சம்மர் ஆஃப் 92 - நவரசா விமர்சனம்


சம்மர் ஆஃப் 92 - நவரசா விமர்சனம்
x
தினத்தந்தி 12 Aug 2021 3:20 PM GMT (Updated: 12 Aug 2021 3:20 PM GMT)

நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். சம்மர் ஆஃப் 92 கதையின் விமர்சனம்.`

படத்தின் கதைப்படி சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருக்கிறார் யோகிபாபு. இவர் படித்த பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள யோகிபாபுவுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதனை ஏற்று ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வருகிறார் யோகிபாபு. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 

அந்த விழாவில் சிறப்புரையாற்றும் யோகிபாபு, தான் பள்ளியில் படித்தபோது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். யோகிபாபுவின் பள்ளிப்பருவ ஆசிரியரான ரம்யா நம்பீசன் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார். அவர் அவ்வாறு இருப்பதற்கும் யோகிபாபுவும் ஒரு காரணம். அது என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் யோகிபாபு, படத்திலும் காமெடி நடிகராக சிறிது நேரம் வந்தாலும், சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. டீச்சராக வரும் ரம்யா நம்பீசன், இளம் வயது மற்றும் வயதான தோற்றம் இரண்டிலும் திறம்பட நடித்து, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். யோகிபாபுவின் சிறுவயது கதாபாத்திரத்தில் வரும் சிறுவன், கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

‘நகைப்பு’ என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். கதைக்கருவுக்கு ஏற்றார் போல் படத்தில் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசையும், வீரஜ் சிங்கின் ஒளிப்பதிவும் கதையுடன் ஒன்றி பயணிக்க வைக்கிறது. 

மொத்தத்தில் ‘சம்மர் ஆஃப் 92’ காமெடி விருந்து.

Next Story