நட்பும்... துரோகமும் - நடுவன் விமர்சனம்


நட்பும்... துரோகமும் - நடுவன் விமர்சனம்
x
தினத்தந்தி 26 Sep 2021 3:41 PM GMT (Updated: 26 Sep 2021 3:41 PM GMT)

ஷாரங் இயக்கத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நடுவன்’ படத்தின் விமர்சனம்.

கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியும், அவளுடன் கள்ளக்காதல் வைத்திருக்கும் நண்பனும்...இதுதான் படத்தின் ஒரு வரி கதை.

பரத், ஒரு தொழில் அதிபர். அழகான மனைவி, அன்பான குட்டி மகள், தொழிற்சாலையை நிர்வகிக்கும் பொறுப்பில் நண்பன் என சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், பரத்தின் நெருங்கிய உறவினரின் மகன் அந்த தொழிற்சாலையில் வேலைக்கு சேருகிறான். அவன் கள்ளக்காதல் ஜோடி நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறான். அதை அவன் பரத்திடமும் சொல்லி விடுகிறான். பரத் என்ன செய்தார்? என்பது, மீதி கதை.

பரத் திறமையான நடிகர் என்பதை பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார். இந்த படத்தில் பொறுப்பு மிகுந்த ஒரு தொழில் அதிபராக - கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். வேலைப்பளுவில் மனைவியை மறந்தவராக, பாசமுள்ள அப்பாவாக, துரோகத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் கணவராக, படம் முழுக்க தனது கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் உயிரூட்டி இருக்கிறார்.

பரத்தின் நண்பராக வரும் கோகுல் ஆனந்த், மனைவியாக வரும் அபர்ணா வினோத், போலீஸ் அதிகாரியாக வரும் யோகி ஜேபி ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.

தரண்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வருடிக் கொடுக்கின்றன. ஒளிப்பதிவாளர் யுவா கொடைக்கானல் பசுமையை படம் பிடித்தவிதம், அழகு.

கதாநாயகனின் மனைவிக்கும், நண்பனுக்கும் இடையே கள்ளக்காதல் என்ற ஆபாசமான கருவை வைத்துக்கொண்டு விரசம் இல்லாத திரைக்கதையாக்கி இருக்கிறார், டைரக்டர் சாரங். பரத்துக்கும், அவருடைய நண்பருக்கும் இடையேயான உறவு முறையை இன்னும் தெளிவாக காட்டியிருக்கலாம்.

கள்ளக்காதல் விவகாரம் பரத்துக்கு எப்போது தெரியவரும்? என்ற எதிர்பார்ப்பை படம் பார்ப்பவர்களுக்குள் அதிகப்படுத்திக் கொண்டே போனதில், டைரக்டர் வெற்றி பெற்று இருக்கிறார்.


Next Story