தற்போதைய விவசாயிகள் பிரச்சினையை கருவாக கொண்ட படம் பூமி - விமர்சனம்


தற்போதைய விவசாயிகள் பிரச்சினையை கருவாக கொண்ட படம் பூமி - விமர்சனம்
x
தினத்தந்தி 16 Jan 2021 12:14 AM GMT (Updated: 16 Jan 2021 12:14 AM GMT)

சொந்த ஊர் திரும்பும் அவர், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அதையே காரணமாக சொல்லி, அவரை மேலிடம் கண்டிக்கிறது.

பூமி என்கிற பூமிநாதன், ஒரு இளம் விஞ்ஞானி. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழமுடியாது என்று எல்லா விஞ்ஞானிகளும் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பூமிநாதன் மட்டும் அங்கே மனிதர்கள் வாழமுடியும் என்று சொல்கிறார்.

இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பும் அவர், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அதையே காரணமாக சொல்லி, அவரை மேலிடம் கண்டிக்கிறது. பூமிநாதன் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளில் இருந்து விலகி, சொந்த ஊரில் விவசாயம் செய்கிறார். இயற்கை உரத்தை பயன்படுத்துவதுடன், மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாற சொல்கிறார்.

இதனால் ஆணவமான ஒரு கார்பரேட் கம்பெனியின் முதலாளி, ஒரு அமைச்சர் ஆகிய இருவரின் பகையை சம்பாதிக்கிறார். பூமிநாதனுக்கு எதிராக விவசாயிகளையும், இளைஞர்களையும் அந்த 2 வில்லன்களும் திருப்புகிறார்கள். அவர்களின் சதியை பூமிநாதன் எப்படி முறியடித்து கார்பரேட் கம்பெனி முதலாளியை விரட்டியடிக்கிறார்? என்பது, ‘கிளைமாக்ஸ்’.

பூமிநாதனாக ஜெயம் ரவி. மிக சிறந்த விஞ்ஞானியாகவும், சொந்த மண்ணை நேசிக்கும் விவசாயியாகவும் வருகிறார். கடனை திருப்பி கொடுக்க முடியாமல் ஏழை விவசாயி தம்பிராமய்யா தீக்குளிப்பதை பார்த்து உருகும்போதும், கார்பரேட் முதலாளியின் மிரட்டலுக்கு அஞ்சாமல், அவரை விரட்டியடிப்பதாக சபதம் செய்யும்போதும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

சண்டை காட்சிகளில் அவருடைய ஆக்ரோசம், நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கெடுதலுக்கு மேல் கெடுதல் செய்யும் கார்பரேட் முதலாளியை சமாளிக்க முடியாமல் கண்கலங்கும் இடத்தில், உருக வைக்கிறார்.

கதாநாயகி நிதி அகர்வால், வசீகரமான முகம். நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. கார்பரேட் கம்பெனியின் முதலாளியாக ரோனித்ராய், மிரட்டலான தேர்வு. இன்னொரு வில்லனாக, மனசாட்சியே இல்லாமல் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்யும் அமைச்சர் வேடத்தில் ராதாரவி. மிக இயல்பாக நடித்து இருக்கிறார்.

தம்பிராமய்யாவுக்கு உருக்கமான வேடம். கலகலப்புக்கு சதீஷ். ஜெயம் ரவியின் தாயாக சரண்யா, கலெக்டராக ஜான் விஜய் நடித்துள்ளனர்.

டட்லியின் ஒளிப்பதிவும், டி.இமான் இசையும் படத்தின் சிறப்பு அம்சங்கள்.

லட்சுமன் டைரக்டு செய்து இருக்கிறார். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயிகளின் போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறார். உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருக்கிறார். இதற்காக நீளம் நீளமாக வசனம் எழுதியிருக்கிறார். வசன வரிகள் அர்த்தமுள்ளதாக இருந்தாலும், பொறுமையை சோதிக்கிறது. இன்றைய காலகட்டத்துக்கு பொருந்துகிற திரைக்கதையும், ஜெயம் ரவியின் உணர்ச்சிகரமான நடிப்பும் படத்தை ‘தரமான படைப்பு’ வரிசையில் சேர்க்கிறது.

Next Story