மனசுல பெரியவன் மதுரைக்காரன் : ‘மதுரை மணிக்குறவர்' சினிமா விமர்சனம்


மனசுல பெரியவன் மதுரைக்காரன் : ‘மதுரை மணிக்குறவர் சினிமா விமர்சனம்
x
தினத்தந்தி 6 Jan 2022 1:04 PM GMT (Updated: 6 Jan 2022 1:04 PM GMT)

மதுரை மணிக்குறவர் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக கொண்டது.ஹரிக்குமாரின் இரட்டை வேடத்தில், ராஜரிஷி இயக்கியுள்ள படம் "மதுரை மணிக்குறவன்".

கதாநாயகன் ஹரிகுமார், மதுரை மார்க்கெட்டில் வட்டி தொழில் நடத்தி வருகிறார். அவருக்கும், எம்.எல்.ஏ. சுமனுக்கும் மோதல் இருந்து வருகிறது. குளத்தை ஏலம் எடுத்த வகையில், மோதல் முற்றுகிறது.

தனது மாமன் மகளை திருமணம் செய்ய தயாராகிறார், ஹரிகுமார். சுமனின் சூழ்ச்சி காரணமாக ஹரிகுமாரால் மாமன் மகளை திருமணம் செய்ய முடியவில்லை. அவருக்கும், மாதவி லதாவுக்கும் திருமணம் நடக்கிறது.

இந்த நிலையில், ஹரிகுமார் குத்தி கொலை செய்யப்படுகிறார். அவரைப் போலவே உருவ ஒற்றுமை உள்ள ஒருவர் அந்த பகுதிக்கு போலீஸ் அதிகாரியாக வருகிறார். கொலை செய்யப்பட்ட ஹரிகுமாருக்கும், போலீஸ் அதிகாரிக்கும் உள்ள உறவை விவரித்து, வில்லன்களை அந்த போலீஸ் அதிகாரி எப்படி பழிவாங்குகிறார்? என்பது கதை.

படம் ஆரம்பத்தில் இருந்தே பாடல்கள், சண்டை காட்சிகள் என்று மிதமான வேகத்தில் கடந்து போகின்றன. கதாநாயகன் ஹரிகுமார் அதிரடி சண்டை காட்சிகளில் வேகம் காட்டுகிறார். கதாநாயகி மாதவி லதா, கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

ராதாரவி, சுமன் இருவரின் நடிப்பும் அவர்களின் அனுபவத்தை காட்டுகிறது. வில்லன்கள் சரவணன், காளையப்பன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே.சுந்தர், கஞ்சா கருப்பு, கவுசல்யா ஆகியோரும் கதாபாத்திரங்களாக பளிச்.

மதுரை நகரை அழகாக படம்பிடித்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் டி.சங்கர். ‘‘கல்யாணம் செஞ்சு வச்ச மீனாட்சிக்கு, ’’ ‘‘மணிகள் குலுங்குதே மவுனம் கலையுதே’’ பாடலும் இளையராஜா பெயர் சொல்கின்றன.

கே.ராஜரிசி டைரக்டு செய்து இருக்கிறார். கதையில் புதுசாக எதுவும் இல்லை. நிறைய நட்சத்திரங்களை வைத்து குழப்பம் இல்லாமல் சீராக கதை சொன்ன விதம், பாராட்டுக்குரியது.


Next Story