எதிரி - நவரசா விமர்சனம்


எதிரி - நவரசா விமர்சனம்
x
தினத்தந்தி 12 Aug 2021 3:30 PM GMT (Updated: 2021-08-12T21:00:39+05:30)

நவரசா தமிழ் சினிமா பிரபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கும் அந்தாலஜி திரைப்படம். 9 இயக்குனர்கள் இணைந்து 9 வெவ்வேறு பாகங்களாக இயக்கியுள்ளனர். "எதிரி" கதையின் விமர்சனம்.

நடிகர் பிரகாஷ் ராஜும், நடிகை ரேவதியும் கணவன் - மனைவி, இவர்களின் மகனாக அசோக் செல்வன். கருத்து வேறுபாடு காரணமாக ரேவதியும், பிரகாஷ் ராஜும் நீண்ட நாட்களாக பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இருப்பினும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரேவதியின் வீட்டுக்கு வருகிறார்.

அவரை வரவேற்று தனது அறைக்கு அழைத்து செல்கிறார் பிரகாஷ் ராஜ். அவர்கள் இருவரும் உள்ளே சென்ற சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து சத்தம் கேட்கிறது. இதையடுத்து ரேவதி அந்த அறைக்கு சென்று பார்க்கும் போது பிரகாஷ் ராஜ் இறந்து கிடக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி எதற்காக பிரகாஷ் ராஜை கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் சற்று வில்லத்தனமான கதாபாத்திரம் தான். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். அதேபோல் கணவன் மனைவியாக நடித்திருக்கும் ரேவதியும், பிரகாஷ் ராஜும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி வரும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்கின்றனர். அசோக் செல்வன் குறைந்த காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

கருணை உணர்வை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் பிஜாய் நம்பியார். நடிகர்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு. திரைக்கதையில் சற்று வேகத்தை கூட்டி இருக்கலாம். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி உள்ளது. ஹர்ஷ்வீர் சிங் ஓப்ராய்யின் ஒளிப்பதிவு கச்சிதம்.

மொத்தத்தில் ‘எதிரி’ வேகமில்லை.

Next Story