அறுபது வயதை தாண்டிய 7 நண்பர்களை பற்றிய கதை - சியான்கள் விமர்சனம்


அறுபது வயதை தாண்டிய 7 நண்பர்களை பற்றிய கதை - சியான்கள்  விமர்சனம்
x
தினத்தந்தி 25 Dec 2020 11:51 AM GMT (Updated: 25 Dec 2020 11:51 AM GMT)

சர்வதேச பட விழாக்களில் 4 விருதுகளை வென்ற படம். வைகறை பாலன் இயக்கிய ‘சியான்கள்’ படத்தின் விமர்சனம்.

தேனி மாவட்டம் பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி. 7 பேர்களும் அறுபது வயதை தாண்டிய நண்பர்கள். ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த சியான்கள்.

7 பேருக்கும் தனித்தனி ஆசைகள். அதில் நளினிகாந்துக்கு விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று மற்ற நண்பர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.

இந்த நிலையில், மருமகள் கையினால் அடி வாங்கிய அவலம் காரணமாக நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு மகனே விஷ ஊசி போட ஏற்பாடு செய்ததில், துரை சுந்தரம் இறந்து போகிறார்.

2 நண்பர்களை இழந்த சோகத்தில், மற்ற 5 சியான்களும் டி.வி. நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக சென்னை வருகிறார்கள். அப்போது நளினிகாந்த் விபத்தில் சிக்கி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். அவருடைய உயிரை காப்பாற்ற ஒரு டி.வி. நிருபர் உதவுகிறார்.

நளினிகாந்த் உயிர் பிழைத்தாரா, இல்லையா? விமானத்தில் பறக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை நிறைவேறியதா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

வித்தியாசமான கதை. பேய்களையும், தாதாக்களையும் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், மாற்றுப்பாதையில் போய் ஏழை முதியவர்களின் கதையை சொல்லி நெகிழவைத்து இருக்கிறார், டைரக்டர் வைகரை பாலன்.

முதியவர்கள் தொடர்பான வறுமை காட்சிகளுக்கு இடையே டாக்டர் ஜி.கரிகாலன், ரிசா ஹரிதாஸ் ஜோடியின் யதார்த்தமான காதல், ரசிக்க வைக்கிறது. இறுதி காட்சிகளில், அடுத்து நடப்பது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, சுபமங்கலமான முடிவை கொடுத்து இருக்கிறார், இயக்குனர்.

7 சியான்களும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அவர்களில் நளினிகாந்தின் கதையும், நடிப்பும் கலங்க வைக்கிறது. குறிப்பாக கவலைக்கிடமான நிலையில், படுத்த படுக்கையாக கிடக்கும் மனைவிக்கு இவர், ‘தண்டட்டி’ போட்டு விடும் காட்சி, உருக்கம்.

முத்தமிழ் இசையில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் கிராமிய வாசனை. கிராமத்து யதார்த்தங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாபு குமார். திரைக்கதையில் வேகம் போதாது. சியான்கள் தொடர்பான சோகக்காட்சிகளில் இன்னும் அழுத்தம் கூட்டியிருக்கலாம்.

Next Story