
நடுத்தர குடும்பத்து இளைஞரின் ஆசை, படம் மூக்குத்தி அம்மன் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.
Chennai
படத்தின் பெயரிலேயே பக்தி மணக்கிறது. ஒரு ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர், ஆர்.ஜே.பாலாஜி. இவருடைய அம்மா, ஊர்வசி. மூன்று தங்கைகள். அப்பா குடும்ப பாரத்தை சுமக்க பயந்து காணாமல் போகிறார். பாலாஜி, லோக்கல் கேபிள் டி.வி.யில் வேலை பார்த்து குடும்பத்துக்கு தூணாக இருக்கிறார். அவருக்கு 12 பெண்களை பார்த்தும் மணப்பெண் அமையவில்லை.

இதற்கெல்லாம் காரணம், குலதெய்வம் மூக்குத்தி அம்மனை வணங்காததுதான் என்று ஜோதிடம் சொல்ல, பாலாஜி அம்மா, தங்கை சகிதம் நாகர்கோவிலில் உள்ள மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு போகிறார். அங்கே கோவிலும், அம்மன் சிலையும் பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சி அளிப்பதைப் பார்த்து பதறுகிறார்கள். கோவிலையும், சிலையையும் சுத்தம் செய்கிறார்கள்.

பாலாஜி முன்பு அம்மன் தோன்றுகிறாள். நம்ப மறுக்கும் அவரிடம் அம்மன் தன் மகிமைகளை காட்டி, நம்ப வைக்கிறாள். இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் கோவிலை சுற்றியுள்ள 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் ‘பஞ்சவனம்’ என்ற பெயரில், பகவதி பாபா என்ற போலி சாமியார் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார். பாலாஜியையும், குடும்பத்தினரையும் பயன்படுத்தி, அம்மன் எப்படி பகவதி பாபா முகமூடியை கிழித்து கோவில் நிலத்தை மீட்கிறாள்? என்பது, ‘கிளைமாக்ஸ்.’

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியுடன், ‘டைட்டில்’ போட்டு நயன்தாராவை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். அம்மன் வேடத்தில் அவருடைய அறிமுக காட்சி, பிரமிப்பூட்டுகிறது. “என்ன செய்தால் என்னை அம்மன் என்று நம்புவாய்... மழை பெய்ய வைக்கட்டுமா?” என்று சொடக்கு போட்டு மழை பெய்ய வைக்கிறார். குடிசையை கோபுரம் போல் பங்களாவாக உயர வைக்கிறார். பாலாஜியுடன் பஸ் பயணம் செய்கிறார். இதுபோல் நிறைய ‘மேஜிக்’ வேலைகள் செய்து படம் முழுக்க விய(ர்)க்க வைக்கிறார். நயன்தாராவுக்கு அம்மன் வேடம் அழகாகவே இருக்கிறது. கதைநாயகனாக ஆர்.ஜே.பாலாஜி, நடுத்தர குடும்பத்து இளைஞராக கச்சிதம்.

வில்லன் பகவதி பாபாவாக அஜய்கோஷ், மிக சரியான தேர்வு. பக்தி சொற்பொழிவின்போது ஆடுகிறார்... பாடுகிறார்... சில பல சாமியார்களின் ‘சேஷ்டைகளை’ செய்து காட்டி, சிரிக்க வைக்கிறார். பாலாஜிக்கு அம்மாவாக ஊர்வசி. சில இடங்களில் அப்பாவி அம்மாவாகவும், சில இடங்களில் பரிதாபத்துக்குரிய அம்மாவாகவும் பன்முகம் காட்டுகிறார்.

ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு பிரமிப்பை கூட்டுகிறது. ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் ஆகிய இருவரும் இயக்கியிருக்கிறார்கள். ஆரம்ப காட்சிகள் எதிர்பார்ப்பை கூட்டுகின்றன. குறிப்பாக, அம்மன் நேரில் தோன்றும் சீன், சிலிர்க்க வைக்கிறது. அதன்பிறகு கதையில் பெரிய திருப்பங்கள் இல்லாததால், திரைக்கதையில் வேகம் குறைகிறது.

அம்மன் பக்தர்களுக்கு சிறப்பான கொண்டாட்டம்.

முன்னோட்டம்

கால்ஸ்

ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 26, 06:01 AM

குட்டி லவ் ஸ்டோரி

தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: பிப்ரவரி 15, 02:29 AM

ட்ரிப்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: பிப்ரவரி 05, 10:06 PM
மேலும் முன்னோட்டம்