கல்லூரி பேராசிரியராக ‘மாஸ்டர்’ வேடத்தில், கதாநாயகன், ரவுடிகளின் தலைவரான வில்லன் நடிப்பில் இன்னொரு நாயகன் - மாஸ்டர் விமர்சனம்


கல்லூரி பேராசிரியராக ‘மாஸ்டர்’ வேடத்தில், கதாநாயகன், ரவுடிகளின் தலைவரான வில்லன் நடிப்பில் இன்னொரு நாயகன் - மாஸ்டர்  விமர்சனம்
x
தினத்தந்தி 13 Jan 2021 11:13 PM GMT (Updated: 13 Jan 2021 11:13 PM GMT)

விஜய்-விஜய் சேதுபதி, கதாநாயகன்-வில்லனாக இணைந்து நடித்த முதல் படம். இருவரும் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்கள். ‘மாஸ்டர்’ படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

கல்லூரி பேராசிரியராக ‘மாஸ்டர்’ வேடத்தில், விஜய். கல்லூரியில் ரவுடிகள் ராஜ்யத்தை ஒழித்த அவர், ரவுடிகளின் தலைவரான விஜய் சேதுபதியின் பிடியில் உள்ள கூர்நோக்கு சீர்திருத்த இல்லத்துக்கு மாற்றப்படுகிறார். அந்த இல்லத்தில் உள்ள சிறுவர்களையும், இளைஞர்களையும் கொலை மற்றும் குற்றங்களில் ஈடுபடுத்தி, விஜய் சேதுபதி தனது அடிமைகளாக வைத்து இருக்கிறார்.

அந்த இல்லத்தின் மாஸ்டராக புதுசாக பொறுப்பு ஏற்கும் விஜய், சிறுவர்களையும், இளைஞர்களையும் திருத்த முயற்சிக்கிறார். விஜய்யின் நண்பர்களையும், நலம் விரும்பிகளையும் கொன்று குவித்து அவருடைய கவனத்தை விஜய் சேதுபதி திசை திருப்பி, எச்சரிக்கை மணி அடிக்கிறார்.

அதற்கு பயப்படாமல் விஜய் சேதுபதியின் ரவுடிகள் சாம்ராஜ்யத்தை கூண்டோடு அழிக்க விஜய் போராடுகிறார். இருவருக்கும் இடையே நடைபெறும் நேரடி மோதல்தான் உச்சக்கட்ட காட்சி.

விஜய்க்கு செம ‘மாஸ்’ ஆன கதாபாத்திரம். தூக்கம் கலையாத முகத்துடன் தலையை ஒருபக்கமாக சாய்த்துக்கொண்டு ஒரு கண்ணை லேசாக மூடியபடி, மெல்ல நடந்து வரும் அவருடைய ஸ்டைல் புதுசு. ஒரே அடியில் எதிரியை வீழ்த்தி பயமுறுத்துவது, வில்லனுக்கு சிம்ம சொப்பனமாக காட்சி தருவது, வழக்கமான அவருடைய ஹீரோ முத்திரைகள்.

பிள்ளைகளை பறிகொடுத்த ஏழைத்தாயின் கதறலைப் பார்த்து கண்கலங்குவதும், அதோடு குடிப்பழக்கத்தை மறப்பதும் சோகமும், சுகமும் கலந்த கவித்துவமான நடிப்பு.

கதாநாயகன் விஜய்க்கு நிகரான வில்லன் விஜய் சேதுபதி. அவருடைய கதாபாத்திரம் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டு இருக்கிறது. விஜய்க்கு பதில் இவர், ‘பஞ்ச்’ வசனம் பேசியிருக்கிறார். ‘‘உனக்கு ரெண்டு நிமிடம் தருகிறேன். என்னை கொன்றுவிட்டு, உன்னை காப்பாற்றிக்கொள்’’ என்று அவர் கூறும்போது, தியேட்டரில் கரகோசம்.

கதாநாயகி மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் ஆகியோருக்கு அதிக வேலை இல்லை. இதேபோல் ஸ்ரீமன், ரம்யா, அழகம்பெருமாள், சஞ்சீவ் ஆகியோரும் ஒரு சீன் அல்லது இரண்டு சீன்களில் தலையை காட்டியிருக்கிறார்கள்.

அனிருத் இசையில் விஜய் பாடுகிற ஆங்கில பாடல், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். பின்னணி இசை மெல்லிசையாக காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் முதல் பாகம், சூப்பர் வேகம். இரண்டாம் பாகத்தில் கருத்து சொல்லும் இடங்களும், நீள வசனங்களும் வேகம் குறைக்கின்றன. விஜய் நடிப்பும், ஜனரஞ்சகமான திரைக்கதையும் படத்தை வேற லெவலுக்கு தூக்கி நிறுத்துகின்றன.

Next Story