குடும்ப பாசம் - ‘ராஜவம்சம்’ சினிமா விமர்சனம்


குடும்ப பாசம் - ‘ராஜவம்சம்’ சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 30 Nov 2021 9:36 AM GMT (Updated: 30 Nov 2021 9:36 AM GMT)

ஒரு கூட்டு குடும்பத்தையும், ஐ.டி. நிறுவனத்தையும் இணைத்து கதை சொல்லியிருக்கிறார்கள்.

விஜயகுமாரும், சுமித்ராவும், ஒரு கூட்டு குடும்பத்தின் தலைவர்-தலைவி. இவர்களின் அண்ணன்-தம்பிகள், பேரன்-பேத்திகள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள். அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு எதிரானது ராதாரவி குடும்பம்.

விஜயகுமார்-சுமித்ரா தம்பதியின் மகன் சசிகுமார். ஒரு ஐ.டி. நிறுவனத்தில், ‘டீம் லீடர்’ ஆக இருக்கிறார். அவருடைய முதலாளி ஜெயப்பிரகாஷ். 54-வது இடத்தில் இருந்த இவர்களின் நிறுவனம் படிப்படியாக முன்னேறி 4-வது இடத்தை பிடிக்கிறது. ஜெயப்பிரகாஷ் மீது மற்ற ஐ.டி. நிறுவன முதலாளிகள் பொறாமைப்பட்டு அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

இந்தநிலையில் சசிகுமார், இன்னொரு டீம் லீடராக இருக்கும் நிக்கி கல்ராணியை தன் குடும்பத்தினர் முன்பு தனது காதலியாக நடிக்கும்படி கேட்கிறார். அதற்கு நிக்கியும் சம்மதிக்கிறார்.

இந்த காதல் நடிப்பு நிஜமானதா, இல்லையா? கொலை முயற்சியில் இருந்து ஜெயப்பிரகாஷ் தப்பினாரா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு படத்தின் பின்பகுதியில் விடை இருக்கிறது.

ஐ.டி. நிறுவன ஊழியராகவும், கூட்டு குடும்பத்தின் பாசமான மகனாகவும், சசிகுமார் ஒரு கதாநாயகனுக்கு உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார். சண்டை காட்சிகளில் பொறி பறக்கிறது. அம்மா சுமித்ரா மீதான பாசமிகு காட்சிகளில், நெகிழவைக்கிறார்.

நிக்கி கல்ராணி, ஐ.டி. ஊழியராக பொருந்துகிறார். தான் யார்? என்பதை சசிகுமாரிடம் ஆக்ரோஷமாக சொல்லும்போது, உணர்ச்சிவசப்பட்டும் நடிக்க தெரியும் என்பதை நிரூபிக்கிறார். ராதாரவி, விஜயகுமார், தம்பிராமய்யா, சதீஷ், மனோபாலா, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, யோகி பாபு, ராஜ்கபூர், கும்கி அஸ்வின், சாம்ஸ், ரேகா, சுமித்ரா, நிரோஷா என படத்தில் பெரும் நட்சத்திர கூட்டமே இருக்கிறது.

ஒளிப்பதிவு: சித்தார்த். பொள்ளாச்சியின் பசுமையை காட்டும் இடங்கள், கண்களுக்கு விருந்து. சாம் சி.எஸ்.சின் இசையில் பாடல்கள், பரவாயில்லை ரகம். கதிர்வேலு டைரக்டு செய்திருக்கிறார். ஐ.டி. நிறுவன கதையை பெரிய குடும்ப கதைக்குள் ஏன் செருக வேண்டும்? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி, ஒரு குடும்ப கதையம்சம் உள்ள படத்தை பார்த்த திருப்தி.


Next Story