பிண அரசியலை கூராய்வு செய்யும் நல்முயற்சி - ‘ஆன்டி இண்டியன்’ சினிமா விமர்சனம்


பிண அரசியலை கூராய்வு செய்யும் நல்முயற்சி - ‘ஆன்டி இண்டியன்’ சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 12 Dec 2021 9:22 AM GMT (Updated: 12 Dec 2021 9:22 AM GMT)

மரணம் அடைந்த ஒரு மனிதனின் உடலை எங்கே புதைப்பது? என்பது தொடர்பாக மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் மோதிக்கொள்கிறார்கள். அதன் முடிவு என்ன? என்பது பரபரப்பான ‘கிளைமாக்ஸ்.’

பாட்ஷா என்பவர் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார்? என்பது மர்மமாக இருக்கிறது. பாட்ஷாவின் உடலை அடக்கம் செய்ய பள்ளிவாசலுக்கு கொண்டு செல்கிறார்கள். பாட்ஷா இஸ்லாமிய சடங்குகள் எதுவும் செய்து கொள்ளாதவர், அதனால் அவருடைய உடலை இங்கே புதைக்க கூடாது என்று சில இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனால் பாட்ஷாவின் உடலை இந்துக்களுக்கான சுடுகாட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு பாட்ஷா ஒரு இஸ்லாமியர் என்று கூறி, அடக்கம் செய்ய அனுமதிக்க மறுக்கிறார்கள்.

இரண்டு மதங்களை சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டு மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. இதை சுட்டிக்காட்டி, பாட்ஷாவின் தாயாரின் பெயர் லூர்துமேரி என்பதையும் சொல்லி, நாங்கள் அடக்கம் செய்கிறோம் என்று ஒரு கிறிஸ்தவ பாதிரியார் முன்வருகிறார். அதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

போலீஸ் அமைதி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறது. மூன்று மதங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் அமைதி கூட்டத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். அந்த கூட்டத்தில் சமரச முடிவுகள் எதுவும் எடுத்துவிடாதபடி, ரவுடிகள் கலவரம் செய்கிறார்கள். தீவைப்பு மற்றும் வன்முறை நடக்கிறது.பாட்ஷாவின் உடல் என்ன ஆகிறது? என்பது படத்தின் முடிவு.

ராதாரவி, முதல்வராக வருகிறார். கதாநாயகன், கதாநாயகி, டூயட் எதுவும் இல்லாத வேறு மாதிரியான படம். கதைதான் கதாநாயகன் கதாபாத்திரங்கள்தான் கதாநாயகி என நம்பி இயக்கியிருப்பதுடன் பிணமாக நடித்தும் இருக்கிறார், இளமாறன். ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு அது தொடர்பாக விறுவிறுப்பாக கதை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. கானா பாடல், நடனம் ஆகியவை ‘ஓவர் டோஸ்.’ அவைகளை தவிர்த்து இருக்கலாம்.

வசனம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. 2 இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறது.


Next Story